ரேஷன் அட்டைதாரர்கள் இனி "இதை" செய்தால், உங்க ரேஷன் கார்டுகள் ரத்து! தமிழக அரசு அதிரடி…

சென்னை: ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. பொதுமக்களின் நன்மைக்காக, இந்த விஷயத்தில் இனிமேல், கண்டிப்பு காட்ட போவதாகவும் கூட்டுறவுத்துறை தரப்பில் சொல்லப்படுகிறது. ரேஷன் அரிசியை நிறைய பேர் தவிர்த்து வந்த நிலையில், இப்போது பெரும்பாலானோர் பயன்படுத்த துவங்கிவிட்டனர். ரேஷன் அரிசிக்கு எல்லா காலத்திலுமே மதிப்பு இருக்கவே செய்கிறது.

அதனாலேயே ரேஷன் அரிசி கடத்தல் இன்றுவரை தமிழகத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த அரிசி கடத்தப்பட்டு, பாலிஷ் செய்யப்பட்டு, வேறு ரூபத்தில் சற்று விலை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு, மறுபடியும் நம்மிடமே புழக்கத்தில் வந்து சேருகிறது.. நம்ம ஊரில் இருந்து கடத்திக்கொண்டுபோய், வெளிமாநிலங்களில் நல்ல விலைக்குவிற்று விடும்பேர்வழிகள் அதிகரித்துவிட்டார்கள்.

இந்த கடத்தல் ஆந்திராவில் நிறைய நடக்கிறது.. சில மாதங்களுக்கு முன்பு சந்திரபாபு நாயுடு, நம்முடைய தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு கடிதமும் எழுதியிருந்தார். அதில், “தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு தொடர்ந்து அரிசி கடத்தப்படுகிறது. ஏழு வழித்தடங்கள் வழியாக, கார், பைக், லாரிகள் மூலம் அரிசியை கடத்துகிறார்கள். அந்த அரிசி ஆந்திராவிலுள்ள ஆலைகளில் பாலிஷ் செய்யப்பட்டு, கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும் கடத்தப்படுகிறது. எனது சொந்ததொகுதியான குப்பம் தொகுதியில், கடந்த 16 மாதங்களில் 13 அரிசி கடத்தல் வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்” என்று எழுதியிருந்தார். சந்திரபாபு நாயுடுவின் அந்த கடிதம் தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. இதற்கு பிறகு, முதல்வர் ஸ்டாலினே நேரடியாக தலையிட்டு, இதுகுறித்து தீவிர நடவடிக்கையை எடுக்கும்படி காவல்துறைக்கு அறிவுறுத்தியிருந்தார்… இதையடுத்து, ரேஷன் பொருள் பதுக்குதல் குறித்து, இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று காவல்துறை பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டது.

ரேஷன் கார்டுகளில் முறைகேடுகளை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றாலும், கடத்தலை முழுமையாக தடுக்க முடியவில்லை. அதனால்தான், இப்போது இன்னொரு கடிவாளத்தை கையில் எடுத்துள்ளது.

6 மூட்டை அரிசி வேணும்.. வடிவேலுவின் படித்துறை பாண்டி ஸ்டைலில்.. கும்பகோணத்தில் நடந்த நூதன மோசடி! தமிழகத்தில், 2.20 கோடி அரிசி கார்டுதாரர்களில், 1.05 கோடி முன்னுரிமையற்ற கார்டுதாரர்கள்… ஆனால், இத்தனை பேர் இருந்தும், பலர் அரிசியை வாங்குவதில்லை.. மேலும், அந்த அரிசியை, கடை ஊழியர்களையே எடுத்து கொள்ளுமாறும் சொல்லிவிடுகிறார்கள். கடத்தலின் முதல் புள்ளியே இங்குதான் தொடங்குகிறது.

ஏற்கனவே, மத்திய அரசு, வெளிச்சந்தை திட்டத்தின் கீழ் கிலோ, 34 ரூபாய்க்கு வழங்கிய அரிசி விற்பனையை நிறுத்திவிட்டது.. மாதம், 45,000 டன் அரிசி வெளியில் வாங்க வேண்டியுள்ளது… அவ்வளவு சிரமப்பட்டு வாங்கி தரும் அரிசியை, கார்டுதாரர்கள் பயன்படுத்தாமல் இருப்பது கவலையை தருவதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் சொல்கிறார்கள்.

இனிமேல் வரும் மாதம் முதற்கொண்டு, ஒவ்வொரு ரேஷன் கடையிலும் அரிசி வாங்கும் கார்டுதாரர்களை சிலரை நேரில் சந்தித்து, அரிசி வாங்கியது குறித்து கேட்டறிந்து உறுதி செய்யப்பட உள்ளதாம்..
அதுமட்டுமல்ல, “அரிசியை வாங்காமலே, பில் போட்டால் ஊழியர் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும். அரிசி கடத்தலுக்கு துணை போகும் கார்டுதாரர்களின் ரேஷன் கார்டுகளும், அதிரடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

ரேஷன் கடைகளில் தினமும் ஆய்வு செய்து, விற்பனை, இருப்பை விட அதிகம் அல்லது குறைவாக அரிசி இருக்கும் பட்சசத்தில் சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்… அரிசி ஆலைகள், அரிசி வியாபாரிகளிடமும் ரேஷன் வியாபாரிகளிடமும் ரேஷன் அரிசி இருக்கிறதா? என்று தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்படும்’ என்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளார்களாம்.