CAA-வை அமல்படுத்த மாட்டோம் என்று சொல்ல எந்த மாநிலத்திற்கும் உரிமை இல்லை! பதிலடி கொடுத்த அமித்ஷா

CAA எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று எதிர்க்கட்சிகளை சேர்ந்த முதலமைச்சர்கள் கூறியுள்ள நிலையில், அப்படி கூற மாநிலங்களுக்கு உரிமை இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலடி கொடுத்திருக்கிறார். கடந்த காலங்களில், இந்தியாவில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் வெளிநாட்டவர்க்கு குடியுரிமை வழங்கப்பட்டு வந்தது. அதில் திருத்தம் செய்து, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிக்கள், கிருத்துவர்கள் ஆகியோர் இந்நாட்டிற்கு வந்து குறைந்தது 6 ஆண்டுகள் வாழ்ந்தாலே அவர்களுக்குக் குடியுரிமை வழங்கும் வகையில் புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய பாஜக அரசு அமல்படுத்தியுள்ளது. இசுலாமியர்களை மட்டும் திட்டமிட்டுப் புறந்தள்ளிவிட்டு மற்றவர்களுக்குக் குடியுரிமை வழங்குவதன் மூலம் இந்நாட்டின் அடித்தளமான மதச்சார்பின்மைக் கோட்பாடே முழுவதுமாக துடைத்தெறியப்படுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

எனவே இச்சட்டத்தை எதிர்த்து நாட்டின் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. அதேபோல எதிர்க்கட்சிகளின் முதலமைச்சர்களான மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தங்கள் மாநிலங்களில் CAA-வை அமல்படுத்த மாட்டோம் என்று கூறியுள்ள நிலையில், மாநிலங்கள் இவ்வாறு கூட உரிமை இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலடி கொடுத்திருக்கிறார்.

மு.க.ஸ்டாலின்:

“இந்திய மக்களிடையே பேதங்களைத் தோற்றுவிக்க வழிவகை செய்யும் CAA சட்டத்தால் எந்தவிதமான நன்மையோ, பயனோ இருக்கப் போவதில்லை. இந்தச் சட்டம் முற்றிலும் தேவையற்ற ஒன்று என்பதுடன் ரத்து செய்யப்பட வேண்டியது என்பதுதான் இந்த அரசின் கருத்தாகும். எனவே, ஒன்றிய அரசு நிறைவேற்றியிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நிறைவேற்றிட தமிழ்நாடு அரசு எவ்வகையிலும் இடமளிக்காது” என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

பினராயி விஜயன்:

“இஸ்லாமிய சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாகக் கருதும் குடியுரிமை திருத்தச் சட்டம் கேரளாவில் அமல்படுத்தப்பட மாட்டாது என்று கேரள அரசு பலமுறை கூறியுள்ளது. அந்த நிலைப்பாட்டை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறோம். இந்த வகுப்புவாத மற்றும் பிளவுபடுத்தும் சட்டத்தை எதிர்ப்பதில் கேரளா ஒன்றுபட்டு நிற்கும்” என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியிருந்தார். இதேபோல மமதா பானர்ஜியும் கூறியிருந்தார்.

இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று கூற மாநிலங்களுக்கு உரிமை இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலடி கொடுத்திருக்கிறார்.

அமித்ஷா: ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர் “CAA-வை கொண்டு வந்தது பாஜக, பிரதமர் நரேந்திர மோடி. இதனை அவ்வளவு எளிதில் ரத்து செய்ய முடியாது. நாங்கள் இதனை திரும்பப் பெற மாட்டோம். இந்த விவகாரத்தில் நாங்கள் எந்த சமரசமும் செய்துகொள்ள மாட்டோம். அதேபோல நாடு முழுவதும் CAA குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். எதிர்க்கட்சிகள் CAA-வை ரத்து செய்வதாக கூறுகின்றன. ஆனால் அவர்களால் ஆட்சிக்கு வர முடியாது. CAA-வை ரத்து செய்ய விரும்புவோருக்கு இங்கு இடம் கிடையாது. CAA-வை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

உண்மையில் அவர்களுக்கு வேறு வேலை கிடையாது. நாங்கள் தேச பாதுகாப்பு குறித்து சில முடிவுகளை எடுத்தபோதும் அவர்கள் இதே குற்றச்சாட்டைதான் வைத்தனர். யோசித்து பாருங்கள் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டபோது கூட இதைத்தான் சொன்னார்கள். பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடாதா?
CAA குறித்து நாங்கள் தெளிவான பார்வையை கொண்டிருக்கிறோம். இப்படி ஒரு சட்டம் வரும் என்று ஏற்கெனவே 2019 லோக்சபா தேர்தல் வாக்குறுதியில் கொடுத்திருந்தோம். எனவே இதில் எந்த குழப்பத்திற்கும் இடமில்லை. எதிர்க்கட்சிகள் தங்கள் வாக்கு வங்கிகளை ஒன்று சேர்க்க போராட்டங்களை முன்னெடுத்திருக்கின்றன” என்று விமர்சித்துள்ளனர்.