நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையானே… (அக்னி தல வரலாறு)


Notice: A non well formed numeric value encountered in /home/mindvoice/public_html/wp-content/plugins/elementor/includes/libraries/bfi-thumb/bfi-thumb.php on line 748

Notice: A non well formed numeric value encountered in /home/mindvoice/public_html/wp-content/plugins/elementor/includes/libraries/bfi-thumb/bfi-thumb.php on line 748

Notice: A non well formed numeric value encountered in /home/mindvoice/public_html/wp-content/plugins/elementor/includes/libraries/bfi-thumb/bfi-thumb.php on line 750

Notice: A non well formed numeric value encountered in /home/mindvoice/public_html/wp-content/plugins/elementor/includes/libraries/bfi-thumb/bfi-thumb.php on line 751
1_2
அருள்மிகு உண்ணாமுலையம்மை உடனுறை அருள்மிகு அருணாச்சலேசுவரர்

மூலவர் :
அண்ணாமலையார், அருணாசுலேசுவரர்

அம்மன் / தாயார் :
அபித குஜாம்பாள், உண்ணாமுலை
யம்மை

தல விருட்சம்:
மகிழமரம்

தீர்த்தம் :
பிரம்ம தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம்

ஆகமம் / பூஜை :
காரண, காமீகம்

புராண பெயர் :
திருண்ணாமலை

ஊர்:
திருவண்ணாமலை

மாவட்டம் :
திருவண்ணாமலை

மாநிலம்:
தமிழ்நாடு

பாடியவர்கள்:
அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர், மாணிக்கவாசகர்.  

மாணிக்கவாசகர் திருவண்ணாமலைக்கு வந்து பல காலம் தங்கியிருந்து “திருவெம்பாவை” பாடல்களையும், “திருவம்மானை” பதிகங்களையும் இயற்றி உள்ளார். கிரிவலப் பாதையில் அடிஅண்ணாமலை என்னும் இடத்தில் மாணிக்கவாசகருக்கு ஒரு கோவில் இருப்பதை இன்றும் காணலாம்.

தேவாரப்பதிகம்

திருமுறைப் பாடல் பெற்ற 276 திருத்தலங்கள், திருமுறைத்தலங்கள் என போற்றப்படுகின்றன. இவற்றில் 22 திருத்தலங்கள் நடுநாட்டில் அமைந்துள்ளன. இந்த 22 தலங்களில் மிகவும் சிறப்புடையது திருவண்ணாமலையாகும்.

கோவில் திறந்திருக்கும் நேரம் :
காலை 5 மணி முதல் 12.30 மணி வரையும், மாலை 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையும் கோவில் திறந்திருக்கும்.

முகவரி:
இணை ஆணையர் / செயல் அலுவலர் அவர்கள், 
அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோவில், 
திருவண்ணாமலை – 606 601, திருவண்ணாமலை மாவட்டம்

தொலைபேசி : 
+91-4175 252438, +91-4175 254425

அலைபேசி : 9443886198

மின்னஞ்சல் : 
arunachaleswarar@tnhrce.com

கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கலாமா?

மனித வாழ்க்கை என்பது சாதாரண விலங்குகளைப் போல உண்டு, உறங்கி, குடும்ப வாழ்வில் ஈடுபட்டு தங்களை தற்காத்து பின்னர் மடிந்து போவதல்ல. மனித வாழ்வின் உண்மையான பக்குவத்திற்கு கோவில்கள் மிகவும் அவசியமானவை. இறை வழிபாடு இல்லாவிடில் நமது அன்றாடத் தேவைகளை நாம் வாழும் பூமி நமக்கு வழங்காது. அந்தளவுக்கு மனித வாழ்வு கோவில்களை சார்ந்திருக்கிறது. ‘கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்று ஆன்றோர் சொல்ல கேட்டிருப்போம். இதன் மூலமே கோவிலின் அவசியத்தை உணர முடியும். நமது பாரத தேசத்தில் பல்லாயிரகணக்கான கோவில்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் அமைந்துள்ள கோவில்களின் எண்ணிக்கையைச் சொல்லவே வேண்டாம். அப்படி அமையப்பெற்ற கோவில்களில் சுமார் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்ற பெருமையை பெற்றதுதான் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்.

பஞ்ச பூத அக்னி தலம்

காசியில் இறந்தால்தான் முக்தி, திருவாரூரில் பிறந்தால்தான் முக்தி, சிதம்பரத்தை தரிசித்தால்தான் முக்தி கிடைக்கும். ஆனால் நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலம் திருவண்ணாமலை என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாக குறிப்பிடப்படுகிறது.

2_2
அருள்மிகு உண்ணாமுலையம்மை உடனுறை அருள்மிகு அருணாச்சலேசுவரர்

தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்கள் மொத்தம் 276. அதில் திருவண்ணாமலை 233வது தலமாகும். அம்மனின் 51 சக்திப் பீடங்களில் இது அருணை சக்தி பீடமாக அழைக்கப்படுகிறது. முருகப்பெருமானுக்கு எப்படி அறுபடை வீடு இருக்கிறதோ, அதேபோல் விநாயகருக்கும் அறுபடை வீடு இருக்கிறது. இப்புண்ணிய திருத்தலத்தில் கிளி கோபுரத்தின் கீழ் இடது பக்கம் உள்ள அல்லல் போக்கும் விநாயகர் சன்னதி விநாயகரின் முதல் படை வீடாகும். இத்தல இறைவன் அருணாச்சலேஸ்வரராகவும், அம்பிகை உண்ணாமுலையம்மையாகவும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

ஸ்தல அமைப்பு

உண்ணாமுலையம்மை உடனுறை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. கோவிலில் ஒன்பது கோபுரங்களும், ஆறு பிரகாரங்களும், 142 சன்னதிகளும், 22 பிள்ளையார்களும், 306 மண்டபங்களும், 1000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபமும், அதனடியில் பாதாள லிங்கமும் (ரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகளும், திருமண மண்டபம் மற்றும் அண்ணாமலையார் பாத மண்டபமும் அமைந்த திருத்தலம் இதுவாகும். சிவகங்கை தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் கோவிலின் உள்ளேயே அமைந்துள்ளது சிறப்பிலும் சிறப்பு.

3_2
அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயிலின் ஒன்பது கோபுரத் தோற்றம்

ஸ்தல வரலாறு

படைக்கும் கடவுளான பிரம்மாவுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் தங்களில் யார் உயர்ந்தவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டதை அறிந்த சிவபெருமான் அவர்கள் முன் ஜோதி வடிவில் தோன்றினார். இருவரும் சிவனிடம் முறையிட்டனர். அப்போது சிவன் யார் தனது அடி முடியை கண்டு வருகிறீர்களோ அவரே உயர்ந்தவர் எனக் கூறினார். விஷ்ணு, வராக (பன்றி) அவதாரமெடுத்து பூமிக்குள் சென்றார். அது போய்க்கொண்டே இருந்தது. திரும்பி வந்து சிவனிடம் தன்னால் கண்டறிய முடியவில்லை என்பதை ஒப்புக் கொண்டார். பிரம்மா அன்னப்பறவையாக உருவெடுத்து சிவபெருமானின் முடியை கண்டு வர கிளம்பினார். அவராலும் காண முடியவில்லை. இருவரும் சிவபெருமானே முழு முதற் கடவுள் என்பதை உணர்ந்து அவரை வணங்கி நின்றனர். சிவபெருமானும் ஜோதி வடிவிலிருந்து மாறி ஒரு மலையாக அவர்களிருவருக்கும் காட்சி கொடுத்தார். அந்த மலைதான் கோவிலின் பின்புறம் அமைந்துள்ள அண்ணாமலை. பின்பு தன்னை வழிபாடு செய்வதற்கு ஏதுவாக லிங்கோத்பவராக காட்சி கொடுத்து அருளினார்.

இறைவன் இத்தலத்தில் சுயம்புலிங்கத் திருமேனியாக நாகக் கிரீடம் அணிந்து தூய வெண்ணிற ஆடையுடன் அருணாசலேஸ்வரர் என்ற திருநாமத்துடன் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கருவரை கோஷ்டத்தில் ஈசனின் பின்புறம் லிங்கோத்பவர் எழுந்தருளியிருக்கிறார். இறைவன் சன்னிதியை அடுத்து உண்ணாமுலை அம்மை தனிக் கோவிலில் கருவறையில் காட்சி தருகிறார்.

தாழம்பூ ரகசியம்

பிரம்மா தன்னால் அடி முடியை காணவில்லை என்பதை மறைத்து சிவபெருமானின் தலையில் இருக்கும் தாழம்பூவை பொய் சாட்சி சொல்ல வைத்து, தான் கண்டுவிட்டதாக பொய்யுரைத்தார். இதையறிந்த சிவன் கோபமுற்று இனி உனக்கு பூமியில் கோவிலோ, பூஜையோ கிடையாது என சாபமிட்டார். அதேபோல் தாழம்பூவையும் இனி தனது பூஜையில் உன்னை பயன்படுத்தமாட்டார்கள் என்று கூறிவிட்டார். அதன் காரணமாகத்தான் இன்றளவும் சிவாலயங்களில் தாழம்பூவை மட்டும் பூஜையில் பயன்படுத்துவதில்லை.

மாதந்தோறும் திருவிழா

தை மாதம் மாட்டுப் பொங்கல் திருவூடல் உற்சவம் மற்றும் சுவாமி ஊஞ்சல் ஆடும் உற்சவம்.

தை மாதம் 5ஆம் தேதி சுவாமி சுற்று வட்டாரக் கோவில்களில் காட்சி தருவார். அதன்படி தை மாதம் 5ஆம் தேதி திருவண்ணாமலையிலிருந்து திருக்கோவிலூர் செல்லும் சாலையில் உள்ள மணலூர்பேட்டை என்ற ஊருக்கு சென்று சுவாமி காட்சி தருவார். தை மாதம் ரதசப்தமி அன்று கலசப்பாக்கம் என்ற ஊரில் அண்ணாமலையார் காட்சி தருவார்.

மாசி மகா சிவராத்திரி. மாசி மகத்தன்று பள்ளிகொண்டாபட்டு என்ற ஊருக்கு சுவாமி சென்று ஆற்றில் தீர்த்தவாரி செய்து வருவார். (சிவபெருமானே வள்ளாள மகராஜனுக்கு பிள்ளையாக பிறந்து அவர் இறந்தவுடன் ஈமக்கிரியை செய்த வரலாற்றைக் குறிப்பது இத்திருவிழா.)

பங்குனி உத்திரம் மற்றும் திருக்கல்யாண உற்சவம்.

ஆனி மாத பிரம்மோற்சவம்.

ஆடிப்பூரம் அன்று தீமிதி திருவிழா அம்மன் சன்னதி முன்பாக நடக்கும். இதுபோல் வேறு எந்த சிவ தலத்திலும் தீமிதி திருவிழா நடப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திகை மாத பிரம்மோற்சவம் மற்றும் வெகு விமரிசையாக 10 நாட்கள் நடைபெறும் கார்த்திகை தீப திருவிழா.

தினசரி 6 கால பூஜை.

ஒவ்வொரு மாதமும் பிரதோஷம் மிக சிறப்பாக நடைபெறும்.

4_2
அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் பிரதோஷ வழிபாடு

மாதா மாதம் இத்திருத்தலத்தில் பிரம்மோற்சவம் நடைபெறும்.

தீபாவளி, பொங்கல், தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு தினங்களில் விசேஷ பூஜைகள் நடைபெறும்.

வருடத்தின் அனைத்து மாதங்களிலும் ஏதாவதொரு திருவிழா இத்திருத்தலத்தில் நடந்த வண்ணமே இருக்கும்.

செவ்வாய் கிழமை சிறப்பு வழிபாடு

சிவன் கோவில்கள் அனைத்திலும் திங்கள்கிழமைதான் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. சோமவாரம், சோமப் பிரதிஷணம் போன்றவற்றின் மூலம் நாம் இந்த உண்மையை அறிந்து கொள்ளலாம். ஆனால், திரு அண்ணாமலை அக்னி மலை. அக்னிக்குரிய நாள் செவ்வாய்கிழமை என்பதாலும், அக்னிக்குரிய கிரகம் அங்காரன் என்பதாலும் இந்தக் கோவிலில் மட்டுமே சிவபெருமானுக்கு செவ்வாய்கிழமை அன்றுதான் விசேஷ வழிபாடு நடைபெறுகின்றது. சிவபெருமானை செவ்வாய் கிழமை அன்று வழிபடுவோர் பிறவிப் பிணியிலிருந்து விடுபடுவர் என்று புராணங்கள் கூறுகின்றன.

கோபுரங்களின் உயரங்கள்

கிளி கோபுரம்: 
81 அடி உயரம்
(இத்திருத்தலத்தின் மூலவர் சிவபெருமான்தான் என்றாலும், திருவண்ணாமலையில் பிறந்தவரான அருணகிரிநாதர் இங்குள்ள இறைவன் முருகன் மீது எண்ணற்ற பாடல்களை பாடியுள்ளார். அவர் கோபுரத்தில் கிளியாக மாறி பாடியமையால் அக்கோபுரத்தினை கிளி கோபுரம் என்று அழைக்கிறார்கள்.)

5_2
81 அடி உயரம் கொண்ட கிளி கோபுரத் தோற்றம்

தெற்கே திருமஞ்சன கோபுரம்:
157 அடி உயரம்

தெற்கு கட்டை கோபுரம்:
70 அடி உயரம்

மேற்கே பேய் கோபுரம்:
160 அடி உயரம்

மேற்கு கட்டை கோபுரம்:
70 அடி உயரம்

வடக்கே அம்மணி அம்மன் கோபுரம்:
171 அடி உயரம்

வடக்கு கட்டை கோபுரம்:
45 அடி உயரம்

27 வகை தரிசனம்

அண்ணாமலை கிருத யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும், இக்கலியுகத்தில் கல் மலையாகவும் திகழ்கிறது. இம்மலையானது 2688 அடி (800 மீட்டர்) உயரம் கொண்டதாகும். கிரிவலப் பாதையின் தூரம் 14 கிலோ மீட்டராகும். இப்பாதையில் 20 ஆசிரமங்களும், 360 தீர்த்தங்களும், பல சன்னிதிகளும், அஷ்ட லிங்கங்களும் உள்ளன. 26 சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். அடிக்கு 1008 லிங்கம் அமைந்திருக்கிறது என்பர். இந்த மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனத்தை காணலாம் என்பது சிறப்பு.

அஷ்ட லிங்கங்கள்

1.  இந்திரலிங்கம்
2.  அக்னி லிங்கம்
3.  எமலிங்கம்
4.  நிருதி லிங்கம்
5.  வருண லிங்கம்
6.  வாயுலிங்கம்
7.  குபேர லிங்கம்
8.  ஈசான லிங்கம்

அர்த்தநாரீஸ்வரர்

திருக்கயிலாயத்தில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த சிவபெருமானின் கண்களை அன்னை பராசக்தி விளையாட்டாக மூடியதால் இப்பிரபஞ்சமே இருண்டது. அனைத்து ஜீவராசிகளும் துன்பத்திற்குள்ளாகி தவித்தன. இதனால் ஏற்பட்ட பாவத்தைப் போக்க பூவுலகம் வந்து காஞ்சிபுரம் கம்பை நதிக்கரையில் அன்னை காமாட்சியாக தவம் புரிந்தாள். ஒரு நாள் கம்பை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அன்னை காமாட்சி தான் அமைத்த சிவலிங்கம் கரையாமல் இருக்க மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டார். இதனால் அன்னையின் பாவத்தை சிவபெருமான் நீக்கினார். அப்போது அன்னை காமாட்சி “அய்யனே நீங்கள் என்னை எப்போதும் பிரியாதிருக்க தங்கள் திருமேனியில் எனக்கு இடபாகம் தந்தருள வேண்டும்” என வேண்டினார்.

6_2
அர்த்தநாரீஸ்வரர்

அதற்கு சிவபெருமான் அண்ணாமலை சென்று தவம் செய் என உத்தரவிட்டார். அவ்வாறே உமையும் தவம் செய்தாள். கார்த்திகை மாதத்தில் பௌர்ணமியும், கிருத்திகையும் சேரும் நாளில் மலையின் மீது பிரகாசமான ஒளி ஒன்று தோன்றியது. அப்போது மலையை இடதுபுறமாக சுற்றிவா என்ற அசரீரி ஒலித்தது. அவ்வாறே கிரிவலம் சென்ற அன்னையை அழைத்து தனது திருமேனியில் இடபாகத்தை அளித்து ஆட்கொண்ட சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக காட்சியளித்தார். இதை நினைவுகூறும் விதமாகவே அண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

கிரிவல நன்மைகள்

ஞாயிற்றுக்கிழமை: 
சிவலோக பதவி கிட்டும்.

திங்கள்கிழமை: 
இந்திர பதவி கிடைக்கும்.

செவ்வாய்க்கிழமை: 
கடன், வறுமை நீங்கும்.

புதன்கிழமை: 
கலைகளில் தேர்ச்சியும்,

முக்தியும் உண்டாகும்.

வியாழக்கிழமை: 
ஞானம் உண்டாகும்.

வெள்ளிக்கிழமை: 
வைகுண்டப் பதவி கிடைக்கும்.

சனிக்கிழமை: 
பிறவிப் பிணி அகலும்.

கிரிவலம் எப்படி செல்ல வேண்டும்?

கிரிவலத்தை தொடங்குவதற்கு முன்பு திருவண்ணாமலை கோவிலுக்கு அருகே இருக்கும் பூத நாராயணரை தரிசித்து அனுமதி பெற வேண்டும். பூத நாராயணர்தான் திருவண்ணாமலையின் காவல் தெய்வம். அவரை வணங்கிவிட்டுப் புறப்பட்டால் எவ்வித இடையூறும் இல்லாமல் கிரிவலத்தை நிறைவு செய்ய முடியும் என்பது ஐதீகமும், நம்பிக்கையுமாகும். பின்னர் வழியில் உள்ள இரட்டைப் பிள்ளையாரை வணங்க வேண்டும். அதன் பிறகு ஆலயம் சென்று அண்ணாமலையாரையும், உண்ணாமுலை அம்பிகையையும் தரிசிக்க வேண்டும். அதன்பிறகு கோவில் ராஜ கோபுரத்தை வணங்கிவிட்டு அண்ணாமலையை வலம் வரத் தொடங்க வேண்டும். கிரிவலத்தை இப்படித்தான் தொடங்க வேண்டும் என்பது நியதி.

7_2
கிரிவலம் வரும் பக்தர்கள்

கிரிவலப்பாதையில் எட்டு திசைகளுக்கும் ஒவ்வொரு லிங்கம் இருக்கும். கிரிவலம் செல்லும்போது இந்த லிங்கங்களை வணங்கி விட்டுத்தான் செல்ல வேண்டும். மலையை ஒட்டி நடக்காமல், இடது பக்கமாகவே செல்ல வேண்டும். நம்மோடு சித்தர்களும் நடந்து வருவார்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள்தான் நம் மனதில் நினைப்பதை இறைவனிடம் கொண்டுபோய் சேர்ப்பார்கள் என்பதும் ஐதீகம். கை, கால்களை வீசிக்கொண்டோ, பேசிக்கொண்டோ செல்லக் கூடாது. மனதில் இறைவனை நினைத்தபடி “அண்ணாமலைக்கு அரோகரா” என்று கூறிக் கொண்டே செல்ல வேண்டும். காலணிகள் அணியக் கூடாது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அண்ணாமலையைப் பார்த்து கைகூப்பி வணங்கிவிட்டு கிரிவலத்தை தொடர வேண்டும். எல்லா தினங்களிலும் கிரிவலம் செய்யலாம். ஆனாலும் பௌர்ணமி நாளில் இம்மலையை வலம் வந்தால் ஏற்படும் நன்மைகளும், பலன்களும் ஏராளம்.

தீபத் திருவிழா

கார்த்திகை மாத மகாதீபத் திருவிழா இக்கோவிலில் 10 நாட்கள் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. விழாவின் இறுதி நாளன்று மாலை 6 மணிக்கு மேல் இறைவன் மற்றும் இறைவிக்கு பூஜைகள் செய்யப்பட்ட பின்பு, பத்து தீபங்களும் மேளதாளத்துடன் வெளியே எடுத்துச் செல்லப்பட்டு கொடிக்கம்பம் அருகேயுள்ள தீபக்கொப்பரையில் ஒன்று சேர்த்து எரிய விடுவார்கள். அந்த நிமிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் வெளிவந்து காட்சி கொடுத்துவிட்டு உடனே உள்ளே சென்று விடுவார். இது இரண்டு நிமிட தரிசனம்தான். அப்போது வாசல் வழியே பெரிய தீவட்டியை ஆட்டி மலையில் தயாராக இருப்பவர்களுக்கு சைகை காட்டுவார்கள். அதன்பிறகே மகாதீபம் ஏற்றப்படும். தீப தரிசனம் கண்டதும் சிவனடியார்கள் அனைவரும் “அண்ணாமலைக்கு அரோகரா” என கோஷமிட்டு அவரவர் தத்தம் இல்லங்களுக்கு சென்று வீடு முழுவதும் தீபமேற்றியும், மாவிளக்கேற்றியும் பூஜை செய்துவிட்டு விரதத்தை நிறைவு செய்வார்கள்.

மகா தீபம்

ஏழடி உயரமுள்ள செப்புக் கொப்பரையில்தான் தீபம் ஏற்றுகிறார்கள். 3 டன் பசுநெய், 1000 மீட்டர் காடாதுணி திரி, 2 கிலோ கற்பூரம் இட்டு தீபம் ஏற்றுவார்கள். தீபம் ஏற்றும் உரிமையுடையோர் மீனவ இன பரத்வாஜ குலத்தவர்கள்தான். இவர்களது பரம்பரையினர்தான் இப்போதும் மகா தீபம் ஏற்றுகிறார்கள். தீப விழாவன்று இவர்கள் கோவிலில் கூடுவார்கள். ஆலயத்தார் இவர்களை கௌரவித்த பிறகு தீபம் ஏற்றும் பொருட்களை கொடுத்து அனுப்புவார்கள். மூன்று மணி நேரத்தில் மலை உச்சியடைந்து விடுவார்கள். ஜலால தீப அடையாளம் கண்டபின்னர் தீபம் ஏற்றுகிறார்கள்.

மலை உச்சியில் மகாதீப வழிபாடு

பிரார்த்தனை

திருவண்ணாமலைக்கு வந்து அருணாச்சலேஸ்வரரையும், உண்ணாமுலையம்மையையும் வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். கேட்கும் வரம் எல்லாம் அருளும் மூர்த்தியாக அருணாச்சலேஸ்வரர் அருள்பாலிக்கிறார். திருமண வரம், குழந்தை வரம், வியாபார விருத்தி, பதவி உயர்வு, வேலை வாய்ப்பு, சுயதொழில் வாய்ப்பு.. என எந்த வேண்டுதல் என்றாலும் இத்தலம் வந்து சிவபெருமானை வழிபட்டால் நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

உடல் ரீதியாக பலம் குன்றியவர்கள், நீண்ட நாள் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், பிரிந்து வாழும் தம்பதிகள், சகோதரர்களுக்கிடையேயான பிரச்சனைகள், பொருளாதாரப் பிரச்சனைகள், மன உளைச்சல்கள்.. போன்ற பக்தர்களின் அனைத்து பிரச்சனைகளையும் போக்கும் தலம் இது. மேலும் இத்தலத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானை வணங்குவோர்க்கு வாழ்வில் ஏற்படும் தடைகள் நீங்கும். அதோடு பிறவிச் சுழற்சியிலிருந்து விடுதலையளித்து முக்தியையும் தருகிறது இத்திருத்தலம்.

நேர்த்திக்கடன்

அருணாச்சலேஸ்வரரிடம் வேண்டிக்கொள்வோர் தங்கள் நேர்த்திகடனாக முடி காணிக்கை செலுத்துகின்றனர். குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டி போடுகின்றனர். இறந்தவர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றப்படுகிறது. துலாபாரத்தில் தானியங்கள், நாணயங்கள், பழங்கள், காய்கனிகள், வெல்லம் ஆகியவற்றை எடைக்கு எடை காணிக்கையாக செலுத்துகின்றனர். சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுகிறது.

சிவபெருமானுக்கு நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, மா பொடி, பால், தயிர், பழ வகைகள், கரும்புச்சாறு, தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்கிறார்கள். உலர்ந்த தூய வஸ்திரம் சாத்துகிறார்கள். நெய் தீபம் ஏற்றலாம். சிவபெருமானுக்கு வேட்டியும், உண்ணாமுலையம்மனுக்கு மஞ்சள் பொடி அபிஷேகம் செய்து புடவையும் சாத்துகிறார்கள். சுவாமி, அம்பாளுக்கு கல்யாண உற்சவம் செய்துவைப்பதையும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக செய்கிறார்கள். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

பக்தர்கள் அனைவரும் இத்திருத்தலம் வந்து அருணாச்சலேஸ்வரரையும், அம்பாள் உண்ணாமுலையம்மனையும் வணங்கி அருளாசிகள் பெறவும், முக்தி பெறவும் எல்லாம் வல்ல சிவபெருமானை வேண்டி பணிகிறோம்.

தென்னாடுடைய சிவனே போற்றி..!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.!!