அரசுப் பள்ளிகளை தனியார் பங்களிப்போடு மேம்படுத்தும் முன்னோடித் திட்டமான ‘நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்’ திட்டத்தை கடந்த திங்கள்கிழமை (19.12.2022) அன்று தொடங்கி வைத்ததோடு, இந்தத் திட்டத்துக்காக தனது சொந்த நிதியாக ரூ.5 லட்சத்தினையும் வழங்கியுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு குழந்தைக்கும் குதூகலமான, பொருள் பொதிந்த தரமான கல்வியை உறுதிப்படுத்த வேண்டும் என்பதை இலக்காக கொண்டு, பள்ளிக் கல்வித் துறை தொடங்கியுள்ள இத்திட்டத்தை வரவேற்கிறோம்.. ஆதரவளிக்கிறோம்…
அதேசமயத்தில், தமிழ்நாட்டில் உள்ள மொத்த அரசுப் பள்ளிகளான 37,431ல் இயற்கை உந்துதலை கழிக்க கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் 2000த்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் இயங்கி வருவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமல் தரமான கல்விக்கு வித்திடுவதால் மட்டுமே நாளைய வெற்றிக்கு வழிவகுத்துவிட முடியாதென்பது பள்ளிக் கல்வித் துறைக்கு தெரியாததல்ல.
ஏனெனில், பள்ளிகளில் பெஞ்ச்சுகளோ, எழுத மேஜைகளோ இல்லையென்றால்கூட, தரையில் அமர்ந்து சமாளித்துக் கொள்வார்கள் மாணவர்கள்.
ஆனால், இயற்கை உபாதைகளை கழிக்க ஒவ்வொரு மாணவியும், மாணவனும் ஒதுங்கும் இடம் தேடி அலைந்து கொண்டிருந்தால் அவர்களால் படிப்பில் எப்படி கவனம் செலுத்த முடியும்?
பள்ளிகளில் கழிப்பிட வசதிகள் இல்லாமல் கட்டிடம் கட்டுவது, சக்கரம் இல்லாத சைக்கிள்களையும், இஞ்சின் இல்லாத கார்களையும் தயாரிப்பதற்கு நிகரானதாகும்.
எனவே, பள்ளிகளுக்கு கட்டிடம் கட்டி கொடுக்கும்போதே, மாணவர்களுக்கு தேவையான சேதமடையாத கழிப்பறைகளையும் கட்டிக் கொடுக்க வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்புமாகும்.
ஆகவே, நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன் மூலம் பொதுமக்கள் மற்றும் பெரு நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் தொகையை, முதலில் கழிப்பறை வசதிகள் இல்லாத 2000க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு செலவிடப்பட வேண்டும் என்பதே அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
அதேபோல், இத்திட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த ஐங்குணம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, அப்பள்ளியின் ஆசிரியை ஆனி ரீட்டா என்பவர் 6 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மாணவிகளுக்கு 8 கழிவறைகளும், ஆசிரியர்களுக்கு 2 கழிவறைகளும் என மொத்தம் 10 கழிவறைகளை தனது சொந்த செலவில் கட்டிக் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து, தான் இப்பள்ளியின் ஆசிரியையாக சேர்ந்த காலத்தில் இருந்தே கழிவறை வசதி சரிவர இல்லாததாலும், முறையான கழிவறை வசதி இல்லாததால் மாணவிகள் பாதியிலேயே படிப்பைக் கைவிடும் நிலைக்கு ஆளாகியுள்ளதாலுமே தான் இப்பள்ளிக்கு டாய்லெட் கட்டி கொடுக்க முன்வந்ததற்கான காரணமாக தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளி ஆசிரியை ஆனி ரீட்டாவின் இந்த மெச்சத்தகுந்தப் பணியைப் பாராட்டும் அதேசமயத்தில், நன்கொடையாளர்களும், நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷனும் இதற்கு முன்னுரிமை அளித்தால் மட்டுமே இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
மாணவர்களின் இதுபோன்ற அடிப்படைத் தேவைகளில் கூடுதல் கவனம் செலுத்தினால், தற்போது தரமானக் கல்வியை வழங்குவதில் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தில் இருக்கும் தமிழகம், மிக விரைவிலேயே முதல் இடத்திற்கு முன்னேறிவிடும்.
கூடுதல் கவனம் செலுத்துவார்களா… பொறுத்திருந்து பார்ப்போம்.