இன்ஸ்டாவில் தொடர்ந்து தன் ரசிகர்களுக்கு தரிசனம் தந்து வந்த லட்சுமி மேனன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்திரமுகி 2 படம் மூலம் ரீ எண்ட்ரி தரும் நிலையில், அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
2005ஆம் ஆண்டு ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு ஆகியோர் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கிய இப்படம் 700 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடி தமிழ் சினிமாவில் மிகப்பெரும் சாதனை படைத்தது.
இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குநர் பி.வாசு கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸை வைத்து இப்படத்தின் படப்பிடிப்பு முன்னதாகத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
சந்திரமுகி முதல் பாகத்தில் வித்யாசாகர் இசையில் பாடல்கள் ஹிட் அடித்த நிலையில், இரண்டம் பாகத்துக்கு பாகுபலி பட இசையமைப்பாளர் மரகதமணி ஒப்பந்தம் செய்யப்பட்டார். மேலும் ராதிகா சரத்குமார், வடிவேலு, ஸ்ருஷ்டி டாங்கே, சுரேஷ் மேனன், மஹிமா நம்பியார், என மிகப்பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்கிறார்.
இந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து படக்குழு எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியானது. இந்நிலையில், இந்த ஃபோட்டோவில் நடிகை லட்சுமி மேனன் இடம்பெற்றுள்ளது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.