விஷ ஊசி போட்டு கொன்னுடுங்க...! கேன்சர் பாதிப்பால் கதறும் அங்காடி தெரு நடிகை

‘அங்காடி தெரு’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை சிந்து, தற்போது கேன்சர் பாதிப்பால் தான் தினந்தோறும் அவதிப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். வசந்த பாலன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ‘அங்காடித் தெரு’. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் சிந்து. இதையடுத்து சினிமாவிலும், சீரியலிலும் நடித்து வந்த சிந்து, கொரோனா காலகட்டத்தில் கூட உணவின்றி தவித்து வருபவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தார். இப்படி சேவை மனம் படைத்த சிந்து, தற்போது கேன்சர் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார். அவரின் பரிதாப நிலையை சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் விவரித்துள்ளார் சிந்து.

அதில் அவர் பேசியதாவது : “2020-ம் ஆண்டு எனக்கு கேன்சர் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு, எனது மார்பகங்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. அன்றிலிருந்து நாட்டு மருத்துவம், இங்கிலிஸ் மருத்துவம் என எத்தனையோ வைத்தியம் பார்த்து வருகிறேன். ஆனால் இதிலிருந்து மீள முடியவில்லை. இதற்காக மருத்துவர்களை நான் குறைசொல்லவில்லை. அவர்கள் நன்றாக தான் சிகிச்சை அளித்தார்கள். ஆனால் அவை என் உடலுக்கு ஒத்துழைக்கவில்லை.

தஞ்சாவூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஒரு மாதம் தங்கி நாட்டு வைத்தியம் பார்த்தேன். அப்போது என் மார்பகத்தில் இருந்த புண்கள் ஆறியது. ஆனால் அந்த சமயத்தில் எனது மருமகன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார். அதனால் அங்கு சிகிச்சையை தொடர முடியாமல் சென்னைக்கு வந்துவிட்டேன். கேன்சர் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதும் 3 ஆண்டுகள் ஓய்வு எடுக்கச் சொன்னார்கள். நான் உழைத்தால் தான் என் குடும்பம் சாப்பிட முடியும் என்ற நிலை இருக்கும்போது என்னால் எப்படி ரெஸ்ட் எடுக்க முடியும்.

நான் கேன்சர் பாதிப்பால் அவதிப்படுவதை பார்த்து நிறைய நண்பர்கள் எனக்கு உதவி செய்தார்கள். அவர்களால் தான் சாப்பிடுகிறேன், மற்ற செலவுகளையும் பார்த்துக் கொள்கிறேன். அவர்களும் எத்தனை நாள் தான் உதவுவார்கள். அவர்களுக்கு பாரமாக இருக்க வேண்டாம் எனக் கருதி மீண்டும் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தேன். அப்போது கையில் வளையல் போட்டது ஒத்துக்கொள்ளாமல் அலர்ஜியாகி கை வீங்கிவிட்டது. தற்போது எனது இடது கை செயல்படவில்லை… செத்துப்போச்சு.

எனது மகளும் வேலையில்லாமல் கை குழந்தையுடன் கஷ்டப்படுகிறால், அவளையும் நான் தான் பார்த்துக் கொள்கிறேன். தினம் தினம் வலியால் துடிப்பதற்கு பதில் எனக்கு விஷ ஊசி போட்டு கொன்றுவிடுங்கள் என டாக்டர்களிடம் கேட்டு பார்த்தேன். இந்த பேட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு சென்று எனது சிகிச்சைக்கும், எனது மகளுக்கு அரசு வேலையும் கிடைத்தால் நன்றாக இருக்கும். நான் யாருக்கும் தீங்கு செய்யவில்லை. அப்புறம் ஏன் கடவுள் எனக்கு இப்படி ஒரு வலியை கொடுக்கிறார் என தெரியவில்லை.
வெட்கத்தை விட்டு சொல்ல வேண்டும் என்றால் சாப்பாட்டிற்கே கஷ்டப்படுறேன். வெளிநபர்களிடம் இருந்து கூட கடன் வாங்கிவிடலாம்.

ஆனால் சொந்தக்காரர்களிடம் கடன் வாங்கிவிட்டு ரொம்ப கஷ்டப்படுறேன். ஷகிலா, நடிகர் பிளாக் பாண்டி, ஜெயலட்சுமி என பலரும் எனக்கு சிறுக சிறுக உதவி வருகின்றனர். இதற்கெல்லாம் விரைவில் தீர்வு கிடைக்க வேண்டும் என கண்ணீர் மல்க அந்த பேட்டியில் பேசி உள்ளார் சிந்து.