பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிய கமல்ஹாசன்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து தான் விலகப்போவதாக கமல்ஹாசன் பதிவு வெளியிட்டு இருக்கும் நிலையில் அவருக்கு பதிலாக இனி எட்டாவது சீசனை யார் தொகுத்து வழங்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருக்கிறது. அதே நேரத்தில் கமல்ஹாசன் திடீரென இந்த முடிவு எடுப்பதற்கு என்ன காரணம் என்று கேள்விகள் குவிந்து வருகிறது.

ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பெயர் போன விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற்றாலே அதை தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்கள் தொடங்கி விடுகிறது. அந்த வகையில் மக்கள் பலரையும் வியக்க வைத்த நிகழ்ச்சி என்றால் பிக் பாஸ் நிகழ்ச்சி தான். பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்று எட்டிப் பார்க்கும் பழக்கம் பலருக்கும் இருக்கும் நிலையில் அதையே திரையில் காட்டி பிக் பாஸ் பற்றிய பேச்சுகளை மக்கள் மத்தியில் எழுப்ப வைத்தது.

அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியின் மூலமாகவே கமல்ஹாசனை சர்வ சாதாரணமாக பலரும் திட்ட தொடங்கிவிட்டனர். அதன் வெளிப்பாடோ என்னவோ இந்த முறை பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை தான் தொகுத்து வழங்கப் போவதில்லை என்று கமல்ஹாசன் திடீர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில்,

7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய எங்கள் பயணத்திலிருந்து ஒரு சிறிய இடைவெளி எடுக்கிறேன் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். முந்தைய சினிமா கமிட்மென்ட் காரணமாக, பிக் பாஸ் தமிழ் சீசனின் வரவிருக்கும் சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை.

உங்கள் இல்லங்களில் உங்களைச் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. உங்கள் அன்பையும் பாசத்தையும் நீங்கள் எனக்கு பொழிந்திருக்கிறீர்கள், அதற்காக உங்களுக்கு என் நித்திய நன்றியுணர்வு இருக்கிறது. பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை இந்தியாவின் சிறந்த தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக மாற்றுவதற்கு போட்டியாளர்களின் உங்கள் உற்சாகமான மற்றும் உணர்ச்சிபூர்வமான ஆதரவே அடிப்படை.

கடைசியாக, விஜய் டிவியின் அற்புதமான குழுவிற்கும், இந்த நிறுவனத்தை மாபெரும் வெற்றியடையச் செய்வதில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு குழு உறுப்பினர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சீசன் இன்னொரு வெற்றியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.