GST வரிவிதிப்பால் 140 கோடி இந்தியர்களின் வாழ்க்கை மேம்பட்டுள்ளது - பிரதமர் மோடி பெருமிதம்!

ழு ஆண்டுகள் GST வரிவிதிப்பு முறையானது, 140 கோடி இந்தியர்களின் வாழ்க்கையை மேம்படுத்தி உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (CBIC) தரவுகளின்படி, GST அமலாக்கத்திற்குப் பிறகு, மாவு, அழகுசாதனப் பொருட்கள், தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி போன்ற பெரும்பாலான வீட்டு உபயோகப் பொருட்களின் விலை குறைந்திருப்பதாக பத்திரிகை ஒன்று நேற்று (ஜூன் 23) செய்தி வெளியிட்டிருந்தது. GST வரி விதிப்பு முறை 2017, ஜூலை 1-ம் தேதி அமலுக்கு வந்த நிலையில் சுமார் 7 ஆண்டுகளில் பல்வேறு பொருட்களின் விலைகள் குறைந்திருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை தனது எக்ஸ் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் மோடி, ‘எங்களைப் பொறுத்தவரை, சீர்திருத்தங்கள் 140 கோடி இந்தியர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான ஒரு வழியாகும். GST அமலுக்குப் பிறகு, வீட்டு உபயோகப் பொருட்கள் மிகவும் மலிவாகிவிட்டன. இதன் மூலம் ஏழை மற்றும் எளிய மக்களுக்கு கணிசமான சேமிப்பு ஏற்பட்டுள்ளது. மக்களின் வாழ்க்கையை மாற்றியமைப்பதற்கான இந்த சீர்திருத்தப் பயணத்தைத் தொடர நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்’ என குறிப்பிட்டுள்ளார்.

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (CBIC) தரவுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், GSTக்கு முன் (உலர்) மாவுக்கு 3.5% வரி இருந்ததாகவும், தற்போது அதற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், அழகுசாதனப் பொருட்களுக்கு முன்பு இருந்த 28% வரி தற்போது 18% ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும், தேனுக்கு முன்பு இருந்த 6% வரிக்கு தற்போது விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், மொபைல் போன்களுக்கு 31.3% ஆக இருந்த வரி தற்போது 18% ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி போன்ற மின் சாதனப் பொருட்களுக்கு முன்பு 31.3% வரி விதிக்கப்பட்டதாகவும், GSTயில் அது 18% ஆக குறைக்கப்பட்டு உள்ளதாகவும், தேங்காய் எண்ணெய், சோப், டூத் பேஸ்ட் ஆகியவற்றுக்கு முன்பு 27% வரி விதிக்கப்பட்ட நிலையில் அது தற்போது 18% ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும், எல்பிஜி ஸ்டவ்-க்கு முன்பு 21% வரி இருந்த நிலையில் தற்போது அது 18% ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே விவரங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரானும் தனது எக்ஸ் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.