நுரையீரலை வலுவாக்கும் யோகாசனங்கள்!

நுரையீரல் நமது உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். இவை நமது உடலின் அனைத்து பகுதிகளுக்கும் சுத்தமான ஆக்ஸிஜனை வழங்குவதற்கு வேலை செய்கின்றன. எனவே, ஆரோக்கியமான உடலுக்கு, ஆரோக்கியமான நுரையீரல் இருப்பது மிகவும் அவசியம். ஆனால் தற்காலத்தில் தவறான உணவுப் பழக்கவழக்கங்களாலும், தவறான வாழ்க்கை முறையாலும் நுரையீரல் இளம் வயதிலேயே பலவீனமடைகிறது. நுரையீரலில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், சுவாச பிரச்சனைகள் மற்றும் பல தீவிர நோய்களை சந்திக்க நேரிடும். நுரையீரலை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்க யோகா ஒரு சிறந்த வழி. யோகாவின் வழக்கமான பயிற்சி நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இந்நிலையில், நுரையீரலை வலுவாக வைத்திருப்பதில் நன்மை பயக்கும் 3 யோகாசனங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

புஜங்காசனம்

யோகாசனங்களில் ஒன்றான புஜங்காசனம் ஒரு எளிமையான மற்றும் சூரிய நமஸ்காரத்தின் 7 ஆவது யோக நிலையாகும். இந்த நிலையானது பாம்பு படமெடுத்து இருப்பது போன்று இருக்கும். சமஸ்கிருதத்தில் புஜங்கா என்றால் பாம்பு என்றும், ஆசனம் என்றால் நிலை என்று பொருள். இந்த புஜங்காசனத்தின் போது மார்பு, கழுத்து, தோள்பட்டை போன்ற பகுதிகளை விரிவடையச் செய்யும். நுரையீரல் ஆரோக்கியத்தை (Lungs Health) மேம்படுத்தும்.

1. இந்த யோகாசனத்தை செய்ய, முதலில் யோகா பாயில் உங்கள் வயிற்று பகுதி தரையில் படும்படி குப்புற படுத்துக் கொள்ளுங்கள்.

2. பின் கைகளை மடக்கி, உள்ளங்கைகளை மார்புக்கு அருகில் இரண்டு புறமும் வைத்துக் கொள்ள வேண்டும்

3. இப்போது மெதுவாக உள்ளிழுக்கும்போது, உங்கள் மார்பை மேல்நோக்கி உயர்த்தவும். பின்னோக்கி வளைய வேண்டும்.

4. அதன் பிறகு மெதுவாக உங்கள் வயிற்றை உயர்த்தவும். இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.

5. இப்போது மூச்சை வெளியேற்றும் போது, மெதுவாக தலையை தரையை நோக்கி தாழ்த்தி இஅய்ல்பான நிலைக்கு வரவும். நீங்கள் இந்த செயல்முறையை 3-5 முறை செய்யலாம்.

உஸ்ட்ராசனம்

உஸ்ட்ராசனம் (ஒட்டக நிலை) பல நன்மைகளைக் கொண்ட ஆசனமாகும். இந்த ஆசனத்தை உடலின் நடுப்பகுதியை பின்னோக்கி வளைப்பதன் மூலம் செய்யலாம். தோள், மார்பு, இடுப்பை வலுப்படுத்த விரும்பினால், நீங்கள் உஸ்ட்ராசனம் செய்ய வேண்டும். இதை செய்யும்போது நுரையீரல் நன்கு திறப்பதோடு, முதுகுத்தண்டில் நெகிழ்வுத்தன்மையையும் அதிகரிக்கிறது. இதை எப்படி செய்யவேண்டும் என்று காணலாம்.

1. இந்த யோகா ஆசனத்தை செய்ய, யோகா பாயில் முழங்காலில் உட்கார்ந்து கொள்ளுங்கள்.

2. உங்கள் இரு கைகளையும் உங்கள் இடுப்பில் வைக்கவும்.

3. இப்போது ஒரு ஆழமான மூச்சை எடுத்து, கீழ் முதுகுத்தண்டில் முன்னோக்கி அழுத்தம் கொடுக்கவும்.

4. இதன் போது, தொப்புளில் முழுமையான அழுத்தத்தை உணர வேண்டும்.

5. இதற்குப் பிறகு, உங்கள் கைகளால் கால்களைப் பிடித்து, இடுப்பை பின்னோக்கி வளைக்கவும்.

6. இந்த நிலையில் 30-60 விநாடிகள் காத்திருக்கவும். பிறகு மெதுவாக இயல்பு நிலைக்கு வரவும். இந்த ஆசனத்தை 3-5 முறை செய்யவும்.

திரிகோணாசனம்

திரிகோணாசனம் நுரையீரலை வலுப்படுத்துவதோடு, உடலிலுள்ள நாடி நரம்புகளை எல்லாம் இயக்கி, உடலை சுறுசுறுப்புடன் வைத்திருக்கும் சிறந்த பலன்களை தரும் யோகாசனம்.

1. இந்த யோகாசனம் செய்ய முதலில் யோகா பாயில் நேராக நிற்கவும்.அந்த நேரத்தில் உங்கள் கைகள் இரு பக்கவாட்டில் இருக்க வேண்டும். உங்கள் கால்கள் 45 அங்குல அல்லது குறைந்தபட்சம் 30 அங்குல இடைவேளையில் இருக்கவேண்டும்.

2. இரண்டு கைகளையும் தோளுக்கு இணையாக உயர்த்தி உள்ளங்கை தரையைப் பார்ப்பது போல நிற்கவும்.

3. அதே நிலையில் வலது புறமாக வளைந்து வலது கையால் வலது பாதத்தை தொடவும். இந்த நிலையில் முழங்காலை மடக்குவது, இடுப்பை அசைப்பது கூடாது. இப்போது இடது புறமாக வளைந்து இதே முறையில் இடது பக்கம் செய்ய வேண்டும்.

4. இந்த நிலையில் சிறிது நேரம் இருங்கள். அதன் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பவும்.
இந்த ஆசனத்தை 3-5 முறை செய்யவும்.