சென்னை : ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு உருவாக்கிய திராவிட இனவாதம் என்ற கட்டுக்கதையே திமுகவின் வரலாறு என பாஜக மகளிரணி தேசியத் தலைவியும், கோவை சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை, தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவக் கல்லூரியில் நடந்த இந்திய வரலாற்று காங்கிரஸ் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அப்போது அவர், “கற்பனை கதைகளை சிலர் வரலாறாக சொல்லிக் கொண்டிருக்கின்றனர். நம்பி ஏமாந்து விடக்கூடாது. இன்று நாட்டை சூழ்ந்துள்ள ஆபத்து, வரலாற்று திரிபுதான்” என பேசி உள்ளார்.
தமிழக முதல்வரின் இந்த வரிகளோடு அப்படியே நான் உடன்படுகிறேன். இந்த வரிகளை அவர் கண்ணாடி முன்பு நின்று தனக்குத் தானே பேசியிருக்க வேண்டும்.
ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு உருவாக்கிய கட்டுக் கதைதான் திராவிட இனவாதம். அதுதான் திமுகவின் அடிப்படைக் கொள்கை.
ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியின் விளைவாக உருவானதுதான் நீதிக் கட்சி. அதுவே பின்னாளில் தி.க, தி.மு.க. ஆனது.
தமிழகத்தில் நீதிக் கட்சி செல்வாக்கு பெற ஆரம்பித்த பின், சுதந்திரப் போராட்டமே நீர்த்துப் போக துவங்கியது. அதனால்தான் 1947ல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த நாளை கருப்பு தினமாக ஈவெரா அறிவித்தார்.
ஈவெராவுக்கு யுனஸ்கோ விருது கிடைத்ததாக ஒரு கட்டுக் கதையை பரப்பி, அதனை பாடப் புத்தகத்திலும் இடம்பெறச் செய்தவர்கள்தான் திமுகவினர். இதுதான் திமுகவின் உண்மையான வரலாறு. என்னதான் திமுகவினர் மறைத்தாலும் உண்மைதான் இறுதியில் வெல்லும். இனம், மொழி வெறியைத் தூண்டி, குடும்ப அரசியலை நீண்ட காலத்திற்கு நடத்த முடியாது என்பதை திமுகவினர் உணர வேண்டும். என அவர் காட்டமாக கூறியுள்ளார்.