கடைசிவரை களத்தில் நின்ற ஜஹாங்கிரின் முதல் சர்வதேச சதம்!

உலகக்கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டியில் அமெரிக்க அணி 207 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
குரூப் ஏ-யில் இடம்பெற்றுள்ள அணிகளான அமெரிக்காவும், நேபாளமும் இன்றைய போட்டியில் விளையாடி வருகின்றன. முதலில் களமிறங்கிய அமெரிக்க அணியில் ஸ்டீவன் டெய்லர் 4 ஓட்டங்களில் அவுட் ஆனார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சாய்தேஜா முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அதன் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. ஆனால் விக்கெட் கீப்பர் ஷாயன் ஜஹாங்கிர் மட்டும் அதிரடியில் மிரட்டினார்.

மறுமுனையில் விக்கெட்டுகளை இழந்ததால் அமெரிக்கா 49 ஓவர்களில் 207 ஓட்டங்களுக்கு சுருண்டது. கடைசிவரை களத்தில் நின்ற ஜஹாங்கிர் 79 பந்துகளில் 3 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்கள் எடுத்தார். 9வது போட்டியில் விளையாடும் ஜஹாங்கிருக்கு இது முதல் சர்வதேச சதம் ஆகும். நேபாளம் தரப்பில் கரண் 4 விக்கெட்டுகளும், குல்ஸான் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.