ஐக்கிய அரபு அமீரகத்தின் சுற்றுலா விசா விதிகள் மாற்றம் காரணமாக துபாய்க்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை குறைய தொடங்கி உள்ளது. முக்கியமாக துபாய்க்கு விசா வேண்டி விண்ணப்பம் செய்த பலருக்கும் விசா நிராகரிக்கப்பட்டு உள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புதிய சுற்றுலா விசா கொள்கையை அறிமுகம் செய்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பொதுவாக கடுமையான சுற்றுலா விசா கொள்கையை கொண்டது. தற்போது தங்கள் கொள்கைகளை மேலும் கடினமாக்கி உள்ளது. புதிய விதிமுறையின் கீழ், சுற்றுலாப் பயணிகள் தங்களுடைய ஹோட்டல் முன்பதிவுச் சான்று, விமான டிக்கெட்டுகள் மற்றும் திரும்புவதற்கான டிக்கெட்டுகளை வளைகுடா நாட்டின் குடியேற்றத் துறையின் போர்ட்டலில் சமர்ப்பிக்க வேண்டும்.
கூடுதலாக, பயணிகள் துபாயில் தங்குவதற்கு போதுமான வங்கி இருப்பு இருப்பதையும் நிரூபிக்க வேண்டும். தனிநபர்கள் தங்களுடைய கடைசி மூன்று மாத பேங்க் ஸ்டேட்மெண்ட்டுகளை வழங்க வேண்டும். இதில் குறைந்தபட்சம் ₹50,000 இருக்க வேண்டும். பான் கார்டு விவரங்களை வழங்க வேண்டும். கடன் வாங்கி நாட்டிற்கு ஓடி வருபவர்களை தடுக்க இந்த முறை. அங்கே ஹோட்டல்களில் தங்குவதற்குத் முன்பதிவு செய்ய வேண்டும். அதோடு போதிய பணம் வைத்திருக்க வேண்டும் என்று பல விதிகள் கொண்டு வரப்பட்டு உள்ளன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) சுற்றுலா விசா விண்ணப்பங்களுக்கு கடுமையான நிபந்தனைகளை விதித்ததை அடுத்து, துபாய்க்கு செல்ல விரும்பும் இந்திய சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் விசா நிராகரிப்பை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது. முன்னதாக, துபாய்க்கான சுற்றுலா விசா விண்ணப்பங்களில் கிட்டத்தட்ட 99 சதவீதம் அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் தற்போது,நன்கு தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் கூட நிராகரிக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.