3000 ரூபாய்க்கு OLAவின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரா..?

இந்திய ஆட்டோமொபைல் சந்தை எப்போதும் இல்லாத வகையில் பல்வேறு மாற்றங்களின் காரணமாக அதிகப்படியான போட்டியை எதிர்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இரு சக்கர வாகன சந்தையில் அதிகப்படியான போட்டி, ஒருபக்கம் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரித்து வரும் வேளையில் ப்ரீமியம் வாகனங்களின் அறிமுகம் இளைஞர்களை ஈர்க்கிறது. இதற்கு மத்தியில் மலிவான மற்றும் மிட் வேரியன் வாகனங்களின் அறிமுகம் குறைந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மத்திய அரசு எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களுக்கான மானியத்தை மத்திய அரசு குறைத்துள்ளதால் விலையும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் மக்களின் சுமையை குறைக்கும் விதமாக ஓலா எலக்ட்ரிக், தனது வாடிக்கையாளர்களுக்கு குறைவான வட்டியில் வாகன கடன் அளித்து, விலை சுமையை குறைக்க வேண்டும் என்பதற்காக முக்கியமான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

பாவிஷ் அகர்வால் தலைமையிலான ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் IDFC First Bank மற்றும் L&T Financial Services ஆகிய இரு நிறுவனங்களுடன் கூட்டணி வைத்து 60 மாத கடன் திட்டத்தில் வெறும் 6.99 சதவீத வருடாந்திர வட்டியில் வாகன கடன் கொடுக்க உள்ளது. ஓலா எலக்ட்ரிக்கின் இந்த மாபெரும் கூட்டணி மூலம் கடன் காலத்தை அதிகரித்தும், வட்டியை குறைத்துள்ளதால் வங்கிகளுக்கும் சரி, வாகன உரிமையாளர்களுக்கும் சரி விலை உயர்வின் சுமை தெரியாது. பொதுவாக வங்கிகள், NBFC-க்கள் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 36 மாதம் மட்டுமே கடன் கொடுக்கும், இதை அதிகப்படியாக 48 மாதம் வரையில் உயர்த்தும். ஆனால் ஓலா இந்த சிறப்பு ஏற்பாடு மூலம் 60 மாதம் வரையில் நீட்டித்துள்ளது.

மேலும் இந்த சலுகை ஓலா எக்ஸ்பீரியன்ஸ் சென்டரில் மட்டுமே அளிக்கப்பட உள்ளது. மேலும் ஓலா ஆப் மூலம் வாகனங்களை ஆர்டர் செய்யும் முன்பு இந்த கடன் திட்டம் குறித்து முழுமையாக விளக்கம் கொடுக்கப்படும். இந்தியா முழுவதும் தற்போது 700 ஓலா எக்ஸ்பிரீயன்ஸ் சென்டர்கள் உள்ளது. 2023 இறுதிக்குள் மேலும் 300 சென்டர்களை திறக்க வேண்டும் என்பது ஓலாவின் இலக்கு. ஓலா தற்போது S1 Air, S1, S1 Pro ஆகிய வாகனங்களை விற்பனை செய்கிறது, மேலும் வருகிற ஜூலை மாதம் முதல் S1 Air ஸ்கூட்டர் மாடல் அறிமுகம் செய்ய வாய்ப்பு உள்ளது.

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் 60 மாத திட்டத்தின் கீழ் மாத ஈஎம்ஐ எவ்வளவு வரும்..? சென்னையில் ஓலா S1 Pro வாகனத்தின் விலை 1,55,871 ரூபாய் இதில் ஆர்டிஓ, இன்சூரன்ஸ் ஆகியவையும் அடங்கும். எப்போதும் முழு தொகைக்கும் லோன் வழங்கப்படமாட்டாது, அப்படி ஓலா கொடுத்தாலும் 60 மாதம் 6.99 சதவீத வட்டி எனில் வெறும் 3,086 ரூபாய் மட்டுமே மாத இஎம்ஐ. இதுவே நீங்கள் 5,871 ரூபாயை டவுன் பேமெண்ட் ஆக செலுத்தும் பட்சத்தில் வெறும் 1,50,000 ரூபாய் பைக் லோன்-க்கு நீங்க மாதம் 2,969 ரூபாய் ஈஎம்ஐ செலுத்தினால் போதுமானது. 60 மாதத்திற்கு கடனை கட்டி முடிக்கும் பட்சத்தில் 28,168 ரூபாயை வட்டியாக மொத்தம் 1,78,168 ரூபாய் செலுத்தியிருப்பீர்கள். இதேபோன்ற சேவையை Ather Energy அளிக்கிறது குறிப்பிடத்தக்கது.