சூரிய ஒளி இருந்தால் 621 மைல் வரை இந்த காரில் டிராவல் பண்ணலாம்! அப்படி என்ன காருங்க அது..

ஒரு துளிகூட பெட்ரோல்-டீசல் தேவைப்படா காரை மாணவர்கள் உருவாக்கி இருக்கின்றனர். சோலார் பவர்டு எலெக்ட்ரிக் காரான இது சூரிய ஒளியின் வாயிலாக 1,000கிமீ வரை டிராவல் செய்யும். இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் காணலாம், வாங்க.

உலக அளவில் மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. இதை யாராலும் மறுக்க முடியாது. பல விஷயங்களில் மின்சார வாகனங்கள் நன்மையைத் தரக் கூடியதாக இருக்கின்றன. இதனால்தான் அவற்றிற்கு வரவேற்பும் தற்போது தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்தியாவிலும் மின்சார கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

அதேவேளையில், குறிப்பிட்ட தீமைகளையும் இந்த எலெக்ட்ரிக் வாகனங்கள் கொண்டிருக்கின்றன. அதில் மிக முக்கியமானதாக அதிக நேரத்தில் சார்ஜாக எடுத்துக் கொள்வது இருக்கின்றது. என்னதான் ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டைக் கொண்டு சார்ஜ் செய்தாலும், குறிப்பிட்ட அந்த எலெக்ட்ரிக் வாகனத்தை முழுமையாக சார்ஜ் செய்ய குறைந்தது ஒரு மணி நேரத்தையாவது நாம் செலவிட வேண்டி இருக்கின்றது.

இதுவே பெரும்பாலான எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பின்னால் இருக்கும் மிகப் பெரிய பின்னடைவாக இருக்கின்றது. இந்த இன்னலைக் களைக்கும் முயற்சியில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் மிக தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே மணிக் கணக்கில் காத்திருந்து சார்ஜிங் மையங்களில் சார்ஜ் செய்ய வேண்டாம், நீங்கள் டிராவல் செய்யும்போது உங்கள் காரை சார்ஜ் செய்துக் கொள்ள முடியும் என ஓர் நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.

அது எப்படி சாத்தியம் என கேட்கின்றீர்களா?, சோலார் பவர்டு எலெக்ட்ரிக் வாகன (Stella Terra Solar-Powered EV)-ங்களால் அது சாத்தியமே. இந்த வகை வாகனங்களைச் சார்ஜ் செய்ய சூரிய ஒளி ஒன்றே போதுமானது. நீங்கள் பயணிக்கும் போது சூரிய ஒளி எந்த தடையும் இன்றி இந்த வாகனத்தின் மீது படும் எனில், சார்ஜ் மையத்திற்கு ஒதுங்க வேண்டும் என்கிற அவசியமே இருக்காது.

காரின் சோலார் சிஸ்டம் காருக்கு தேவையான மின்சாரத்தை சூரிய ஒளியின் வாயிலாகவே சேமித்துக் கொள்ளும். இத்தகைய காரே ஸ்டெல்லா டெர்ரா எனும் பெயரில் வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது. இது ஆஃப்-ரோடு பயன்பாட்டு வசதிக் கொண்ட சோலார் பவர்டு எலெக்ட்ரிக் காராகும். இதுவே இந்த பூமியின் முதல் சோலார் பவர்டு ஆஃப்-ரோடு எலெக்ட்ரிக் காராகும்.

ஆகையால், பலரின் கவனத்தை இந்த வாகனம் ஈர்த்திருக்கின்றது. இந்த சோலார் எலெக்ட்ரிக் கார் ஓர் முழு சார்ஜில் 621 கிமீ வரை டிராவல் செய்யுமாம். அதாவது, சூரிய ஒளி வாயிலாக முழுமையாக சார்ஜடையும் பட்சத்தில் ஸ்டெல்லா டெர்ரா-வில் சுமார் 1000 கிமீ தூரம் வரை நம்மால் பயணித்துக் கொள்ள முடியும். இத்தகைய அதீத திறன் கொண்ட ஆஃப்-ரோடு எலெக்ட்ரிக் காராகவே அது உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் உலகின் பல முன்னணி பிராண்டுகளின் எலெக்ட்ரிக் காரே படு தோல்வியைச் சந்திக்கும் என யூகிக்கப்பட்டு உள்ளது. இந்த வாகனத்தை வட அமெரிக்காவின் கடுமையான சாலையில் சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தப்பட்ட பின்னரே தயாரிப்பு நிறுவனம் இது ஆயிரம் கிலோ மீட்டர் ரேஞ்ஜ் தரும் என்பதை உறுதிப்படுத்தி இருக்கின்றது.

ஐந்தோவன் டெக்னாலஜி பல்கலைக் கழகத்தை (Eindhoven University of Technology)-ச் சேர்ந்த மாணவர்களே இந்த காரை உருவாக்கியவர்கள் ஆவார்கள். இவர்கள் மிகவும் இலகு ரக எடைக் கொண்ட பேட்டரியையே இந்த காரின் உருவாக்கத்தில் பயன்படுத்தி இருக்கின்றனர். அதேவேளையில், மிகவும் சிறிய பேட்டரி பேக்காகவும் அது காட்சியளிக்கின்றது.

இப்போது விற்பனையில் இருக்கும் பெரும்பாலான எலெக்ட்ரிக் கார்கள் ஆஃப்-ரோடு நகர்புற சாலைகளில் வைத்து பயன்படுத்தும்போது லேசான மின்சார இழப்பைச் சந்திக்கும். இதனால், அதன் ரேஞ்ஜ் திறனில் பாதிப்பு ஏற்படும். ஆனால், இந்த ஸ்டெல்லா டெர்ராவில் இதுபோன்று அவலம் ஏற்படாது என கூறப்படுகின்றது.
ஏனெனில் சார்ஜ் இழக்க இழக்க, சூரிய ஒளியில் வாயிலாக அந்த சார்ஜ் மீட்டெடுத்துக் கொள்ளப்படும். சூரிய ஒளி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டால் மட்டுமே இதில் சுணக்கம் ஏற்படும். இந்த காரை சாலையில் வைத்தும் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 145 கிமீ ஆகும்.

சோதனை ஓட்டம் செய்வதற்கு முன்னர் வரை இந்த கார் வெறும் 630 கிமீ வரை மட்டுமே ரேஞ்ஜ் தரும் என நம்பப்பட்டது. ஆனால், அது ஆயிரம் கிலோமீட்டர் வரை பயணித்து அனைவரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்தது. இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்கு காரின் கட்டுமானம் மற்றும் வடிவமைப்பு உள்ளிட்டவையே காரணமாக இருக்கின்றது. மிகவும் எடைக் குறைவான காராகவே இதனை மாணவர்கள் வடிவமைத்திருக்கின்றனர். இந்த காரில் சிறப்பம்சங்களும் மிக மிக தாராளமாக வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த புள்ளி விபரங்கள் அறிவிக்கப்படவில்லை. இதேபோல், தற்போது கான்செப்ட் மாடலாக மட்டுமே ஸ்டெல்லா டெர்ரா உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

அடுத்த கட்டமாக விரைவில் இந்த காரின் உற்பத்தி பணிகள் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், எப்போது அது உற்பத்தி செய்யப்படும் என்கிற விபரம் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், வெகு விரைவில் இதன் உற்பத்தி பணிகள் தொடங்கிவிடும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.