'கங்குவா' ரிலீஸ் தேதி வெளியீடு...

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து உருவாகி வரும் படம் ‘கங்குவா’. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் 38 மொழிகளில் 3டி முறையில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

படத்தின் க்ளிம்ஸ் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு, கடந்த ஆண்டு ஜூலை 22-ந் தேதி வெளியானது. அதனைத் தொடர்ந்து படத்தின் டீசர் கடந்த மார்ச் மாதம் 19-ந் தேதி வெளியானது.

இந்த இரு வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், கடந்த ஜூலை மாதம் வெளியான ‘ஃபயர் சாங்…’ எனும் முதல் பாடல் ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

இதையடுத்து கடந்த மாதம் படத்தின் டிரைலர் வெளியாகி பலரது கவனத்தை பெற்றது. இப்படி அடுத்தடுத்து அப்டேட்டுகளை வெளியிட்டு வந்த படக்குழு அக்டோபர் 10-ந் தேதி வெளியிடுவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தது.

ஆனால் அதே தேதியில் ரஜினியின் வேட்டையன் படம் வருவதால், அந்த தேதியில் படம் வெளியாகவில்லை என சமீபத்தில் நடந்த கார்த்தியின் மெய்யழகன் பட இசை வெளியீட்டில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து புது ரிலீஸ் தேதி எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.

இந்த நிலையில் நவம்பர் 14-ந் தேதி படத்தை வெளியிடுவதாக கங்குவா தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.