திருப்பூரை மையமாக கொண்டு இயங்கும் நியூ எனர்ஜி வேகன் நிறுவனம் சார்பில் ‘டைகர் இவி 200’ என்ற புதிய மின்சார கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் ராஜ் சிவநாதம், டயானா ராபர்ட் ஆகியோர் கூறியதாவது: ‘டைகர் இவி 200’ மின்சார கார் இரு வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், ஒரு வகை ரூ.9.86 லட்சம் ஆகும். இதை 9 மணி நேரம் சார்ஜ் செய்தால் 230 கி.மீ பயணிக்கலாம். மற்றொரு வகை ரூ.13.93 லட்சம் ஆகும்.
சொகுசான இந்த காரை ஒரு மணி நேரம் சார்ஜ் செய்தால் 369 கி.மீ பயணிக்கலாம். உயர்தர லித்தியம் பேட்டரி இந்த கார்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது. மின்சார கார்களில் தற்போது இருப்பதிலேயே இவைதான் குறைந்த விலையில், அதிக வசதிகள் உள்ள கார்கள் ஆகும். 8 வித நிறங்களில் இவை கிடைக்கும்.
பயணிகளின் பாதுகாப்புக்காக இரண்டு ஏர் பேக்குகள், ஏபிஎஸ் உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்றுள்ளன. பயணிகள் அமர விசாலமான இட வசதி உள்ளது. உறுதியான கட்டமைப்புடன் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் மணிக்கு 110 கி.மீ வேகத்தில் செல்ல முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.