ஏர்டெல்லை முந்தும் ஜியோ!

இந்தியாவின் இரு பெரும் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களும் மிக எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையில் ஃபிக்ஸ்ட் வயர்லெஸ் ஆக்சஸ்(FWA) கொண்ட 5ஜி இணைய சேவையை அறிமுகப்படுத்தி உள்ளன. இதற்கு முன்னர் இருந்த பிராட்பேண்ட் இணையதள சேவையை போல் அல்லாமல் இந்த வயர்லெஸ் டிவைஸை சாதாரணமாக ப்ளக்-இன் செய்வதன் மூலமே வாடிக்கையாளர்கள் இன்டர்நெட் சேவையை பயன்படுத்த முடியும். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜியோ ஏர் ஃபைபர் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி அதிகாரப் பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் எக்ஸ்ட்ரீம் ஏர் ஃபைபர் ஏற்கனவே சந்தையில் உள்ளது.

இந்த டிவைஸ் மூலம் அதிகவேக இணைய சேவையை பயன்படுத்த முடியும். தொன்றுதொட்டு வழக்கத்தில் உள்ள ஃபைபர் கேபிள் மற்றும் ரவுட்டர்களை வைத்து இணையதள சேவையை பயன்படுத்தும் முறைக்கு, இந்த எப் டபிள்யு ஏ டிவைஸ்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளன. மேலும் வீட்டில் இந்த எஃப் டபிள்யூ ஏ சேவையை பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்கள் யாருடைய உதவியும் இல்லாமல் தாங்களாகவே வீட்டில் இதனை இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும். ஆப்டிகல் பைபர் இணைப்புகள் சாத்தியமில்லாத கிராம பகுதிகளில் கூட இந்த எஃப் டபிள்யு ஏ டிவைஸ்கள் மிகவும் உதவிகரமானதாக இருக்கும்

விலை:

விலையைப் பொறுத்தவரை ஏர்டெல் நிறுவனம் ஒரே ஒரு பிளானில் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவையை அளித்து வருகிறது. ரூபாய் 7,733 என்ற விலைக்கு ஆறு மாத வேலிடியுடன் அதிவேக 5ஜி இணையதள சேவையை வாடிக்கையாளர்கள் பெற முடியும். இதில் 2,500 ரூபாய் திருப்பி அளிக்கக்கூடிய செக்யூரிட்டி டெபாசிட் தொகை ஆகும். மேலும் எந்தெந்த இடங்களில் இந்த சேவை தற்போது கிடைக்கிறது என்பதை வாடிக்கையாளர்கள் ஏர்டெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ள முடியும்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அடுத்த மாதம் தான் தங்களது ஜியோ ஏர் ஃபைபரை அறிமுகப்படுத்த உள்ளது. கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் தனது போட்டியாளரை விட 20 சதவீதம் குறைவான விலையில் ஜியோ நிறுவனம் ஏர் ஃபைபர் சேவையை அளிக்க உள்ளதாக தெரிகிறது. ஒட்டுமொத்தமாக ரூபாய் 6,000 வாடிக்கையாளர்கள் ஜியோ ஏர் ஃபைபர் சேவையை பெற முடியும் எதிர்பார்க்கப்படுகிறது.

இணைய வேகம் மற்றும் பயன்கள்:

இரண்டு நிறுவனங்களுமே வைஃபை 6 ரவுட்டரை அளிக்கின்றன. இதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்டு வந்த வைஃபை 5 ரவுட்டரை விட இது அதிநவீனமானது ஆகும். மிகக் குறைவான லேட்டன்சியுடன் அதிவேக இணையதள சேவையை பெறவும் உதவுகிறது. இரண்டு நிறுவனங்களுமே சிம் கார்டு பயன்படுத்தியே 5ஜி இணைய சேவையை வழங்குவது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் சிம் கார்டு மூலம் இணைய சேவையை வழங்குவதால் அந்த இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கவரேஜ் பொறுத்து 5ஜி சேவையின் வேகம் மாறுபடும்.

எஃப் டபிள்யூ ஏ முறையில் வயர்லெஸ் ட்ரான்ஸ்மிட்டர் அல்லது ரிசிவர் வாடிக்கையாளரின் இடத்தில் பொருத்தப்பட்டு அதில் உள்ள ஆண்டனாவானது அருகே உள்ள செல்போன் டவருடன் அல்லது பேஸ் ஸ்டேஷன் உடன் இணைக்கப்படும்” என்று ஏர்டெல் குறிப்பிட்டுள்ளது. கூடுதலாக, இரண்டு நிறுவனங்களுமே ஒன்றுக்கு மேற்பட்ட டிவைஸுகளை ஏர் ஃபைபர் ரவுட்டருடன் இணைத்துக் கொள்ளும் வசதியை அளிக்கின்றன. மேலும் ஆப்பை பயன்படுத்தி உரிமையாளர்கள் அதற்கான எல்லைகளையும் வகுத்துக்கொள்ள முடியும்.
தற்போதைய நிலையில் ஏர்டெல் நிறுவனம் 100 எம்பிபிஎஸ் அளவிலான வேகத்தில் எக்ஸ்ட்ரீம் ஏர் ஃபைபர் சேவையை அளித்து வருகிறது. இதுவே ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஆனது 1GBps என்ற வேகத்தில் 5ஜி இணையதள சேவையை அளிக்கும் என உறுதியளித்துள்ளது. மேலும் தனித்துவமான 5ஜி நெட்வொர்க்கை கொண்டுள்ளதால் ஜியோ ஃபைபர் மற்ற நிறுவனங்களை விட மிகவும் சிறப்பானதும் நிலையானதுமான செயல் திறனை வெளிப்படுத்தும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.