பங்குச்சந்தையில் யானை போல் நகர்ந்த LIC பங்குகள், உச்சத்தை அடைந்துள்ளது..

எல்ஐசி கொடுத்த இன்ப அதிர்ச்சி.. எல்லாம் நரேந்திர மோடி செய்த மேஜிக்..! இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) வெற்றியைப் பிரதமர் நரேந்திர மோடி ராஜ்யசபாவில் வெளிப்படையாகப் பேசிய அடுத்த நாளே மும்பை பங்குச்சந்தையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்த உயர்வுக்கு மோடியின் பேச்சு மட்டும் தான் காரணமா..? என்ற கேள்வியும் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி பங்குகள் இன்று 9.5% உயர்ந்து புதிய 1,144 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஐசிஐசிஐ வங்கி மற்றும் இன்ஃபோசிஸ் போன்ற மாபெரும் நிறுவனங்களை ஓரம்கட்டி இந்தியாவின் நான்காவது அதிக மதிப்புடைய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. நீண்ட காலத்திற்குப் பின்பு எல்ஐசி முதலீட்டாளர்களுக்கு அவர்களுடைய எல்ஐசி ஐபிஓ முதலீட்டிற்குப் பலன் கிடைத்துள்ளது. 

இன்றைய வளர்ச்சியின் மூலம் எல்ஐசி நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு வியாழக்கிழமை வர்த்தகத்தில் முதல் முறையாக ரூ.7 லட்சம் கோடியைத் தாண்டியது.முதலீட்டாளர்களால் மெதுவாக நகரும் யானை எனக் கிண்டலடித்து வரும் காலம் இனி மலையேறிவிட்டதாகக் கூறப்பட்டாலும், இதன் நிலையைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள முடியுமா என்பது அடுத்த முக்கியமான கேள்வியாக உள்ளது. ஆயுள் காப்பீட்டுத் துறையின் முன்னோடியாக இருக்கும் எல்ஐசி, அதன் சந்தை மதிப்பு ரூ.7.24 லட்சம் கோடியை எட்டியது.இன்றைய வர்த்தக முடிவில் எல்ஐசி நிறுவனத்தின் பங்கு விலை 5.86 சதவீத உயர்வுடன் 1106.25 ரூபாயாக உள்ளது. 

இன்று அதிகப்படியாக 1144.45 ரூபாய் வரையில் உயர்ந்தது, இதன் சந்தை மதிப்பு 6,99,702.87 கோடி ரூபாயாக உள்ளது. எல்ஐசி பங்குகளின் முக மதிப்பு 10.ஐசிஐசிஐ வங்கி மற்றும் இன்ஃபோசிஸ் இரண்டின் சந்தை மதிப்பு ரூ.7 லட்சம் கோடி அளவில் இருக்கும் வேளையில், எல்ஐசி இவ்விரு நிறுவனங்களையும் முந்தியுள்ளது. இந்தியாவில் அதிக மதிப்புடைய பங்குகளின் பட்டியலில், HDFC வங்கி (ரூ. 10.72 லட்சம் கோடி), டிசிஎஸ் (ரூ. 15.1 லட்சம் கோடி) மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ரூ. 19.5 லட்சம் கோடி) ஆகியவற்றைப் பின் எல்ஐசி 4வது இடத்தில் உள்ளது.அதிக மதிப்புடைய நிறுவனங்கள் பட்டியலில் டாப் 5 இடத்திற்குள் ஒரு அரசு நிறுவனம் இருப்பது மிகவும் முக்கியமானதாகும்.எல்ஐசி பங்குகளின் மதிப்பு உயர்ந்ததைத் தொடர்ந்து, இத்துறையில் இருக்கும் பிற பட்டியலிடப்பட்ட நிறுவனங்களைக் கவனிக்க வேண்டியது மிகவும் முக்கியம். 

அந்த வகையில் ஹெச்டிஎஃப்சி லைஃப் 1.3 லட்சம் கோடி ரூபாய், எஸ்பிஐ லைஃப் 1.49 லட்சம் கோடி ரூபாய், ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் 76,000 கோடி ரூபாய்.சமீபத்தில் எல்ஐசி நிறுவனம், ஹெச்டிஎப்சி வங்கியில் தனது முதலீட்டை 9.9 சதவீதம் வரையில் உயர்த்த ஒப்புதல் பெற்றதில் இருந்து எல்ஐசி மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள் உயர்வுடன் காணப்படுகிறது.நாட்டின் மிகப் பெரிய உள்நாட்டு ஆயுள் காப்பீட்டு நிறுவனம் தனது புதிய தயாரிப்பான எல்ஐசி இன்டெக்ஸ் பிளஸ் திட்டத்தைப் பிப்ரவரி 6, 2024 முதல் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு உள்ளது. இருவிரு காரணத்தால் எல்ஐசி பங்குகள் முதலீட்டில் லாபத்தைப் பெற்று வந்த முதலீட்டாளர்களுக்கு மோடியின் பேச்சால் கூடுதல் லாபம் கிடைத்துள்ளது.