தெரிந்து கொள்வோம் - பெண்களுக்கு ஏற்படும் கருப்பைவாய் புற்றுநோய்!

உலகளவில் பெண்களை அதிகமாக பாதிக்கக்கூடிய புற்றுநோய்களில் முதல் இடத்தில் மார்பக புற்றுநோயும், இரண்டாம் இடத்தில் கருப்பைவாய் புற்றுநோயும் உள்ளன.

குறிப்பாக கருப்பைவாய் புற்றுநோயால் வளர்ந்து வரும் நாடுகளான ஆப்பிரிக்கா, இந்தியா, லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த பெண்கள்தான் அதிகளவு பாதிக்கப்படுகிறார்கள்.

இந்தியளவில் தமிழகத்தில்தான் கருப்பைவாய் புற்றுநோய் பாதிப்பு அதிகளவில் காணப்படுகிறது. 2016ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில புற்றுநோய் பதிவேட்டின்படி கருப்பைவாய் புற்றுநோய் பாதிப்பில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தில் இருக்கிறது.

கருப்பைவாய் புற்றுநோய் பாதிப்பு குறித்தும், இந்தியாவில் அதற்கு இருக்கும் சிகிச்சை முறைகள் குறித்தும் விரிவாக தெரிந்துகொள்ள அடையார் புற்றுநோய் சிகிச்சை மையத்தின், புற்றுநோய் தடுப்பு பிரிவின் தலைவர் மருத்துவர் மல்லிகா அவர்கள் பதில்களை பார்க்கலாம்.

கருப்பைவாய் புற்றுநோய் என்றால் என்ன?

“பெண்களின் கர்ப்பப்பைக்கும், யோனிக்கும் இடையில் காணப்படும் ஒரு சிறிய வாய் பகுதியைத்தான் கருப்பைவாய் (cervix) என்கிறோம். இந்த சிறிய பகுதியில் ஏற்படும் புற்றுநோய்தான் கருப்பைவாய் புற்றுநோய் என கூறப்படுகிறது”.

இந்த புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது?

“HPV (Human Papillomavirus) என்னும் ஒருவகை வைரஸால்தான் 99.9% கருப்பைவாய் புற்றுநோய் ஏற்படுகிறது. HPV வைரஸ் என்பது மனிதர்களின் மீதும், விலங்குகளின் மீதும் பரவலாக காணப்படக்கூடிய சாதாரண வைரஸ் கிருமிதான். 150க்கும் மேற்பட்ட வகையிலான HPV வைரஸ்கள் இருக்கின்றன. அதில் குறிப்பிட்ட 15வகை வைரஸ்தான் பெண்களின் கருப்பையில் புற்றுநோயை உண்டாக்கக்கூடியது. அதிலும் HPV 16, HPV 18 வைரஸ் வகைதான் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுத்துவதில் முக்கியமானதாக இருக்கிறது”.

ஆண்களை இந்த வைரஸ் பாதிப்பது இல்லையா?

“HPV வைரஸ் ஆண்களையும் பாதிக்கலாம். ஆனால் பெண்களின் கருப்பைவாய் பகுதியில் இந்த வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு ஆண்களின் பிறப்புறுப்பு பகுதியில் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை. இந்த வைரஸால் ஆண்களுக்கு பிறப்புறுப்பு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 40-50 சதவிகிதம் மட்டுமே இருக்கிறது. ஆனால் அதுவே பெண்களுக்கு கருப்பைவாய் புற்றுநோய் ஏற்படுவதற்கு 99.9% வாய்ப்புகள் இருக்கிறது”.

பொதுவாக வாய் மற்றும் தொண்டை புற்றுநோய், ஆண்களின் மலவாய் மற்றும் பிறப்புறுப்பு புற்றுநோய், பெண்களின் கருப்பைவாய் தவிர மலவாய் பகுதி, பிறப்புறுப்பு பகுதி ஆகிய இடங்களில் புற்றுநோய் ஏற்படுவதற்கு இந்த HPV வைரஸ் காரணமாக இருக்கிறது.

HPV வைரஸ் கருப்பைவாய் புற்றுநோய் பாதிப்பை எப்படி ஏற்படுத்துகிறது?

“இந்த HPV வைரஸ் தொற்று என்பது பாலுறவு தொற்று நோயாக கருதப்படுகிறது. பொதுவாக மனிதர்களுடைய தோல்களின் மேற்பகுதியில் HPV வைரஸ் காணப்படுகிறது. இது உடலுறவின்போது சில நேரங்களில் பெண்களின் கருப்பைக்குள் நுழைகிறது. அப்படி கருப்பையில் தொற்றும் இந்த வைரஸ் கிருமியானது 80 – 90 சதவிகித பெண்களுக்கு தானாகவே குணமாகிவிடுகிறது. ஆனால் சிலருக்கு அப்படி நிகழ்வது இல்லை. சில பெண்களின் கருப்பைகளில் இந்த HPV வைரஸ் தங்கும்போது பின்னாளில் அது புற்றுநோய் உண்டாவதற்கு காரணமாக அமைகிறது”.

 

கருப்பைவாய் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்க முடியுமா?

“நிச்சயமாக முடியும்! புற்றுநோய் வகைகளிலேயே பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாகவே அதை கண்டுபிடித்து தடுக்கக்கூடிய வகையில் அமைந்திருக்கும் ஒரே புற்றுநோய் கருப்பைவாய் புற்றுநோய்தான். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் HPV வைரஸ் தொற்று ஏற்பட்ட பின் கிட்டதட்ட 15 முதல் 20 ஆண்டுகள் வரை கருப்பைக்குள் தங்கும் வைரஸ் மெதுவாகத்தான் புற்றுநோயாக உருமாற்றம் அடைகிறது. எனவேதான் அந்த இடைபட்ட காலங்களில் கருப்பைவாய் புற்றுநோய்கான பரிசோதனை முறைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போது வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தால் அதற்கு சிகிச்சையளித்து புற்றுநோய் ஏற்படுவதை முற்றிலும் தடுத்துவிடலாம்”.

எந்த வகையிலான பெண்கள் இதில் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்?

“இளம்வயதில் திருமணம் செய்துகொள்பவர்கள் அல்லது இளம்வயதில் உடலுறவில் ஈடுபடுபவர்கள் மற்றும் உடலுறவின்போது சரியான சுகாதார முறைகளை மேற்கொள்ளாத பெண்கள்தான் இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர். அதேபோல் இளம் வயதில் மீண்டும் மீண்டும் கருக்கலைப்பு செய்தவர்கள், அதிகமான குழந்தைகள் பெற்று கொள்பவர்கள், பலருடன் பாலியல் உறவில் ஈடுபடுபவர்கள், குறிப்பாக எச்.ஐ.வி., பாதித்தவர்களுடன் உறவு மேற்கொண்டவர்கள் போன்றவர்களுக்கும் கருப்பைவாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது”.

கருப்பைவாய் புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்ன?

“ஆரம்பகால புற்றுநோய் பொதுவாக எந்தவித அறிகுறிகளையும் ஏற்படுத்துவதில்லை. புற்றுநோய்க்கான அறிகுறிகள் நோய் முற்றிய நிலையில்தான் ஏற்படுகின்றன. அதிகமாக வெள்ளைப்படுதல், மாதவிடாய் இல்லாத சமயங்களிலும் ரத்தப்போக்கு ஏற்படுவது, உடலுறவுக்குப் பின் ரத்தப்போக்கு, இடுப்பு வலி, உடல் எடை குறைதல், சிறுநீர் மற்றும் மலம் கழித்தலின் போது பிரச்னைகள் போன்றவை இதன் அறிகுறிகளாக இருக்கின்றன”.

கருப்பை புற்றுநோயிலிருந்து தங்களை காத்துகொள்ள பெண்கள் என்ன செய்ய வேண்டும்?

“புற்றுநோய்கான அறிகுறிகள் வரும் வரை பெண்கள் காத்திருக்க கூடாது. 30 வயதிற்கும் மேற்பட்ட பெண்கள் தாங்களாகவே முன்வந்து இதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். 35வயதிற்கும் 45 வயதிற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பெண்கள் இந்த பரிசோதனைகளை குறைந்தபட்சம் இரண்டு முறை செய்து கொண்டாலே இந்த புற்றுநோய் பாதிப்பிலிருந்து தங்களை காத்துகொள்ளலாம்”.

கருப்பைவாய் புற்றுநோயை ஆரம்பகட்டத்திலேயே கண்டுபிடிக்கும் பரிசோதனை முறைகள் என்ன?

“HPV வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்பதை கண்டறிய `HPV DNA TEST` என்னும் பரிசோதனை முறைதான் பெரும்பாலும் மேற்கொள்ளப்படுகிறது. அதுதவிர செர்விக்கல் சைட்டாலஜி (PAP SMEAR), VIA-VILI போன்ற பரிசோதனை முறைகள் இருக்கின்றன. இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் VIA-VILI என்ற பரிசோதனை முறைதான் அதிகளவில் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு குறைவான பொருட்செலவு ஆகிறது என்பதுதான் காரணம். இந்த பரிசோதனை முறைகளில் `HPV DNA TEST` சிறந்த பரிசோதனை முறையாக கருதப்படுகிறது”.

பரிசோதனை முறையில் HPV வைரஸ் கிருமியோ அதனால் பாதிப்போ இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

“பரிசோதனையின்போது HPV வைரஸ் தொற்றோ அதற்கான பாதிப்போ இருப்பது கண்டறியப்பட்டால் அதற்கான எளிய சிகிச்சை முறைகளை மேற்கொள்ளலாம். HPV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்பைவாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான அறிகுறிகள் இருக்கிறதா என்பதை பரிசோதனையில் மருத்துவர்கள் உறுதி செய்வார்கள். புற்றுநோய்க்கு முந்தைய நிலை (Pre Cancer Stage) பாதிப்பு இருப்பது தெரியவந்தால் க்ரையோதெரபி (cryotherapy) அல்லது தெர்மோ கொயாகுலேஷன் (Thermocoagulation ) போன்ற சிகிச்சை முறைகளை மேற்கொண்டு புற்றுநோய் ஏற்படுவதை தடுக்க முடியும். இந்த பரிசோதனை முறைகளையும் சிகிச்சை முறைகளையும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே பெண்கள் எளிதாக மேற்கொள்ளலாம்”.

கருப்பைவாய் புற்றுநோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டால் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் என்ன?

“கருப்பைவாய் புற்றுநோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டால் அதற்கு அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு, கீமோதெரபி போன்ற சிகிச்சை முறைகள் இருக்கின்றன”.

இதற்கு தடுப்பு மருந்துகள் இருக்கிறதா?

“2000ஆம் ஆண்டு காலகட்டங்களில் இருந்தே இந்த தடுப்பு மருந்துகள் பயன்பாட்டில் இருக்கின்றன. மேலும் தற்போது இந்த தடுப்பு மருந்துகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு வருகின்றன. 9 – 15 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு இந்த தடுப்பு மருந்துகள் செலுத்தும்போது அதிகமான பலன்கள் கிடைக்கின்றன. இந்த வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மருத்துவர்களின் ஆலோசனைகளோடு புற்றுநோய் தடுப்பு மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் தடுப்பு மருந்துகள் எடுத்துக் கொண்டாலும் பரிசோதனை முறைகளை மேற்கொள்வதும் அவசியம்”.

விழிப்புணர்வு ஏற்படுத்துவது எப்படி?

“தொலைக்காட்சிகள், பொது இடங்கள் மற்றும் அனைத்து ஊடகங்களின் வாயிலாகவும் கருப்பைவாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு விளம்பரங்களை அதிகளவில் மேற்கொள்ள வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் அனைத்து அரசு மருத்துவ சேவை நிலையங்களிலும் பெண்கள் எளிதாக கருப்பைவாய் புற்றுநோய் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் மற்றும் அதற்கான சிகிச்சைகள் எடுத்துகொள்ளவும் போதிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும்”.