இயக்குநர் மிஷ்கின் இசையில் ‘டெவில்’ படம் எப்படி இருக்கு?

பெரியோர்கள் பார்த்து விதார்த்துக்கும், பூர்ணாவுக்கும் திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆனால் கணவன், மனைவி இடையே பாசம் இல்லை. பூர்ணா நெருங்க முயன்றாலும் தள்ளித் தள்ளிப் போகிறார் விதார்த்.
கணவரின் அன்பு கிடைக்காத சோகத்தில் இருக்கும் பூர்ணா சாலை விபத்தில் திரிகுனை சந்திக்கிறார். அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறுகிறது. இதற்கிடையே விதார்த்துக்கு சுபஸ்ரீ மீது காதல் ஏற்படுகிறது.

காதலியுடன் இருக்கும்போது மனைவியிடம் சிக்கிவிடுகிறார் விதார்த். அதே போன்று பூர்ணாவும், திரிகுனும் விதார்த்திடம் சிக்கிவிடுகிறார்கள். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை. விதார்த், பூர்ணா, திரிகுன், சுபஸ்ரீ ஆகிய நான்கு பேரை வைத்தே கதை நகர்கிறது. முதல் பாதியில் பூர்ணா, திரிகுன் காட்சிகள் நம்மை கவர்கிறது. ஆனால் இரண்டாம் பாதி அந்த அளவுக்கு சுவாரஸ்யமாக இல்லை. நடிப்பில் அசத்தியிருக்கிறார் விதார்த். ஹீரோயினுக்கு நல்ல ஸ்கோப் உள்ள படம் ‘டெவில்’. அந்த வாய்ப்பை பயன்படுத்தி நடிப்பாலும், அழகாலும் ரசிகர்களை தன்னை பற்றி பேச வைத்துவிட்டார் பூர்ணா. திரிகுன், சுபஸ்ரீ ஆகியோரின் நடிப்பையும் பாராட்டியே ஆக வேண்டும்.

மிஷ்கினின் இசை படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் கார்த்திக் முத்துகுமாருக்கு ஹாட்ஸ் ஆஃப். ஒளிப்பதிவில் குறை சொல்ல முடியாத அளவுக்கு சிறப்பாக செயல்பட்டுள்ளார். ‘டெவில்’ படத்தின் மைனஸ் இல்லாமல் இல்லை. ஒரு ஜானரோடு நிறுத்திக் கொள்ளாமல் த்ரில்லர், டிராமா, ஹாரர் ஜானர்களின் கலவையாக வந்திருப்பது படத்திற்கு கை கொடுக்கவில்லை.

படத்தின் முதல் பாதி ஒரு ஜானரிலும், இரண்டாம் பாதி இரண்டு ஜானரிலும் வருகிறது. தியேட்டருக்கு வருபவர்களுக்கு அதிர்ச்சி உணர்வை ஏற்படுத்த வேண்டுமே என்பதற்காக சில காட்சிகள் திணிக்கப்பட்டுள்ளது.
பிரச்சனை உள்ள ஆண்கள், அவர்களுக்கு தாயாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படும் பெண்களின் கதை தான் ‘டெவில்’. படத்திற்கு பெரிய பலமாக இருக்கிறார் பூர்ணா. அவர் என்ன தான் சிறப்பாக நடித்திருந்தாலும் மொத்த படத்தையும் அவரால் காப்பாற்ற முடியவில்லை.