நவராத்திரி வரலாறு மற்றும் வழிபாட்டு முறை!!

சும்பன், நிசும்பன் என்ற அண்ணன், தம்பி இருவரும், அரக்கர்கள். அவர்களது ஆட்சியின் கொடுமை தாங்காமல், மக்கள் தவித்திருக்கின்றனர். இந்த அரக்கர்களை எப்படியாவது அழித்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று மும்மூர்த்திகளான சிவபெருமான், விஷ்ணு, பிரம்மா ஆகியோரிடம் தேவர்கள் முறையிடுகின்றனர்.
மும்மூர்த்திகளும், மகாசக்தியைத் தோற்றுவித்து, அவளுக்குத் தங்களது சக்தியையும், ஆயுதங்களையும், வாகனங்களையும் அளித்தனர்.தேவி, அழகிய பெண் உருவம் எடுத்துப் பூலோகத்திற்கு வந்தாள்.

அரக்கர்களின் வேலையாட்களான சண்டன், முண்டன் இருவரும் இந்த அழகுப் பதுமையான மகாசக்தியைப் பார்த்ததும், தங்களது அரசர்களுக்கு ஏற்றவள் இவள் என முடிவு செய்து, தேவியிடம், தங்களது ராஜாக்களில் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினர்.

அப்போது தேவி, “யார் என்னைப் போரில் வெல்கின்றனரோ, அவர்களைத்தான் நான் மணப்பேன்’ என்று தான் சபதம் செய்திருப்பதாகத் தெரிவிக்கிறாள். அதற்குச் சண்டனும், முண்டனும், “தேவர்கள், அசுரர்கள் எல்லாருமே, எங்கள் ராஜாக்களுக்கு அடிமை. சாதாரண பெண்ணான நீ எங்களிடம் வீணாகப் பேசுவதா? பேசாமல் எங்களுடன் வா…” என்றனர்.

அதற்கு தேவி, “நான் தெரிந்தோ, தெரியாமலோ சபதம் செய்து விட்டேன். நீங்களிருவரும் உங்கள் அரசர்களிடம் சொல்ளுங்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்டு வாருங்கள்…” என்றாள்.
இதை சும்பன், நிசும்பன்களிடம் சொன்னதும், இருவரும் தங்களது படையிலிருக்கும் அசுரர்கள் ஒவ்வொருவராக அனுப்பினர்.

அவர்கள் அனைவரையும் தேவி அழித்தாள். அதில், ரக்த பீஜன் என்று ஒரு அரக்கன். அவன் கடுந்தவம் செய்து, அவன் உடம்பிலிருந்து விழும் ஒவ்வொரு சொட்டு இரத்தத்திலிருந்தும், மீண்டும் ஒரு ரக்த பீஜன் தோன்றுவான் என்றும், அவனும் ரக்த பீஜன் போலவே ஆற்றலுடன் இருப்பான் என்றும் ஒரு வரம் பெற்றிருந்தான்.
தேவி ரக்த பீஜனை அழிக்கத் துவங்கிய போது, கீழே விழும் ஒவ்வொரு துளி ரத்தத்திலும், ஒரு ரக்த பீஜன் தோன்றிக் கொண்டேயிருந்தான். அதனால் உலகமே ரக்த பீஜர்களால் நிறைந்தது. இதைக் கண்ட தேவி, தன்னிடம் உள்ள சாமுண்டி என்ற காளியை, வாயை அகலமாகத் திறந்து, ரக்த பீஜனின் உடம்பிலிருந்து விழும் ஒவ்வொரு துளி ரத்தத்ததையும் குடித்து விடச் சொன்னாள்.

சாமுண்டியும், தேவியின் கட்டளையை நிறைவேற்றினாள். கடைசியில் ரக்த பீஜன் தன் ரத்தமெல்லாம் வெளியேறி, இறந்து போனான். கடைசியாக சும்பன், நிசும்பன் இருவரும் தேவியால் அழிக்கப்படுகின்றனர். அவள் வெற்றி பெற்ற தினமே விஜயதசமி. ஒன்பது நாட்கள் போர் விடாமல் நடந்தது. அதனாலேயே நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம்.

நவராத்திரி வழிபாட்டு முறை

நவராத்திரி நாட்களில் அம்பிகையை ஒவ்வொரு நாளும் ஒரு உணவைப் படைத்து ஒவ்வொரு தேவியாக வணங்க வேண்டுமென்கிற நடைமுறை வழக்கத்திலிருக்கிறது. அதன்படி.,

முதல் நாள் சாமுண்டி சர்க்கரைப் பொங்கல்
இரண்டாம் நாள் வராஹி தேவி தயிர்ச்சாதம்
மூன்றாம் நாள் இந்திராணி வெண்பொங்கல்
நான்காம் நாள் வைஷ்ணவி தேவி எலுமிச்சை சாதம்
ஐந்தாம் நாள் மகேஸ்வரி தேவி புளியோதரை
ஆறாம் நாள் கவுமாரி தேவி தேங்காய்ச் சாதம்
ஏழாம் நாள் மகாலட்சுமி கற்கண்டு சாதம்
எட்டாம் நாள் நரசிம்ஹி சர்க்கரைப் பொங்கல்
ஒன்பதாம் நாள் ப்ராஹ்மி அக்கர வடசல், சுண்டல் படைக்க வேண்டும் என்பதே ஐதீகம்.