2020-ம் ஆண்டு அப்போதைய அதிமுக ஆட்சியில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு அவசரத் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தை எதிர்த்து பல்வேறு ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு, தலைமை நீதிபதிகள் சஞ்சீவ் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கின் இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘ஆன்லைன் ரம்மியைத் தடை செய்வதற்கான போதிய காரணங்கள் இல்லை’ என்று கூறி ஆன்லைன் சூதாட்டச் தடைச் சட்டத்தை ரத்து செய்தனர்.
அதனையடுத்து, மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்துக்கு எதிராக அவசரச் சட்டம் கொண்டுவந்தது. அதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். அதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரில் ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசரச் சட்டத்துக்கு மாற்றாக, அக்டோபர் 19-ம் தேதி சட்ட மசோதாவை சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தாக்கல் செய்தார். அந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அந்த மசோதா குறித்த விளக்கங்களை ஆளுநர் கோரிய நிலையில், தமிழக அரசு விளக்கம் அளித்தது.
ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் டிசம்பர் 2-ம் தேதி சட்டஅமைச்சர் ரகுபதி ஆளுநரைச் சந்தித்து மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தினார். இதற்கிடையே ஆளுநர் ஆன்லைன் சூதாட்ட நிறுவன பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினார். இது விமர்சனத்துக்கு உள்ளானது. ஆன்லைன் சூதாட்ட மசோதாவை நிறைவேற்ற தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி மார்ச் 6-ம் தேதி மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார்.
மார்ச் 23-ம் தேதி அந்த மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பப்பட்டது. அந்த மசோதாவுக்கு நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். மூன்று நாட்களுக்கு முன்னதாக ஒப்புதல் அளிக்கப்பட்டதாக ஆளுநர் மாளிகையில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.