18 ஆண்டு காலம் ஐடி துறையில் வேலை பார்த்து வந்த ராஜேஷுக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாததால் வேலையை ராஜிநாமா செய்துவிட்டு சொந்த ஊரான கேரள மாநிலத்தின் ஆலப்புழாவுக்கு அருகேயுள்ள கடக்காரப்பள்ளிக்கு 2017 ஆம் ஆண்டு திரும்பினார். அடுத்த ஆறு மாதங்களுக்குள் அவரது தந்தை மற்றும் அக்கம்பக்கத்தில் இருந்த 10 பேர் புற்றுநோயால் இறந்தனர். இதனால் நமது வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இது தொடர்பாக இந்த சமூகத்துக்கு பயனான ஏதாவது ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தாப். நல்ல உடல் ஆரோக்கியத்துக்கு ஊட்டச்சத்தான உணவு முக்கியம் என்பதை உணர்த்த நினைத்தார். இதனால் பாதுகாப்பான, ஆரோக்கியமான, பிரஷ்ஷான காய்கறிகளை பயிரிட முடிவு செய்தேன் என்கிறார் ராஜேஷ். அவரது பக்கத்து வீட்டுக்காரரான ரெஞ்சித் தாஸ் என்பவரும் அதேநேரத்தில் தனது வேலையை விட்டுவிட்டிருந்தார். இருவரும் சேர்ந்து ஒரு ஆர்கானிக் பண்ணையைத் தொடங்க திட்டமிட்டனர். ஆலப்புழா மாவட்டம் மணல் சார்ந்த பகுதியாகும்.
இந்த நிலையில் அங்குள்ள நிலத்தை இயற்கை விவசாயத்துக்காகப் பண்படுத்துவதற்கு அவர்களுக்கு நான்கு முதல் ஐந்தாண்டுகள் ஆகிவிட்டது.இந்தநிலையில் அவர்கள் இருவரும் சேர்ந்து விவசாயத்துக்காக நிலங்களை குத்தகைக்கு எடுத்தனர். 50 சென்ட் நிலத்தில் அவர்கள் பயிரிடத் தொடங்கினர். சில மாதங்களிலேயே 18 வகையான காய்கறிகளை அவர்கள் ‘Eat It Safe’ என்ற பிராண்டு பெயரில் விற்பனை செய்யத் தொடங்கினர். இந்தநிலையில் அவர்களது விளைபொருட்களுக்கு ஆர்கானிக் சான்றிதழும் கிடைத்து விட்டது வெள்ளயானியில் உள்ள காலேஜ் ஆப் அக்ரிகல்சரின் ஆய்வுக்கூடத்தில் அவர்களது விளைப்பொருட்கள் பரிசோதிக்கப்பட்டதில் அதில் ஜீரோ லெவல் பூச்சிக்கொல்லிகள் இருந்ததால் அவை தரமான ஆர்கானிக் விளைபொருட்கள் என உறுதியானது.
இதைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டில் அவர்கள் Green EIS FPC Ltd என்ற நிறுவனத்தைத் தொடங்கி ஆர்கானிக் விவசாயத்தில் ஆர்வம் உடைய 354 பேரை அங்கத்தினராக சேர்த்தனர். Green EIS தான் கேரளத்தின் முதல் FPC கம்பெனி ஆகும். அதாவது விவசாயிகள் உற்பத்தியாளர்கள் கம்பெனி என்று அர்த்தம். கம்பெனியின் விளைபொருட்களுக்கு விரைவிலேயே பல்க் ஆர்டர்கள் குவியத் தொடங்கின. பீன்ஸ், சுரைக்காய், புடலங்காய், பாகற்காய், வாழை, தக்காளி, கத்தரிக்காய், தர்பூசணி, சேனைக்கிழங்கு, பூசணிக்காய் போன்ற காய்கறிகளை விளைவித்தனர். எஃப்பிசி விதிப்படி ராஜேஷும் ரெஞ்சித்தும் விவசாயிகளுக்கு ஆர்கானிக் விவசாயம் பற்றிய பயிற்சிகளையும் வழங்கி வருகின்றனர்.
இதன் மூலம் பலன் பெற்ற விவசாயிகள் தனித்தனியாக தங்கள் நிலத்தில் பயிரிட்டாலும் அதை ஒரு அமைப்பு மூலம் மொத்தமாகக் கொண்டுவந்த விற்பதற்கு Green EIS FPC ஏற்பாடு செய்தது. இதனால் விவசாயிகளுக்கு லாபம் பெருகியதோடு தொழிலுக்கு கடன் வாங்கும் வசதியும் உருவானது. 2 ஏக்கர் நிலத்தில் தொடங்கி படிப்படியாக இப்போது 25 ஏக்கர் பரப்பிலான நிலத்தில் ரெஞ்சித்தும் ராஜேஷும் பயிரிட்டு வருகின்றனர். வெள்ளரிக்காய், சாம்பார் புளிக்குழம்புக்குப் பயன்படும் தோசைக்காய் போன்ற காய்கறிகளுக்கு நிறைய டிமாண்டும் லாபமும் இருப்பதாக ராஜேஷ் கூறுகிறார். தற்போது அவர்களது நிலத்தில் தினசரி 500 கிலோ காய்கறிகள் விளைகின்றன.
அடுத்த 2 மாதங்களுக்குள் அதை 3,600 கிலோவாக அதிகரிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆர்கானிக் விவசாயம் தொடர்பாக பல்வேறு தொழில்நுட்பங்களை அறிந்து கொண்டு அவற்றை செயல்படுத்துவதாகவும் கூறினர். இயற்கை விவசாயம் செய்வதால் தங்களது மண்வளம் செழிப்படைந்துள்ளதாகவும், செலவினத்தைக் கட்டுப்படுத்துவதாக சொட்டுநீர்ப் பாசன முறையைப் பின்பற்றுவதாகவும் கூறினர். ஐடி துறையில் நல்ல சம்பளம் கிடைத்தபோதும் உடல் நலக் கோளாறுகள் ஏற்பட்டது. ஆனால் இந்த விவசாயத் தொழிலில் உடல் ஆரோக்கியம் பெருகியுள்ளது என்று கூறிய ராஜேஷ் விரைவிலேயே ஆலப்புழாவில் ஈட் இட் சேஃப்பின் மற்றொரு கிளையைத் தொடங்கவிருப்பதாகக் கூறினார்.