சிறிய டீஸர்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிட்டு இத்தனை நாட்களாக வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டி வந்த Citroen நிறுவனம், ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமாகியிருக்கும் தங்களது கூபே அடிப்படையிலான SUV Basalt காரின் சிறப்பம்சங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் C3, eC3, C3 Aircross மற்றும் C5 Aircross உள்ளிட்ட குறிப்பிடத்தக்க தயாரிப்புகளை அறிமுகப்படுத்திய நிலையில், ஐந்தாவதாக இந்த காரை அறிமுகப்படுத்தப் போகிறது Citroen நிறுவனம்.
Basalt காரின் அறிமுக தேதியை இதுவரை அறிவிக்காமல் உள்ளது Citroen. மேலும் இந்தக் காரின் விலை பற்றிய தகவல்கள் கூட ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த மாத இறுதியில் கார் அறிமுகத்தை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம். காரின் ஆரம்ப விலை ரூ.10 லட்சம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் Basalt SUV கார் கூடிய விரைவில் அறிமுகமாகப் போகும் Tata Curvv காருக்கு சிறந்த போட்டியாளராக இருக்கும்.
ப்ளாட்ஃபார்ம் மற்றும் வடிவமைப்பு:
C3 மற்றும் C3 Aircross கார்களில் உள்ள அதே தளத்தை பயன்படுத்தி தான் Basalt காரும் உருவாக்கப்பட்டுள்ளது என்ற தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன. ஒரே மாதிரியான ஹெட்லைட் செட்டப், ஸ்பிலிட் DRL, பார்ப்பவர்களை ஈர்க்கும் வகையிலான போனெட் மற்றும் முன்பக்கத்தில் குரோம் ஃபினிஷில் செய்யப்பட்ட Citreon லோகோ போன்றவை சிக்னேச்சர் ஸ்டைலை வலியுறுத்துகின்றன.
ஒட்டுமொத்தமாக காரின் வடிவமைப்பைப் பற்றி பேசுகையில், இந்த மாடலுக்கும் C3 Aircross காருக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் காணப்படுகின்றன. எனினும், மற்ற மாடல்களில் இருந்து தனித்து தெரியும் வகையில் வேறுபட்ட அணுகுமுறையைப் பின்பற்றி வருகிறது Citroen நிறுவனம். காரின் மேற்கூரை கூபே வடிவத்தில் உள்ளதால், இந்த வரிசையிலேயே மிகவும் அழகியல் தோற்றமளிக்கிறது.
சிறப்பம்சங்கள்:
அறிமுகமாகவுள்ள மாடலில் ஸ்டைலான டூயல்-டோன் அலாய் வீல்கள் உள்ளன. காரின் பக்கவாட்டில், அதன் ஒட்டுமொத்த அழகை மேம்படுத்தும் வகையிலான உறைப்பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது.
காரின் பின்புறத்தை பொறுத்தவரை, C3 ஏர்கிராஸ் காரை பிரதிபலிக்கும் வகையில் சுற்றிலும் LED டெயில் லைட், கூடுதல் பாதுகாப்பிற்காக பிளாக்-அவுட் பம்பர் மற்றும் சில்வர் ஃபினிஷ் ஸ்கிட் பிளேட் ஆகியவை உள்ளன.
காரின் கேபினுள்ளே பார்த்தோமென்றால், 7 இன்ச் முழுமையான டிஜிட்டல் கிளஸ்டர் மற்றும் பெரிய 10.2-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. அதுமட்டுமின்றி வயர்லெஸ் கார் கனெக்ட் தொழில்நுட்பமான வயர்லெஸ் ஆண்ட்ராய்டு, ஆப்பிள் மற்றும் ஆட்டோ கார்பிளே ஆகியவற்றையும் இந்த கார் சப்போர்ட் செய்கிறது.
புதிதாக அறிமுகமாகும் Basalt காரில், 1.2-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் மற்றும் 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் உள்ளது. முந்தையது அதிகபட்சமாக 80 bhp பவரையும் 115 Nm இழுவிசையும், பிந்தையது 108 bhp பவரையும் 205 Nm இழுவிசையும் கொண்டுள்ளது.