இந்தியாவின் மிகவும் பிரபலமாக இயங்கி வந்த விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலின் மனைவி அனிதா கோயல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடி வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலை காலமானார்.
இந்த தகவலை நரேஷ் கோயல் குடும்பத்தினருக்கு நெருக்கமான வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.அனிதா கோயல் மீது மீடியா வெளிச்சம் இல்லாவிட்டாலும் ஜெட் ஏர்வேஸ் வளர்ச்சிக்கு இவரும் முக்கியமான காரணமாவார், ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனத்தின் ஆப்ரேஷன்ஸ் பிரிவை கவனித்து வந்தது மட்டும் அல்லாமல் அதன் மேம்பாடுகளில் நுணுக்கமாக பணியாற்றியவர்.மேலும் அனிதா கோயல் ஜெட் ஏர்வேஸ்-ன் நிர்வாக துணைத் தலைவராக இருந்தார். 2015 முதல், அவர் நிர்வாகமற்ற துணைத் தலைவராக ஆனார், ஆனால் இயக்குநர்கள் குழுவின் ஒரு பகுதியாக தொடர்ந்து இருந்தார். இவரின் இழப்பு நரேஷ் கோயல்-க்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தால் (ED) கைது செய்யப்பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு கடந்த வாரம் திங்கள்கிழமை மருத்துவக் காரணங்களுக்காக மும்பை உயர் நீதிமன்றம் இரண்டு மாதங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் தான் அவருடைய மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடி வந்த நிலையில் வியாழக்கிழமை காலை மரணமடைந்துள்ளார்.கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு, குறைந்த கட்டண விமானச் சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸின் நிறுவனரான நரேஷ் கோயல், 1.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்தியாவின் 16வது பணக்காரராக இருந்தார். விமானப் போக்குவரத்து துறையே இவருடைய கட்டுப்பாட்டில் தான் அப்போது இருந்தது.இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, 74 வயதான மும்பையின் ஆர்தர் சாலையில் சிறையில், உயிரை கையில் பிடித்துக்கொண்டு இருக்கிறார். இவருடைய வாழ்க்கையை புரட்டிப்போட்டது கடன் மோசடி.நரேஷ் கோயல் தற்போது பணமோசடி வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக அமலாக்க இயக்குனரகம் அவரைக் கைது செய்து மும்பை சிறையில் அடைத்துள்ளது. கனரா வங்கி அளித்த புகாரின் பேரில் ED விசாரணை தொடங்கப்பட்ட நரேஷ் கோயல் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.