100வது ஆண்டை கொண்டாடும் MG மோட்டார்ஸ்! - வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு

மோரிஸ் கராஜ் பெயர் சந்தையில் தெரிந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டது. மிகவும் பழமையான கார் நிறுவனம் என்ற பெயரை வைத்திருக்கும் நிறுவனம் தற்போது தனது நூற்றாண்டு விழாவை வாடிக்கையாளர்களுடன் கொண்டாட திட்டமிட்டுள்ளது. இதன் இந்தியக் கிளையான எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகள், தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. “100 years of Driving Smiles” என்று இந்த நிகழ்வை எம்ஜி மோட்டார்ஸ் நடத்துகிறது.

100வது ஆண்டுவிழா கொண்டாட்டங்கள் குறித்து பேசிய எம்ஜி மோட்டார் இந்தியாவின் துணை நிர்வாக இயக்குநர் கவுரவ் குப்தா, “நூற்றாண்டு கால பயணத்தில் எம்ஜி நிறுவனம் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், இந்த மைல்கல்லை எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுடன் கொண்டாடுவதில் முழு மகிழ்ச்சி அடைகிறேன். நம்பமுடியாத இந்தப் பயணத்தில் முக்கியமாகத் இருந்தது, வாடிக்கையாளர் சேவைக்கு அர்ப்பணிப்புள்ள பிராண்டாக செயல்பட்டது தான். இந்த முயற்சி எங்கள் வாடிக்கையாளர்களிடையே நிறுவனத்துடன் ஏற்பட்ட உறவை மேம்படுத்தும். இந்த மைல்கல்லை அவர்களுடன் கொண்டாடி, அனுபவத்தை மேம்படுத்தும் சலுகைகளை வழங்குவதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. சாதனைகள், மைல்கற்கள், உற்சாகம், என்று புதுமைகளின் எதிர்காலம் நிறைந்த இந்த பயணத்தை நினைவுகூருவதில் எங்களுடன் சேருங்கள்,” என்று தெரிவித்துள்ளார்.

MG மோட்டார் இந்தியா ZS EV, சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Comet EV மூலம் இந்திய எலெக்ட்ரிக் கார் சந்தையில் முன்னணி போட்டியாளர்களில் ஒருவராக தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளது. காமெட் நாட்டில் விற்பனையாகும் மலிவு விலை மின்சார கார்களில் ஒன்றாக உள்ளது. நாடு முழுவதும் எலெக்ட்ரிக் சார்ஜிங் நிலையங்களை அமைப்பதில் எம்ஜி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. எம்ஜி மோட்டர்ஸ் ஆஸ்டர், ஹெக்டர், ஹெக்டர் பிளஸ், குளோஸ்டர் எஸ்யூவிகளை உள்ளடக்கி உள்ளது.

டாடா நானோ போல சிறிய அளவு காரான எம்ஜி காமெட்டை பலர் தற்போது விளம்பரப்படுத்தி வருகின்றனர். இந்த வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8 லட்சம் முதல் தொடங்குகிறது. இதில் 17.3 கிலோவாட் பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 230 கிலோமீட்டர் வரை வாகனத்தைச் செலுத்தலாம் என எம்ஜி தெரிவிக்கிறது. வாகனத்தின் செயல்திறன் 41.42 பிஎச்பி ஆக இருக்கிறது. பேஸ், ப்ளே, ப்ளஷ் என பல வேரியண்ட்டுகளின் இந்தக் காரை நிறுவனம் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. 110nm டார்க்கை காமெட் வெளிப்படுத்துகிறது.

டாடா நிறுவனத்தின் பிரபலமான டியாகோ எலெக்ட்ரிக் காருக்கு இது நேரடி போட்டியாக வருகிறது என்று கூறப்படுகிறது. மின்சார கார் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வரும் டாடா நிறுவனத்துடன் போட்டி போட பல நிறுவனங்களும் புதிய ஈவி கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். பண்டிகை காலம் என்பதால் போட்டி இன்னும் அதிகமாக சூடுபிடித்துள்ளது. அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள எம்ஜி நிறுவனமும் பல சலுகைகள், புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்துவருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக உதிரி பாகங்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடி, மதிப்புக்கூட்டப்பட்ட சேவைகளுக்கு 40 சதவிகிதம் தள்ளுபடி, நீட்டிக்கப்பட்ட வாரண்டி, இலவச வாகன சர்வீஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது. இந்த சலுகைகளை வாடிக்கையாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்களில் அல்லது MY MG மொபைல் செயலியில் பெறலாம்.