இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை பிரிந்து விட்டதாக மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். இதன் மூலம் அவர்களது 29 ஆண்டு கால திருமண வாழ்க்கை முறிந்துள்ளது.
இசைப்புயல் என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், சினிமாவில் பல சாதனைகளை படைத்துள்ளார். எத்தனையோ விருதுகளை பெற்று பெருமை சேர்ந்த ஏ.ஆர்.ரகுமான், ஆஸ்கார் விருது வென்று இந்தியர்களுக்கு பெருமை சேர்த்தார்.
ஏ.ஆர்.ரகுமானுக்கும், சாய்ரா பானுவுக்கும் 1995-ம் ஆண்டு சென்னையில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கதீஜா, ரஜீமா என்ற 2 மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர்.
சினிமா தாண்டி பொதுவெளியில் மிகவும் அன்பான தம்பதியாக ஏ.ஆர்.ரகுமான் – சாய்ரா பானு வலம் வந்தனர். இருவரும் ஒருவரையொருவர் எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காமல் காதலை பகிர்ந்து வந்தனர்.
இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமானை விட்டு பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு நேற்று இரவு அறிவித்தார்.
இருவருக்கும் இடையே நிரப்ப முடியாத இடைவெளி ஏற்பட்டுள்ளதால் இந்த விவாகரத்து முடிவை எடுத்திருப்பதாகவும், ஏ.ஆர்.ரகுமானுடனான தனது திருமண பந்தத்தை முறித்து கொள்வதாகவும் சாய்ரா பானு அறிவித்தார்.
இருவரும் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்தாலும் கூட சிரமம் மற்றும் பதற்றங்கள் இருவருக்கும் இடையே தீர்க்க முடியாத இடைவெளியை ஏற்படுத்தி விட்டது என்றும், இந்த கடினமான காலக்கட்டத்தில் மக்களிடம் இருந்து தனியுரிமை மற்றும் புரிதலை வேண்டுகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் ஏ.ஆர்.ரகுமான் – சாய்ரா பானு இடையேயான 29 ஆண்டு கால திருமண வாழ்வு முறிந்துள்ளது. இந்த அறிவிப்பு திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தனுஷ், ஜெயம் ரவி, ஜி.வி.பிரகாஷ் என நட்சத்திரங்களின் விவாகரத்து வரிசையில் தற்போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. தன்னை பிரிவதாக சாய்ரா பானு அறிவித்துள்ள நிலையில், ஏ.ஆர்.ரகுமான் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
எப்போதுமே சினிமா பிரபலங்கள் விவாகரத்து முடிவில் இருக்கும் சமயம் சண்டை, சச்சரவு, தகராறு, மோதல் என அரசல் புரசலாக ஏதாவது ஒரு தகவல் வெளியாகும். ஆனால் ஏ.ஆர்.ரகுமான் – சாய்ரா பானு இடையே இதுவரை எந்த சண்டையும், வாக்குவாதமும் ஏற்பட்டதாக யாருமே அறியாத நிலையில், திடீரென சாய்ரா பானுவின் இந்த பிரிவு அறிவிப்பு நேற்று இந்திய சினிமாவிலேயே பரபரப்பை ஏற்படுத்தியது.