கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக ஏராளமான கோப்பைகளை வென்றுக் கொடுத்த தோனி சினிமா தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். அவரது தயாரிப்பில் முதல் படமாக உருவாகியுள்ள எல்ஜிஎம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். LGM என்ற Let’s Get Married திரைப்படத்தின் முழுமையான விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.
ஹரிஷ் கல்யாணும் இவானாவும் இரண்டு வருட அக்ரிமெண்ட் போட்டு பழகிய பின்னர் காதலிக்கத் தொடங்குகின்றனர். ஹரிஷ் கல்யாணுக்கு விரைவில் திருமண நடக்கவேண்டும் என கோயில் குளமாக சுற்றிவருகிறார் அவரது அம்மா நதியா. இறுதியாக ஹரிஷ் கல்யாண், இவானா காதல் இருவீட்டாருக்கும் தெரியவர அவர்களுக்கு திருமணம் செய்துவைக்க முடிவு எடுக்கின்றனர்.
ஆனால், இவானா போடும் திடீர் கண்டிஷனால் திருமணம் வேண்டாம் என அவரை விலகிச் செல்கிறார் ஹரிஷ் கல்யாண். ஆனால், மீண்டும் இவானா திருமணத்துக்கு ஓக்கே சொல்ல, அதற்கு முன்பாக இருகுடும்பத்தாரும் கூர்க் பகுதிக்கு சுற்றுலா செல்கின்றனர். அந்த சுற்றுலா எதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது என நதியாவுக்கு தெரியவர, அதன்பின்னர் என்ன ஆனது என்பது தான் மீதிக் கதை. நதியாவின் முடிவு என்ன… ஹரிஷ் கல்யாண், இவானா திருமணம் நடந்ததா… அவர்களின் பிரச்சினை முடிவுக்கு வந்ததா என இரண்டரை மணிநேரத்துக்கு கதை சொல்கிறார் இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி.
கிரிக்கெட் வீரர் தோனி தயாரிக்கும் முதல் படம் என்பதால், எல்ஜிஎம் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. அதேநேரம் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியான போதே, எல்ஜிஎம் லவ் ஜானர் மூவி தான் என தெரிந்தது. இருந்தாலும் படத்தில் அந்த எதிர்பார்ப்புகள் முழுமை அடையவில்லை என்பதே உண்மை. நட்பாக பழகிய பின்னர் காதலிப்பதை கூட ஏற்றுக்கொள்ளலாம் ஆனால், முன்பின் தெரியாத மாமியாருடன் சேர்ந்து வாழ முடியாது என, அவருடன் பழகிப் பார்க்க வேண்டும் என இவானா சொல்வதெல்லாம் ரொம்பவே டூமச்-ஆக உள்ளது. நதியா கணவர் இல்லாமல் சிங்கிள் மதராக வாழ்ந்து ஹீரோவை வளர்க்கிறார்.
அதனை புரிந்துகொள்ளாத ஹரிஷ் கல்யாண், ஒரு சீனில் “நல்லவேளை அப்பா தப்பிச்சார்” என நதியாவை பார்த்து வசனம் பேசும் போது, திரைக்கதை புதிய கோணத்தில் நகரப் போகிறது என எதிர்பார்க்க வைக்கிறது.
நதியாவின் சிங்கிள் மதர் துயரத்தை இவானா ஒரு பெண்ணாக புரிந்துகொண்டு மனம் மாறுவதாக இருக்கும் என எதிர்பார்த்தால், இருவருமாக சேர்ந்து கோவா சென்று சாப்பாடு, ஷாப்பிங், பப் என கூத்தடிக்கின்றனர். சரி! அங்கேயாவது இருவருக்கும் இடையே நல்ல உரையாடல்கள் அமையும், கதையின் போக்கை மாற்றும் எனப் பார்த்தால் அதற்கும் சுத்தமாக இடமில்லை.
பப்புக்கு சென்று சரக்கடித்துவிட்டு ஆட்டம் போடுவது, ராத்திரியில் கோயிலை தேடி அலைவது, ஆசிரமம் சென்று சாமியாருடன் ஆட்டம் போடுவது, பின்னர் நடு சாமத்தில் குதிரை வண்டியில் போக ஆசைப்படுவது என எல்கேஜி குழந்தைகள் போல கிரிஞ்ச்த்தனமாக அட்ராசிட்டி செய்கின்றனர். அதிலும் இறுதிக் காட்சியில் புலியிடம் மாட்டிக் கொண்டு அங்கிருந்து தப்பிப்பதெல்லாம் கார்ட்டூன் சேனல் காமெடிகள்.
யோகி பாபு, ஆர்ஜே விஜய், இன்ஸ்டாகிராம் ‘விக்கல்ஸ்’ ரீல்ஸ் பிரபலங்கள் ஆகியோரை வைத்துக்கொண்டு கிச்சுகிச்சு மூட்ட நினைத்துள்ளார் இயக்குநர். அங்கேயும் கூட வசனங்கள் பெரிதாக எடுபடாமல் போக, யோகி பாபு, ஆர்ஜே விஜய் இருவரின் ரியாக்ஷன்ஸ் மட்டும் தான் தலை வலி தைலம் அளவிற்கு ஆறுதல் தருகிறது. இதனைத் தவிர, கதை, திரைக்கதை, வசனம், காதல், ரொமான்ஸ், பாடல்கள், பின்னணி இசை என இதர வகையாறக்களை சல்லடைப் போட்டு தான் தேட வேண்டும்.
காதல் ஜானர் பட ஹீரோக்களுக்காகவே குத்தகைக்கு எடுக்கப்பட்ட ‘கெளதம்’ என்ற கேரக்டரில் ஹரிஷ் கல்யாண். 2கே கிட்ஸ்களுக்கான சாக்லெட் ஹீரோவாக வந்துபோகும் அளவிற்கு அவருக்கான ஸ்பேஸ் இருக்கிறது. மீரா என்ற கேரக்டரில் இவானா, அவருக்கு நல்ல அறிமுகம் கொடுத்த ‘லவ் டுடே’ படத்தின் மிச்ச நடிப்பை எல்ஜிஎம்-ல் கொடுத்துள்ளார். நதியாவையும் அவரது கேரக்டரையும் சரியாக பயன்படுத்தவே இல்லை.
யோகி பாபு கேரக்டர் கதைக்கு தேவையே இல்லாத ஒன்று தான் என்றாலும், அவரது காமெடியாவது கை கொடுக்கும் என நம்பியிருப்பார் இயக்குநர். அதிலும் கூட பெரிதாக எந்த பலனும் இல்லை. எல்ஜிஎம் படமே ஒரு ஷார்ட் பிலிம்க்கான கதைதான் என்பதால், இரண்டரை மணிநேரம் ரன்னிங் டைம் என்பது கொட்டாவியை வரவைக்கிறது. படத்தில் ஹரிஷ் கல்யாண் தனது காதல் கதையை எல்லோரிடமும் சொல்லி மொக்கை வாங்கிக் கொள்வார். “இதெல்லாம் ஒரு கதையா” என வரும் அந்த வசனம் எல்ஜிஎம் படத்துக்காக இயக்குநரே எழுதிக் கொண்டதாக தெரிகிறது.
சிங்கிள் மதர், மாமியார் – மருமகள் உறவு என வலிமையான கதைக்கரு இருந்தும், அடித்து ஆட முடியாமல் நெட் பிராக்டீஸ் செய்த திருப்தியோடு படத்தை எடுத்து வைத்துள்ளனர். எல்ஜிஎம் தோனியின் தயாரிப்பு என்பதால் டி20 போல இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்கள், டென்னிஸ் பால் மேட்ச் பார்க்கும் அனுபவத்துடன் மட்டுமே திரும்ப வேண்டியிருக்கும். மொத்தத்தில் LGM என்ற Let’s Get Married – Let’s Get Escaped ஃபீலிங்குடன் முடிந்துள்ளது.