ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டி சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, சீனா, தென்கொரியா, மலேசியா, ஜப்பான், பாகிஸ்தான் என ஆறுநாடுகள் பங்கேற்று வருகின்றன. இதில் நேற்றைய ஆட்டத்தில் ஹர்மன் ப்ரீத் சிங் தலைமையிலான இந்திய அணி மர்ஹான் ஜலீல் தலைமையிலான மலேசிய அணியை எதிர் கொண்டது.
ஏற்கனவே, சீனாவுக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி, அடுத்து ஜப்பான் அணியுடன் டிரா பெற்ற பின் மூன்றாவது ஆட்டம் நேற்று ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் பலம் வாய்ந்த மலேசிய அணியை இந்திய அணி எதிர்கொண்டது.
ஆட்டம் தொடங்கிய முதலே இந்திய அணி தனது ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்தது. ஆட்டத்தின் 15 வது நிமிடத்தில் தமிழக வீரர் கார்த்திக் செல்வம் முதல் கொலை இந்தியாவுக்காக அடித்தார். அடுத்ததாக ஹர்திக் சிங் மற்றும் ஹர்மன் ப்ரீத் சிங் வீரர்கள் அடுத்தடுத்து 32 மற்றும் 42 ஆவது நிமிடங்களில் கோல் அடித்தனர்.
ஆட்டத்தின் முதல் பாதியில் 3-0 என்கிற கோல் கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றது. அடுத்ததாக இரண்டாம் பாதியில் குர்ஜந்த் சிங் மற்றும் ஜுக்ராஜ் ஆகியோர் 53 மற்றும் 54வது என அடுத்தடுத்த நிமிடங்களில் இரண்டு கோல்கள் அடித்து இந்திய அணியை 5-0 என்ற கோல்கணக்கில் முன்னிலை வகிக்க வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் இறுதியில் 5-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி மலேசியாவை எளிதில் வீழ்த்தி அபாரமான வெற்றியை பெற்றது. மூன்று ஆட்டங்களில் 7 புள்ளிகள் பெற்று இந்திய அணி ஆசிய ஹாக்கி டிராபி தொடர் அட்டவணையில் முதல் இடத்திற்கு இந்திய அணி சென்றுள்ளது. 6 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் மலேசிய அணி உள்ளது.