அதிகாலை முதலே தினந்தோறும் பல லட்சோப லட்சம் பக்தர்களுக்கு தரிசனம் தந்துக் கொண்டிருக்கிறார் எம்பெருமான் திருவேங்கடமுடையான். நாளுக்கு நாள் மக்கள் கூட்டத்தால் சேஷாத்ரி மலை நிரம்பிக் கொண்டிருக்க, பலரும் அறியாத செய்தியினை இப்பதிவில் நாம் தெரிந்துக் கொள்ளலாம். தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளை தீர்த்து வைக்கும் அந்த திருமலையானை தரிசிக்கும் முன்னர் நாம் ஒருவரை தரிசித்து ஆசி பெற வேண்டும் என்று சொல்லப்படுகிறது.அவர் யார். திருவேங்கடமுடையானை விடவும் பெரியவரா?…. அவர்தான் வராக மூர்த்தி!
இந்தக் கலியுகத்தில், தனது பக்தர்களை துன்பங்களில் இருந்து காப்பதற்காக திருமலையில், இப்போது வேங்கடவன் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் இடத்தில் முதலில் எழுந்தருளியவர் தான் இந்த வராக மூர்த்தி.
வராக மூர்த்தியின் புராண வரலாறு ஒருமுறை சனகாதி முனிவர்கள், திருமாலை தரிசிப்பதற்காக வைகுண்டம் சென்றனர். அப்போது பகவான் நாராயணன், மகாலட்சுமி தேவியுடன் ஏகாந்தமாக இருந்த காரணத்தினால், துவாரபாலகர்கள் முனிவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்தனர்.இதனால் சினம் கொண்ட முனிவர்கள், அவர்கள் இருவரையும் பூமியில் போய் பிறக்குமாறு சபித்துவிட்டனர்.
முனிவர்களை வரவேற்பதற்காக வாயிலுக்கு வந்த பரந்தாமனிடம், துவாரபாலகர்கள் தாங்கள் பெற்ற சாபத்தை கூறி முறையிட்டனர். பகவான், “முனிவர்கள் கொடுத்த சாபத்தை என்னால் மாற்ற முடியாது. நீங்கள் பல பிறவிகள் நல்லவர்களாகப் பிறந்து முடிவில் என்னை அடைகிறீர்களா அல்லது மூன்று பிறவிகள் கொடிய அரக்கர்களாகப் பிறந்து, என்னால் வதம் செய்யப்பட்டு என்னை அடைகிறீர்களா?” என்று கேட்டார். துவாரபாலகர்கள், “உங்களை விட்டு நீண்ட காலம் எங்களால் பிரிந்திருக்க முடியாது. நாங்கள் கொடிய அசுரர்களாகப் பிறந்து மூன்று பிறவிகள் முடிந்ததும் தங்களிடம் வரவே விரும்புகிறோம்” என்றனர்.பகவானும் அப்படியே வரம் கொடுத்தார்.
சாபம் பெற்ற துவாரபாலகர்கள் எடுத்த முதல் பிறவிதான் இரண்யாட்சன் மற்றும் இரண்யகசிபு என்னும் இரண்டு அசுரர்கள். இவர்களில் இரண்யாட்சனை வதம் செய்ய தோன்றிய அவதாரம்தான் வராக அவதாரம். மிகவும் கொடிய செயல்களை புரிந்து வந்த இரண்யாட்சகன் பூமியை கவர்ந்து சென்று ஓர் இடத்தில் மறைத்து விட்டான். அப்போது பூமிதேவியின் வேண்டுதலுக்கு செவி சாய்த்து,பகவான் வராக மூர்த்தியாக அவதரித்து, இரண்யாட்சகனைக் கொன்று, பூமியை மீட்டார்.
அப்போது, பிரம்மன், உள்ளிட்ட இந்திராதி தேவர்கள், வராக சுவாமியைப் பார்த்து, “கலியுகத்தில் பக்தர்களை காப்பதற்காக, நீங்கள் எப்போதுமே வராகமூர்த்தியாக இருந்து அருள்பாலிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொள்ள பகவானும் வராக மூர்த்தியாக சேஷாத்ரி மலையில் எழுந்தருளினார். கலியுகத்தில் யசோதை வகுளாதேவியாக அவதாரம் எடுத்து, சேஷாத்திரியில் உள்ள வராக மூர்த்தியின் ஆசிரமத்தில் தன்னுடைய காலத்தை கழித்து வரலானாள். வராகமூர்த்தியின் கருணையால், வகுளாதேவி அவரது சிறந்த பக்தையாக திகழ்ந்து பகவானுக்கு சேவைகள் செய்து வந்தார்.
அதே நேரம் மகாலட்சுமியைப் பிரிந்த நாராயணனும் அவரைத் தேடி அலைந்து, சேஷாத்திரி மலைக்கு வந்து சேர்ந்தார். வராகமூர்த்திக்கு , நாராயணன் யார் என்பது தெரிந்தது. நாராயணனிடம் பூலோகம் வந்த காரணத்தைக் கேட்டறிந்தார் வராகமூர்த்தி. மஹாலட்சுமியை பிரிந்து,அவரைக் காணாமல் தான் அல்லல்படுவதாக கூறிய நாராயணன், அவளில்லாமல் தன்னால் வாழ முடியவில்லை என்று வருந்தினார். தங்குவதற்கு தனக்கு இடமில்லை என்பதால்,சேஷாத்ரி மலையில் சில காலம் தங்க வராக மூர்த்தி இடமளிக்க வேண்டும்” என்று வேண்டினார்.
இதைக்கேட்ட வராகமூர்த்தி, “நீங்கள் கூறுவது மிகவும் பொருத்தமாக இருக்கிறது. ஆனால், உங்களுக்கு நான் இலவசமாக இடம் தர முடியாது. பணம் கொடுத்தால் உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முடியும்” என்றார்.
அதற்கு நாராயணன் , “தாங்கள் பெரியவர்! எல்லாம் அறிந்தவர் தாங்கள்! லக்ஷ்மியைப் பிரிந்த நான் ஏழையாகிவிட்டேன். இந்நிலையில் உங்களுக்கு எப்படி நான் பணம் கொடுக்க முடியும்? தயை கூர்ந்து நீங்கள் எனக்கு இடமளிக்க வேண்டும். இதற்குக் கைம்மாறாக, என் பக்தர்களை இந்த மலைக்கு வருமாறு செய்வேன். அவர்கள் முதலில் உங்களை தரிசித்து உங்களுக்கு நைவேத்யம், காணிக்கை செலுத்திவிட்டு, அதன் பிறகே என்னை தரிசிக்க வரட்டும்.” என்றார்.
இதனால் திருப்பதி திருமலைக்கு செல்பவர்கள், வேங்கடவனை தரிசிப்பதற்கு முன்பு வராக மூர்த்தியை தரிசித்து வழிபடுவது வழக்கமாகிவிட்டது. தீராத வினையெல்லாம் தீர்த்து வைக்கும் அந்த வேங்கடமுடையானை தரிசிக்கும் முன் நாமும் வராக மூர்த்தியை தரிசித்து அவர் அருள் பெறுவோம்.