சென்னை மெரினா கடற்கரை இன்று முதல் வரும் 6 ஆம் தேதி வரை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மெரினா பகுதியில் ட்ரோன் உள்ளிட்ட ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று இன்று முதல் வரும் 8 ஆம் தேதி வரை சென்னை விமான நிலைய விமான கால அட்டவணையும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் வரும் 6 ஆம் தேதி வான் சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. விமானப்படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர் என் ரவி, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், விமானப்படை தலைவர், ராணுவ உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதற்கான பாதுகாப்பு பணிகள் மற்றும் சாகச ஒத்திகை நிகழ்ச்சிகள் இன்று முதல் வரும் 5 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
எனவே பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக இன்று முதல் வரும் 6 ஆம் தேதி வரை சென்னை மெரினா கடற்கரை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று முதல் 6 ஆம் தேதி வரை 6 நாட்கள் சென்னை மெரினா கடற்கரையில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணமாக சென்னை விமான நிலைய விமான கால அட்டவணையும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 8 ஆம் தேதி வரை பல்வேறு இடைவெளிகளில் சென்னை விமான நிலைய வான் தடம் மூடப்பட உள்ளது. இன்று பிற்பகல் 1.45 மணி முதல் மாலை 3.15 மணி வரை விமான நிலைய வான் தடம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 2, 3, 5, 6, 7, 8 ஆகிய தேதிகளில் கூடுதல் இடைவெளிகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய தகவல்களுக்கு சென்னை விமான நிறுவனங்களை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.