கனம் கோர்ட்டார் அவர்களே…

பள்ளி படிப்பை முடித்த மாணவ – மாணவியர்கள், இளநிலை பட்ட படிப்பை முடித்துவிட்டு முதுநிலை பட்ட படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளப்போகும் மாணவர்கள் அடுத்ததாக “என்ன படிக்கலாம் / எங்கு படிக்கலாம்” என்ற தேடலில் இருப்பார்கள். அவர்களது தேடலைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, இப்பகுதியில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் அட்மிஷன் குறித்த தகவல்கள், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி குறித்த விவரங்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தொகுத்து தரவிருக்கிறோம்.

சிறந்த படிப்பை தேர்வு செய்து வாழ்வில் வெற்றி பெற உங்கள் அத்தனைப் பேருக்கும் மைண்ட் வாய்ஸின் மனப்பூர்வமான வாழ்த்துகள்.

சட்ட படிப்பு

அறிவியலும், தொழில்நுட்பமும் எவ்வளவோ வளர்ந்துவிட்டன. உலகமும் அதனால் ஒரு சின்னஞ்சிறு கிராமம்போல சுருங்கிவிட்டது. இருந்தாலும் நம்மவர்களுக்கு தொழில் படிப்பு என்றால் “டாக்டர், இன்ஜினியர், வழக்கறிஞர்” என்ற வரிசைதான் நினைவுக்கு வருகிறது. என்னதான் நூற்றுக்கணக்கான படிப்புகள் புதுசு புதுசாக வந்திருந்தாலும் இந்த மூன்று படிப்புகளுக்கான மவுசு இன்னமும் குறையவில்லை. இந்த படிப்புகளைப் படித்தவர்கள் அரசு, தனியார் வேலை பெற வாய்ப்புண்டு என்பதோடு மட்டுமல்லாமல் சுய தொழில் செய்தும் வருவாய் ஈட்ட முடியும் என்பதே இதற்கான காரணம்.

அந்த வகையில் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட விரும்பும் இளைய தலைமுறையினர், தம் பிள்ளைகளுக்கு கருப்பு அங்கி அணிவித்து அழகு பார்க்க விரும்பும் பெற்றோர்களுக்காக சட்டப்படிப்புகள் குறித்து விரிவாக இப்பகுதியில் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புகள்

முன்பெல்லாம் ஒரு மாணவர் பட்டதாரியான பிறகுதான் மூன்று ஆண்டு பி.எல்., படிப்பு படிக்க முடியும்.அதற்காக ஏதாவது ஒரு இளங்கலை / இளம் அறிவியல் / தொழில்நுட்பப் படிப்பை படிக்க வேண்டியதாக இருந்தது. இப்போது அந்த கூடுதல் சுமை இல்லை. பிளஸ்டூ முடித்த உடனேயே 5 ஆண்டு பி.ஏ.,எல்.எல்.பி., படிப்பில் மாணவர்கள் சேரலாம். இளங்கலைப் பட்டப்படிப்பு பாடங்களுடன் சட்டமும் இணைந்து கற்றுக்கொடுக்கப்படும் படிப்பு இது. எனவே தனியாக ஒரு இளங்கலைப் படிப்பு தேவையில்லை. இப்போது 5 ஆண்டு பி.ஏ.,எல்.எல்.பி., பி.பி.ஏ.,எல்.எல்.பி., பி.காம்.,எல்.எல்.பி., பி.சி.ஏ.,எல்.எல்.பி., படிப்புகள் வந்துவிட்டன என்பதால் தங்களுக்குப் பிடித்த படிப்பில் மாணவர்கள் சேரலாம்.பெற்றோரும் குறிப்பிட்ட 5 ஆண்டு படிப்பில்தான் சேர வேண்டும் என்று பிள்ளைகளை வற்புறுத்த வேண்டிய அவசியம் இல்லை.

3 ஆண்டு எல்.எல்.பி.,

எந்த இளநிலைப் பட்டம் பெற்றவரும் (கவின்கலைப் பட்டம் தவிர) இப்படிப்பில் சேர முடியும். முழுக்க முழுக்க சட்டம் மட்டுமே இப்படிப்பில் கற்றுத்தரப்படும் என்பதால் வேறு பாடங்களைப் படிக்க வேண்டிய அவசியம் ஏதும் இருக்காது.

எங்கு படிக்கலாம்

அகில இந்திய பார் கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற எந்தக் கல்லூரியிலும் மேலே கண்ட படிப்புகளைப் படிக்கலாம். அங்கீகாரம் இருக்கிறதா என்பதை பார் கவுன்சிலின் இணைய தளத்தில் சென்று பார்த்து தெரிந்துகொள்ளலாம். வெளிநாடுகளில் உள்ள பிரபல சட்டக் கல்வி நிறுவனங்கள் பலவற்றுடன் பார் கவுன்சில் ஒப்பந்தம் செய்திருக்கிறது. அங்கு படித்தவர்கள் இந்தியாவில் பார் கவுன்சில் நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்தால் இந்தியாவில் வழக்கறிஞர் தொழில் செய்ய முடியும்.

எப்படி

தமிழகத்தில் அரசு சட்டக் கல்லூரிகளில் சேர நுழைவுத் தேர்வு ஏதுமில்லை. 5 வருட B.A.,L.L.B., B.B.A.,L.L.B., B.Com.,L.L.B., B.C.A.,L.L.B., படிப்புகளில் சேர SC/ST பிரிவினர் 60 சதவிகித மதிப்பெண்களும்,இதர பிரிவினர் 70 சதவிகித மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.5 வருட B.A.,L.L.B., படிப்பில் சேர SC/ST பிரிவினர் 40 சதவிகித மதிப்பெண்களும், இதர பிரிவினர் 45 சதவிகித மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். பிளஸ்டூ மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையிலேயே சேர்க்கை நடத்தப்படும். சில ஆயிரம் ரூபாய் அளவுக்கே கட்டணம் இருப்பது குறிப்பிட வேண்டிய அம்சம். தனியார் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் சேர நுழைவுத் தேர்வுகளை அந்தந்த நிர்வாகங்கள் நடத்துகின்றன.

வாய்ப்பு

5 ஆண்டு படிப்பாக இருந்தாலும் சரி, 3 ஆண்டு படிப்பாக இருந்தாலும் சரி பட்டம் பெற்ற பிறகு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் தற்காலிக உரிமம் பெற்று வழக்கறிஞர் தொழில் செய்யலாம். இரண்டு ஆண்டுகளுக்குள் அகில இந்திய பார் கவுன்சில் நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் அது நிரந்தரத் தகுதி. இல்லாவிட்டால் தற்காலிக உரிமமும் ரத்தாகி விடும். வழக்கறிஞர் தொழில் செய்ய முடியாது. இது தவிர அரசு, தனியார் நிறுவனங்களில் சட்ட ஆலோசகர், மனித வள அதிகாரி முதலிய பணிகளிலும் சேரும் வாய்ப்பு சட்டப்பட்டதாரிகளுக்கு உண்டு. வங்கிகள், பொதுத் துறை நிறுவனங்களிலும் இவர்களுக்கு வாய்ப்புண்டு.

சொந்தத் தொழில் வாய்ப்பும், பிரகாசமான வேலை வாய்ப்பும் உள்ள வழக்கறிஞர் தொழிலில் ஈடுபடும் கனவுடன் உங்கள் பிள்ளை இருந்தால் தாராளமாக அவர்களை ஊக்குவிக்கலாம்.