ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் திவ்யா (ஸ்ரீகௌரி ப்ரியா) கடற்கரையோரம் அமர்ந்து, தான் அருணை (மணிகண்டன்) காதலிப்பது குறித்து சகாக்களிடம் கூறுவதுடன் ‘லவ்வர்’ படம் துவங்கியிருக்கிறது. அருணை முதல் முறையாக சந்தித்ததை பற்றி பேசும்போது திவ்யா முகத்தில் அப்படியொரு சந்தோஷம்.
திவ்யாவும், அருணும் எப்படி நெருக்கமாகிறார்கள் என்பதை அழகாக காட்டியிருக்கிறார் இயக்குநர். திவ்யா பேசிக் கொண்டிருக்கும்போதே ஒரு போன் அழைப்பு வருகிறது. அருண் தான் அழைக்கிறார். ஆனால் செல்போனில் அருணின் பெயரை பார்த்ததும் திவ்யா முகத்தில் இருந்த ஸ்மைல் காணாமல் போய்விடுகிறது.
போன் அழைப்பை எடுக்கத் தயங்குகிறார் திவ்யா. பின்னர் ஒருவழியாக போனை எடுத்து தான் ஒரு விழாவில் இருப்பதாக அருணிடம் பொய் சொல்கிறார்.
அதை நம்பாமல் அருண் கேள்வி கேட்கிறார். தன் தோழி ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்துவிட்டு தான் அருண் கேள்வி கேட்பதை உணர்கிறார் திவ்யா. திவ்யாவின் அபார்ட்மென்ட்டுக்கு வந்து சண்டை போடுகிறார் அருண். அருணிடம் கெஞ்சுகிறார் திவ்யா. பின்னர் அவர் குடிப்பதை கண்டிக்கிறார். உறவை முறித்துக்கொள்வேன் என மிரட்டுகிறார் திவ்யா. அருண் கோபத்தில் கத்துகிறார், திட்டுகிறார். இறுதியில் இருவரும் சாரி சொல்லி சமாதானம் ஆகிவிடுகிறார்கள்.
இந்த காட்சியின் மாறுபட்ட காட்சிகள் தான் படம் முழுக்க உள்ளது. சண்டை போடுவது, மது அருந்துவது, மிரட்டுவது, எச்சரிப்பது, மன்னிப்பு கேட்பது, மீண்டும் சேர்வது. இது தான் மீண்டும் மீண்டும் நடக்கிறது. சுயமாக இருக்க விரும்பும் ஒரு இளம் பெண், பொசசிவாக இருக்கும் ஒரு ஆணால் ஒன்றாக இருக்க முடியுமா? ஒருவர் மீது மற்றொருவருக்கு அக்கறை உள்ளது. ஆனால் இந்த உறவு நிலைக்குமா?
பில்ட்அப் எதுவும் கொடுக்காமல் படத்தை எடுத்திருக்கிறார் பிரபு ராம் வியாஸ். ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் கேமரா மூலம் படம் பார்க்க பிரமிப்பாக உள்ளது. ஷான் ரோல்டனின் இசை படத்திற்கு பெரிய பலம். மணிகண்டனும், ஸ்ரீகௌரிப்ரியாவும் போட்டி போட்டுக் கொண்டு சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
20களில் இருப்பவர்களின் மைண்ட்செட்டை படத்தில் அழகாக காட்டியிருக்கிறார்கள். அதை திவ்யாவிடம் காண முடிகிறது. அருணை சின்சியராக காதலித்தாலும் தன் தனித்துவம் போய்விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் திவ்யா. அதை திவ்யாவின் தோழிகளிடமும் பார்க்க முடிகிறது. திவ்யாவை பாதுகாக்க நினைத்தாலும் எந்த ஒரு முடிவையும் அவர் சுயமாக எடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
அதை திவ்யாவின் புது டீம்மேட்டான மதனிடம் பார்க்க முடிகிறது. காதலர்களுக்கு இடையே சிக்கிக் கொள்கிறார் மதன் (கண்ணா ரவி). அதை அருணிடமும் பார்க்க முடிகிறது. தன் தவறுகளை உணர்ந்து திருந்த நினைக்கிறார் அருண். அருணின் பெற்றோர் சரவணன் மற்றும் கீதா கைலாசத்தை காட்டும்போது இளசுகள் மட்டும் அல்ல பெரியவர்களும் ரிலேஷன்ஷிப் பிரச்சனைகளை கையாள்வதில் திணறுவது தெரிகிறது.
படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. இரண்டாம் பாதி சிறிது நேரம் மெதுவாக செல்கிறது. ஆனால் அதிலும் சுவாரஸ்யமான காட்சிகள் நிறைய இருக்கிறது. லவ்வர் நிச்சயம் உங்களை கவர்வார்.