JEE 2-ஆம் அமர்வு விண்ணப்பப் பதிவு தொடக்கம்!

JEE இரண்டாவது அமர்வுக்கான விண்ணப்பப் பதிவு ஏற்கனவே பிப்ரவரி 7ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டுவிட்டதாக NDA அறிவித்த நிலையில், ஒரு வாரம் கழித்து விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கியுள்ளது. மாணவர்கள் மார்ச் 12ஆம் தேதி இரவு 11.50 மணி வரை விண்ணப்பிக்கலாம். 

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான NIT., IIT., IIIT.,  ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக JEE Main, Advanced என்று பிரித்து நடத்தப்படுகிறது. 

2023ஆம் ஆண்டு JEE தேர்வின் முதல் அமர்வு (session 1) ஜனவரி 24 முதல் 31 ஆம் தேதி வரை (26ஆம் தேதி நீங்கலாக) நடைபெற்றது.

இந்தத் தேர்வின் முதலாம் தாளை எழுத 8,60,064 பேர் விண்ணப்பித்தனர். இரண்டாம் தாளை எழுத 46,465 பேர் விண்ணப்பித்தனர். கடந்த 2022ஆம் ஆண்டைக் காட்டிலும் 3.84 சதவீதம் பேர் அதிகம் விண்ணப்பித்தனர். கடந்த முறை 7.69 லட்சம் பேர் JEE மெயின் தேர்வை எழுதினர். 2023ஆம் ஆண்டில் 8.23 லட்சம் பேர் தேர்வை எழுதினர்.

இரண்டாவது அமர்வுக்கான (session 2) JEE தேர்வு ஏப்ரல் மாதத்தில் 6, 8, 10- 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவங்கள் தற்போது வெளியாக உள்ளன. இந்த அமர்வுக்கு, மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

இந்த இரண்டு அமர்வுகளில் எதில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளார்களோ, அதைக் கொண்டு மாணவர்கள் தர வரிசைப்படி கல்லூரிகளில் சேரலாம். அதேபோல, கேட்கப்படும் 90 கேள்விகளில் 75 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும்.

தேர்வு மையங்கள், ஹால் டிக்கெட் பதிவிறக்கம், தேர்வு முடிவுகள் உள்ளிட்டவற்றுக்கான தேதிகள் உரிய காலத்தில் அறிவிக்கப்படும். ஏற்கெனவே JEE Main தேர்வின் முதல் அமர்வுக்கு விண்ணப்பித்தவர்களும் 2ஆவது அமர்வுக்கு விண்ணப்பிக்கலாம். முந்தைய விண்ணப்ப எண் மற்றும் கடவுச் சொல்லைக் கொண்டு விண்ணப்பிக்கலாம். 

அவர்கள் பாடம், தேர்வு எழுதும் மொழி, இருப்பிடச் சான்றிதழ், தேர்வு மைய விவரம் ஆகிய விவரங்களைப் பூர்த்தி செய்தால் போதுமானது. அதைச் செய்துவிட்டு, தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியது அவசியம்.  

ஆதார் அட்டை, இருப்பிடச் சான்றிதழ், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை இருப்பிடச் சான்றிதழ் கொண்டு விண்ணப்பிக்கலாம். 

கூடுதல் தகவல்களுக்கு: https://nta.ac.in/Download/Notice/Notice_20230215132207.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.