தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி பன்முகம் கொண்ட நடிகராக இருந்து வருகிறார். ஹீரோ மட்டுமின்றி வில்லன், துணை கதாபாத்திரம் என எதுவாக இருந்தாலும் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள முதல் ஹிந்தி படம் மேரி கிறிஸ்துமஸ் ஆகும். ‘அந்தாதூன்’ போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இந்த படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கத்ரீனா கைஃப் இந்த படத்தில் நடித்துள்ளார். மேலும் ராதிகா, ராதிகா ஆப்தே, சண்முகராஜன் ஆகியோர் மேரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகியுள்ளது. படத்தின் டிரைலர் வந்ததிலிருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது.
ஏழு வருடம் சிறையில் இருந்த பிறகு விஜய் சேதுபதி மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு மீண்டும் வருகிறார். அன்றைய தினம் கிறிஸ்துமஸ் என்பதால் அருகில் உள்ள பாருக்கு செல்கிறார். அங்கு கத்ரீனா கைஃப் தனது குழந்தையுடன் உள்ளார். இவர்கள் இருவரும் அன்று இரவு டேட்டிங் செய்கின்றனர். கத்ரீனா கைஃப் அவரது வீட்டிற்கு விஜய் சேதுபதியை அழைத்து செல்கிறார், அங்கு அவரது கணவர் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். அவரை யார் கொன்றது? உண்மையில் விஜய் சேதுபதி யார்? என்பதை சுற்றி கதை சுவாரசியமாக நகர்கிறது.
ஆல்பர்ட் என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி கச்சிதமாக பொருந்தி உள்ளார். வழக்கம்போல தனது எதார்த்த நடிப்பிலும், டயலாக் டெலிவரிலும் அசத்தியுள்ளார். படத்தில் அவருக்கு பெரிதாக வசனங்கள் இல்லை என்றாலும் தனது முக பாவனைகள் மூலமே ரசிகர்களை ஈர்த்துள்ளார். மரியா என்ற கதாபாத்திரத்தில் கத்ரீனா கைஃப் இதுவரை அவர் நடிக்காத ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வழக்கமாக ஸ்ரீராம் ராகவன் படத்தில் வரும் பெண் சாயலில் மரியா கதாபாத்திரமும் இருந்தது. படத்தில் தனது குழந்தைக்காக அவர் செய்யும் காரியங்கள் நன்றாக வடிவமைக்கப்பட்டிருந்தது. மேலும் விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் இருவருக்கும் இடையே அனைத்து கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி உள்ளது. இது படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
ஸ்ரீராம் ராகவன் படத்திற்கு ரசிகர்கள் என்ன எதிர்பார்த்து வருவார்களோ அதனை கணக்கசிதமாக கொடுத்துள்ளார். எதிர்பார்க்காத நேரத்தில் வரும் ட்விஸ்ட் மற்றும் கதையோடு ஒட்டி போகும் காமெடிகள் என அனைத்தையும் சிறப்பாக கொடுத்துள்ளார். முதல் பாதி கதையை சொல்லி முடிக்க நேரம் எடுத்துக் கொண்டாலும் இரண்டாம் பாதியில் சுவாரசியமாக செல்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி ஒட்டுமொத்த படத்தை தாங்கி பிடிக்கிறது. படத்தில் சில லாஜிக் மிஸ்டேக்குகள் இருந்தாலும் அதனை திரைக்கதையில் சரி செய்துள்ளார் இயக்குனர். ப்ரீதம் சக்ரவர்த்தி இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை நன்றாக இருந்தது. மது நீலகண்டன் ஒளிப்பதிவு மற்றும் பூஜா லதா சுர்தியின் எடிட்டிங் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. மேரி கிறிஸ்துமஸ் நிச்சயம் இனிப்பாக இருக்கும்.