ஒலிம்பிக் 2024: களமிறங்கும் இந்திய படை

பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய நட்சத்திரங்கள் விபரம் வெளியானது. 70 வீரர்கள், 47 வீராங்கனைகள் என 117 பேர் பங்கேற்க உள்ளனர்.
பிரான்சின் பாரிசில் 33 வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 முதல் ஆக. 11 வரை நடக்க உள்ளது. உலக அளவில் நடந்த பல்வேறு தகுதி போட்டிகளில் சாதித்த இந்திய நட்சத்திரங்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றனர். தவிர, உலகத் தரவரிசை அடிப்படையிலும் பலருக்கு வாய்ப்பு கிடைத்தது.
தற்போது பாரிஸ் செல்லும் இந்திய அணி விபரம் வெளியானது. 70 வீரர்கள், 47 வீராங்கனைகள் என மொத்தம் 117 நட்சத்திரங்கள், 16 வகையான விளையாட்டு போட்டிகளில் களமிறங்க உள்ளனர். கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் 122 பேர், 18 விளையாட்டில் பங்கேற்றனர்.
இம்முறை ஈட்டி எறிதலில் டோக்கியோவில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, தமிழகத்தின் பிரவீன் சித்ரவேல் (‘டிரிபிள் ஜம்ப்), வித்யா (‘ரிலே’), ஜோதி (100 மீ., ஓட்டம்) உட்பட தடகளத்தில் அதிகபட்சமாக 29 பேர் (18 வீரர்+11 வீராங்கனை) பங்கேற்கின்றனர். இதில் நீரஜ் சோப்ரா மீண்டும் தங்கம் வெல்லலாம்.
தமிழகத்தின் பிரித்விராஜ், மனுபாகர், இளவேனில் உட்பட துப்பாக்கிசுடுதலில் 21 பேர் (10 வீரர்+11 வீராங்கனை) இடம் பெற்றுள்ளனர். அடுத்து ஹாக்கி அணியில் 19 பேர் சென்றுள்ளனர். இத்துடன் 8 டேபிள் டென்னிஸ், சிந்து உட்பட 7 பாட்மின்டன் வீரர், வீராங்கனைகள் இதில் இடம் பிடித்தனர்.
குண்டு எறிதலில் தரவரிசை அடிப்படையில் தேர்வான வீராங்கனை அபா கதுவா, இப்பட்டியலில் சேர்க்கப்பட வில்லை. இதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
பாரிஸ் செல்லும் இந்திய குழு தலைவராக, லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ககன் நரங் (துப்பாக்கிசுடுதல்) நியமிக்கப்பட்டார். இவர்களுடன் பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் என 140 பேர் சேர்த்து, என மொத்தம் 257 பேர் பாரிஸ் செல்ல உள்ளனர்.

தமிழகத்தில் இருந்து முதன் முறையாக 12 பேர் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கின்றனர். அஜந்தா சரத்கமல், சத்யன் (டேபிள் டென்னிஸ்), பிரவீன் சித்ரவேல் (‘டிரிபிள் ஜம்ப்’), ஜெஸ்வின் ஆல்ட்ரின் (நீளம் தாண்டுதல்), சந்தோஷ் குமார், ராஜேஷ், சுபா, வித்யா (4×400 மீ., ஓட்டம்), விஷ்ணு சரவணன், நேத்ரா (படகு போட்டி), பிரித்விராஜ் (துப்பாக்கிசுடுதல்), ஸ்ரீராம் பாலாஜி (டென்னிஸ்) இப்பட்டியலில் உள்ளனர்.

இந்திய ஒலிம்பிக் அணியில் தடகளத்தில் அதிகபட்சமாக 29 பேர் இடம் பெற்றனர்.
போட்டி எண்ணிக்கை: தடகளம் 29, துப்பாக்கிசுடுதல் 21, ஹாக்கி 19, டேபிள் டென்னிஸ் 8, பாட்மின்டன் 7, வில்வித்தை 6, குத்துச்சண்டை 6, மல்யுத்தம் 6.
தவிர, கோல்ப் (4), டென்னிஸ் (3), நீச்சல் (2), படகுபோட்டி (2), குதிரையேற்றம் (1), ஜூடோ (1), படகு வலித்தல் (1), பளுதுாக்குதல் (1) போட்டிகளிலும் இந்தியா பங்கேற்க உள்ளது.

ஒலிம்பிக் 100 மீ., தடை ஓட்டத்தில் பங்கேற்கும் முதல் இந்தியர் என சாதித்தவர் ஜோதி. 12.78 வினாடியில் ஓடி தேசிய சாதனை படைத்துள்ளார். இவரது அம்மா குமாரி, மருத்துவமனை துப்புரவுத் தொழிலாளி (விசாகப்பட்டனம்), வீட்டு பணிப்பெண்ணாக வேலை செய்கிறார்.