சென்னை : வருகின்ற 19ந் தேதி முதல் தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும், தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், 19ந் தேதி தென் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், 20 மற்றும் 21ந் தேதிகளில் தென் மாவட்டங்களுடன் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும், 22ந் தேதி புதுச்சேரி முதல் திருவள்ளூர் வரை உள்ள கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.