இந்தியாவின் ஜிசாட் 20 செயற்கைக்கோள்: வெற்றிகரமாக விண்ணில் ஏவியது ஸ்பேஸ் எக்ஸ்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் அமெரிக்காவிலுள்ள எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இணைந்து விண்வெளி துறையில் பல முக்கியமான முயற்சிகளை செய்து வருகிறது. இந்த நிலையில் தகவல் தொடர்புக்காக நாட்டிலேயே அதிக எடை கொண்ட மிகப்பெரிய ‘ஜிசாட்-20′ என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. பாகுபலி என்று அழைக்கப்படும் இந்த செயற்கைக்கோளை, எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ் எக்ஸ் மூலம் விண்ணில் செலுத்த உதவியை இஸ்ரோ நாடியுள்ளது. அதன்படி அமெரிக்கா புளோரிடா மாகாணம் கேப் கனாவரலில் விண்வெளி மையத்தில் இருந்து ஜிசாட்-20 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறும்போது, ‘தகவல் தொடர்புக்காக நாட்டிலேயே முதன் முறையாக அதிக எடையான அதாவது 4 ஆயிரத்து 700 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கு அதிக எடையை சுமந்து செல்லும் ராக்கெட் தேவைப்படுகிறது.

இஸ்ரோவின் அதிக எடையை தாங்கி செல்லும் (ஹெலிலிப்ட் ராக்கெட்) எல்.வி.எம்-3 ராக்கெட் 4 டன் அதாவது 4 ஆயிரம் கிலோ எடை வரையில் விண்ணில் செலுத்தும் திறன் கொண்டது. எனவே பாகுபலி செயற்கைக்கோளான ஜிசாட்-20 செயற்கைக்கோள் 4 ஆயிரத்து 700 கிலோ எடை கொண்டுள்ளதால் மாற்று ராக்கெட் தேவைப்படுகிறது.

இந்த நிலையில், ஸ்பேஸ் எக்ஸின் ‘பால்கன்-9′ ராக்கெட்டை பயன்படுத்த இஸ்ரோ முடிவு செய்துள்ளது. இந்த ராக்கெட் 8.3 டன் வரையில் செயற்கைக்கோள்கள் மற்றும் ஆய்வுக்கருவிகளை சுமந்து செல்லும் திறன் உள்ளது. இந்த பெரிய செயற்கைக்கோளை விண்ணில் ‘ஜியோஸ்டேஷனரி டிரான்ஸ்பர் ஆர்பிட்’ என்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த ‘பால்கன்-9′ ராக்கெட் திறன் போதுமானதாக இருக்கும்.

ஜிசாட்-20 செயற்கைக்கோள் 14 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டது. இஸ்ரோவின் இந்த செயற்கைக்கோள் மூலம் இந்தியாவில் தொலைதூரப் பகுதிகளில் வேகமான இணைய இணைப்பை செயல்படுத்த முடியும்.

ஜிசாட்-20 மூலம் எதிர்கொண்ட பிரச்சினையை சமாளிக்க, இஸ்ரோ தனது அடுத்த தலைமுறை ராக்கெட் ஆன என்.ஜி.எல்.வி. (Next Generation Launch Vehicle)யை உருவாக்கி வருகிறது. தற்போதைய எல்.வி.எம்.-3-ன் 4 டன் திறனை 3 மடங்கு அதிகரிக்கும் வகையில் இந்த சக்திவாய்ந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ராக்கெட் இஸ்ரோவின் பயன்பாட்டு அட்டவணையில் சேர்ந்தால் ‘ஸ்பேஸ்எக்ஸ்’ உதவியை நாடவேண்டிய அவசியம் இருக்காது. இஸ்ரோ சொந்தமாக அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த முடியும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.