விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' படம் எப்படி இருக்கு..!

சென்னை: தமிழ்ப்படம் மற்றும் தமிழ்ப்படம் 2 படங்களை இயக்கி ரசிகர்களை சிரிக்க வைத்த சி.எஸ்.
அமுதன் சீரியஸாக ரசிகர்களை சிந்திக்க வைக்கும் நோக்கில் ஒரு த்ரில்லர் கதையை உருவாக்கி உள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனி, மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் என பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் இன்று வெளியானது. ஸ்க்ரிப்ட் வைஸ் சி.எஸ். அமுதன் பிரமாதமான கதை மற்றும் திரைக்கதையை உருவாக்கி இருந்தாலும், காட்சி ரீதியாக திரையில் அது அப்படியே பிரதிபலித்ததா? இல்லையா? என்கிற கேள்விக்கான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

பத்திரிகை நிறுவனத்தில் புகுந்து எடிட்டரை ஒருவர் கொன்று விடுகிறார். தனது மகனின் மறைவை பார்த்து அதிர்ச்சியாகும் நிழல்கள் ரவி இந்த கிரைமை சரியாக விசாரிக்க ரஞ்சித்தை (விஜய் ஆண்டனி) அழைக்கிறார். ஏற்கனவே அந்த பத்திரிகையில் எடிட்டராக இருந்த ரஞ்சித் தனது நண்பனின் கொலைக்கு காரணமானவர்கள் யார்? ஏன் ஒரு பத்திரிகையை நடத்தும் எடிட்டரை கொன்றனர் என்பதை விசாரிக்கும் புலனாய்வு கதை தான் இந்த ரத்தம்.

பல ரிசர்ச்களை செய்து இயக்குநர் சி.எஸ். அமுதன் தமிழ் சினிமாவுக்கு புதுமையான கதையை கொடுக்க முயற்சித்து இருக்கிறார். ஏற்கனவே சில வெப்சீரிஸ்களில் ட்ரோல் மற்றும் நெகட்டிவிட்டியை பரப்ப ஒரு டீம் எப்படி செயல்படுகிறது என்பதை காட்டி உள்ளனர். நெகட்டிவ் விமர்சனங்கள் கொடுக்கும் விமர்சகர்களை ரசிகர்களை தூண்டிவிட்டு கொலை செய்யும் அளவுக்கு கிரைம் உண்மையிலேயே நடக்கிறதா? என்கிற கேள்வியும் எழத்தான் செய்கிறது. கதைப்படி அதுவும் ஓகே தான் என்றாலும் காட்சி அமைப்பில் சி.எஸ். அமுதன் கோட்டை விட்டது தான் இந்த படத்திற்கு வேகத்தடையாக மாறியுள்ளது.

சிஎஸ் அமுதனின் திரைக்கதை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. விஜய் ஆண்டனி வழக்கமான தனது நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். மஹிமா நம்பியார், ரம்யா நம்பீசனின் நடிப்பு மிரட்டுகிறது. நந்திதா ஸ்வேதா கொடுத்த வேலையை செய்திருக்கிறார். வித்தியாசமான முயற்சியாகவும் இளைஞர்களை சோஷியல் மீடியா எப்படி தவறான வழிகளில் நடத்துகிறது போன்ற விஷயங்கள் படத்திற்கு பலமாக உள்ளது.

ஆனால், முதல் 20 நிமிட ஸ்லோவான திரைக்கதை மற்றும் பல இடங்களில் நம்ப முடியாத காட்சிகள், விஜய் ஆண்டனி பெரிதும் நடிப்பில் மெனக்கெடாமல் நடித்திருப்பது, பின்னணி இசை, அந்த ப்ளூ கலர் டோன் என பல விஷயங்கள் படத்திற்கு மைனஸ் ஆக உள்ளது. படத்தின் கிளைமேக்ஸ் காட்சியும் பலமாக கனெக்ட் ஆகவில்லை.
வித்தியாசமான முயற்சி படங்களை பார்க்கும் ரசிகர்களுக்கு ரத்தம் ஒருமுறை பார்க்கக் கூடிய படமாக இருக்கும், ஆனால், அனைத்து ரசிகர்களையும் கவரும் படமாக இருக்குமா? என்பது சந்தேகம் தான்.