ஆடி அமாவாசையில் எப்படி வழிபட வேண்டும்?

ஆண்டின் பிற அமாவாசை நாட்களில் முன்னோர் வழிபாட்டை கடைப்பிடிக்க இயலாதவர்கள், ஆடிமாத அமாவாசையன்று கட்டாயம் முன்னோர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
முன்னோர் வழிபாடு, பன்னெடுங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழிபாட்டு முறையாகும். நாம் வணங்கி வழிபடும் தெய்வத்தை பார்க்க முடிவதில்லை. ஆனால் நம்மை பெற்றவர்களையும் அவர்களைப் பெற்ற நமது தாத்தா-பாட்டிகளான முன்னோர்களையும் பார்த்திருப்போம். இப்படி உறவாலும் உதிரத்தாலும் நம்மோடு சம்பந்தப்பட்ட, அவர்களது அனுபவங்களை ஆதாரமாகக் கொண்டு வாழ்வதற்கு நன்றி கூறுவதே முன்னோர் வழிபாடாகும். இந்த வழிபாட்டுக்குரிய நாளே, அமாவாசை. ஒரு வருடத்தில் பன்னிரண்டு மாதங்களிலும் அமாவாசை வருகிறது. பொதுவாக ஒவ்வொரு அமாவாசை அன்றும் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அமாவாசை நாளில் நமது முன்னோர்களை நினைத்து புண்ணிய நதிகளில் நீராடி, திதி, தர்ப்பணம் கொடுப்பதாலும், அவர்கள் நினைவாக ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குவதாலும் முன்னோர்களை வழிபட்ட பலனைப் பெறலாம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இப்படி திதி, தர்ப்பணம் கொடுப்பதால், அவரவர் செய்த பாவங்கள் நீங்குவதுடன், அன்னதானம் செய்வதன் மூலம் புண்ணியமும் வந்து சேருகிறது.

ஆடி முதல் மார்கழி மாதம் வரையிலான காலத்தை ‘தட்சிணாயன புண்ணிய காலம்’ என்றும், தை முதல் ஆனி வரையிலான காலத்தை ‘உத்ராயண புண்ணிய காலம்’ என்றும் கூறுவர். தட்சிணாயனம் தொடங்கும் ஆடி மாத பிறப்பின் முன் 16 நாழிகையும், உத்ராயணம் தொடங்கும் தை மாத பிறப்பின் பின் 16 நாழிகைகளும் உத்தமமான புண்ணிய காலங்களாகும். எனவேதான் தட்சணாயன புண்ணியகாலம் தொடங்கும் ஆடி மாத அமாவாசையும், உத்ராயண புண்ணிய காலம் தொடங்கும் தை மாத அமாவாசையும், மற்ற அமாவாசைகளை முன்னோர் வழிபாட்டிற்கு சிறந்ததாக உள்ளது. புரட்டாசி மாதத்தில் வரும் மகாளயபட்ச அமாவாசையும் புண்ணிய தினமே. இந்த மூன்று அமாவாசை தினங்களிலும் அவசியம் முன்னோர்களுக்கு, திதி தர்ப்பணம் போன்றவைகளை கொடுக்கவேண்டும்.

பூமியில் பிறந்தவர்கள் பாவ புண்ணியத்தில் இருந்து தப்பமுடியாது. பாவங்களில் பெரிய பாவமாக கூறப்படுவது பித்ரு கர்மாவை நிறைவேற்றாமல் இருப்பதுதான். முன்னோருக்குச் செய்கிற ஆராதனை, நம்மையும், நம் சந்ததியையும் இனிதே வாழ வைக்கும் என்கிறது கருடபுராணம். ஆண்டின் பிற அமாவாசை நாட்களில் முன்னோர் வழிபாட்டை கடைப்பிடிக்க இயலாதவர்கள், ஆடிமாத அமாவாசையன்று கட்டாயம் முன்னோர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். ஆறுகள், கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி திதி, தர்ப்பணம் தரலாம். நமது பித்ருக்களை வழிபட்டு அரிசி, காய்கறி, பழம், புத்தாடை வைத்து படையலிட்டு, இறுதியாக அரூபமாக இருக்கும் அவர்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் விடவேண்டும்.

ஒரு தரப்பினர் சாதத்தில் ஆறு பிண்டங்கள் பிடித்துவைத்து, எள், தண்ணீர், தர்ப்பை கொண்டு முன்னோர்களை ஆராதிப்பார்கள். தந்தை, தாத்தா, முப்பாட்டன்கள், தாய், பாட்டி, கொள்ளுப் பாட்டி ஆகிய கோத்திர தாயாதிகளுக்கு ஒவ்வொருவருக்கும் அந்த பிண்டங்களை அர்ப்பணித்து, கடைசியில் அந்த ஆறு பிண்டங்களையும் ஒன்றாக இணைத்து காகத்துக்கு வைப்பார்கள். உயிரினங்களில் கூடி வாழ்ந்து, சேர்ந்து உண்ணும் உயர்ந்த குணம் கொண்டது காக்கை இனம். அப்படிப்பட்ட உயர்ந்த ஜீவனான காகத்திற்கு உணவிடுவதன் மூலம் பித்ருக்களின் ஆசியைப் பெற முடியும் என சாஸ்திரம் கூறுகிறது. எனவே காகத்திற்கும் அமாவாசை தினத்தில் உணவளிப்பது சிறப்பு.

ஆடி அமாவாசையன்று ராமேஸ்வரத்திற்கு சென்று அங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடுவது சிறப்பாகும். ராமேஸ்வரம் திருத்தலம், ராமாயணத்துடன் தொடர்புடையது. சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் தமிழகத்தில் உள்ள ஒரே தலம் இதுதான். 64 தீர்த்தங்களைக் கொண்ட தமிழகத்தின் ஒரே கோவில் என்ற பெருமையும் ராமேஸ்வரத்திற்கு உண்டு. இதில் 22 தீர்த்தங்கள் கோவிலுக்கு உள்ளேயே இருக்கின்றன. ராமேஸ்வரம் ராமநாதர் ஆலயம் முன்புறம் உள்ள கடல் நீரில் அலையே இருக்காது. சீதாதேவி போல அமைதியாக இருக்கும் இக்கடலில் நீராடுவது சிறப்பு. அதிலும் ஆடி அமாவாசையன்று நீராடுவதும், நீத்தார் கடன்களைச் செய்வதும் மிகவும் விசேஷமானது.

இலங்கை யுத்தம் முடிந்து கடல் கடந்து நாடு திரும்பிய ராமன், ராவணனைக் கொன்ற பாவத்தை தீர்த்துக்கொள்ள மணலில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டான். அந்த லிங்கமே ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதர். ஆடி மாதத்தில் அம்பிகை பர்வதவர்த்தினிக்கும், ராமநாதருக்கும் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெறும். தீர்த்த நீராடலுக்கு பெயர் பெற்ற ஆடிமாதம் முழுவதும் இங்கு நீராடுவது சிறப்பாகும். பாவநிவர்த்தி மட்டுமல்லாமல், பித்ருதோஷம் நீக்கும் புனிதத்தலமாக இருப்பதால் ஆடி அமாவாசையும் இந்த ஆலயத்தில் சிறப்பு பெறுகிறது. ஆடி அமாவாசை அன்று ராமேஸ்வரம் சென்றோ அல்லது அருகாமையில் உள்ள ஆறு, கடல், ஏதாவது ஒரு நீர்நிலையில் நீராடி, திதி, தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை நம் இல்லங்களுக்கு அழையுங்கள்.