மாநிலங்களவை பாஜக தலைவராக ஜேபி நட்டா நியமனம்!

பிரதமராக மோடி 3 வது முறை பொறுப்பேற்ற பிறகு இன்று பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற அவை கூடியது.

பா.ஜ.,வின் தேசிய தலைவர் நட்டா. இவரது பதவிக் காலம் ஜனவரி மாதத்திலேயே முடிவுக்கு வந்தது. இருந்தாலும் லோக்சபா தேர்தலுக்காக நீட்டிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஜூன் 30ம் தேதியுடன் பதவிக்காலம் முடிவடைய இருப்பதாகத் தெரிகிறது.

மக்களவை தேர்தலில் நட்டா போட்டியிடவில்லை. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை 3 வது முறையாக பொறுப்பேற்றது. அதில் சுகாதாரத்துறை அமைச்சராக நட்டா பொறுப்பேற்றார். இந்நிலையில் பா.ஜ., ராஜ்யசபா தலைவராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தலைவராக இருந்த பியூஷ் கோயல் தற்போது மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதால், ராஜ்யசபா தலைவராக நட்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார். பியூஷ் கோயல் வகித்த சபை முன்னவர் பதவி, ஆளுங்கட்சியை ராஜ்யசபாவில் தலைமையேற்று நடத்தும் முக்கியமான பதவி. தற்போது அந்த பதவி நட்டா கையில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.