இசையமைப்பாளராகும் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இதுகுறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. ‘ரோஜா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். அன்று தொடங்கிய இவரது இசைப்பயணம் புயலாய் தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கியது என சொல்லலாம். அதனால் இசைப்புயல் என்ற அடைமொழியோடு ஏ.ஆர்.ரஹ்மான் அழைக்கப்படுகிறார். வரலாற்று படமாக இருந்தாலும் சரி, சயின்ஸ் பிக்ஷன் படமாக இருந்தாலும் சரி, காதல் படமாக இருந்தாலும் சரி தனது அபாரமான இசையால் ரசிகர்களை அப்படியே கட்டிப்போட்டு விடுவார் ரஹ்மான்.

அடுத்ததாக அவரது இசையில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘மாமன்னன்’ படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் வடிவேலு, ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படியான நிலையில் ரசிகர்களை மேலும் மகிழ்விக்கும் வகையில் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். ஏற்கனவே அவரது மகன் அமீன் பாடகராக கலக்கிவரும் நிலையில், கதீஜாவும் பாடகியாக தனது திறமையை நிரூபித்து வருகிறார்.

இருவரும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்களை பாடியுள்ளனர். இதில் கதீஜாவும் ‘எந்திரன்’ படம் முதல் ‘மாமன்னன்’ படம் வரையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் பாடியுள்ளார். ரியாசுதீன் ஷேக் என்கிற சவுண்ட் இன்ஜினியரை தான் கதீஜா திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் இவர் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். தமிழில் ‘பூவரசம் பீப்பீ’, ‘ஏலே’, ‘சில்லு கருப்பட்டி’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள ‘ஹலீதா ஷமீம்’ அடுத்ததாக ‘மின்மினி’ என்னும் படத்தை எடுத்து வருகிறார்.

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில், “மின்மினி படத்தில் கதீஜா ரகுமானுடன் பணியாற்றுவது மகிழ்ச்சியளிப்பதாகவும், அவர் சிறந்த பாடகி மட்டுமல்ல, இசையமைப்பாளரும் கூட என தெரிவித்துள்ளார். மேலும் சிறந்த இசை வந்து கொண்டிருக்கிறது என ஹலீதா ஷமீம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கதீஜாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.