ஒலிம்பிக் 2024: பெண்கள் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான பாரீஸ் ஒலிம்பிக்கில் 206 நாடுகளை சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தரப்பில் 117 பேர் பாரீஸ் ஒலிம்பிக்குக்கு சென்றுள்ளனர்.

போட்டியின் 3-வது நாளான நேற்று இந்தியாவுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமைந்தது.

துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதி சுற்று நேற்று மாலை அரங்கேறியது. முந்தைய நாளில் நடந்த தகுதி சுற்றில் முதலிடம் பிடித்த வெரோனிகா மேஜர் (ஹங்கேரி), 2-வது இடம் பெற்ற ஜின் ஓ யே (தென்கொரியா), 3-வது இடம் பெற்ற மனு பாக்கர் (இந்தியா) உள்பட 8 வீராங்கனைகள் கலந்து கொண்டு 10 மீட்டர் தூர இலக்கை குறி பார்த்து சுட்டனர்.

இறுதி சுற்றில் மொத்தம் 24 ரவுண்டுகள் சுட வேண்டும். முதல் 10 ரவுண்டுக்கு பிறகு அடுத்த ஒவ்வொரு இரண்டு ரவுண்டு முடிவிலும் புள்ளிக்கணக்கில் பின்தங்கி இருக்கும் ஒருவர் வெளியேற்றப்படுவார். இதன்படி 20-வது ரவுண்டின்போது பக்கத்திற்குரிய 3 பேர் மட்டுமே மிஞ்சி இருப்பார்கள். இதில் தொடக்கம் முதலே தென்கொரியா வீராங்கனைகள் ஜின் ஓ யே, யெஜி கிம், இந்திய ‘இளம் புயல்’ மனு பாக்கர் இடையேதான் கடும் போட்டி நிலவியது.

இலக்கை துல்லியமாக சுட்டு புள்ளிகளை குவித்த ஜின் ஓ யே ஆரம்பம் முதலே முழுமையாக ஆதிக்கம் செலுத்தினார். அடுத்த இடத்துக்கு யெஜி கிம், மனு பாக்கர் நீயா-நானா என்று வரிந்து கட்டினர்.

21-வது ரவுண்டு முடிவில் மனு பாக்கர் 0.1 புள்ளி வித்தியாசத்தில் முன்னிலை பெற்று 2-வது இடத்தில் இருந்தார். 22-வது ரவுண்டுதான் இருவரில் யார் தங்கப்பதக்கத்தை குறி வைப்பது என்பதை நிர்ணயிப்பதாக இருந்தது. அந்த முக்கியமான ரவுண்டில் மனு பாக்கர் 10.3 புள்ளியும், யெஜி கிம் 10.5 புள்ளியும் எடுத்தனர். இதனால் 0.1 புள்ளி வித்தியாசத்தில் தங்கப்பதக்க சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை மனு பாக்கர் இழந்தார். அத்துடன் வெளியேறிய மனு பாக்கர் மொத்தம் 221.7 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதானது.

இறுதி ரவுண்டு முடிவில் தென்கொரியா வீராங்கனை ஜின் ஓ யே 243.2 புள்ளிகள் குவித்து ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். மற்றொரு தென்கொரியா மங்கை யெஜி கிம் (241.3 புள்ளி) வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இதுவாகும். இதன் மூலம் அரியானாவை சேர்ந்த 22 வயதான மனு பாக்கர் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் பதக்கத்தை உச்சிமுகர்ந்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார்.

அதே நேரத்தில் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் வரலாற்றில் இந்தியாவுக்கு கிடைத்த 5-வது பதக்கம் இதுவாகும். ஏற்கனவே 2004-ம் ஆண்டில் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் வெள்ளிப்பதக்கமும், 2008-ம் ஆண்டில் அபினவ் பிந்த்ரா தங்கப்பதக்கமும், 2012-ம் ஆண்டு விஜய்குமார் வெள்ளிப்பதக்கமும், ககன் நரங் வெண்கலப்பதக்கமும் வென்றிருந்தனர்.

உலகக் கோப்பை போட்டிகளில் 9 தங்கம் வென்று முத்திரை பதித்து இருக்கும் மனு பாக்கர் தொடர்ந்து 2-வது முறையாக ஒலிம்பிக்கில் களம் இறங்கி முதல்முறையாக பதக்கமேடையில் ஏறி ஒட்டுமொத்த தேசத்தையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளார்.

ஒலிம்பிக்கில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றால் முறையே ரூ,6 கோடி, ரூ,4 கோடி, ரூ,2½ கோடி வழங்கப்படும் என்று அரியானா மாநில அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. எனவே 3-வது இடம் பெற்ற மனு பாக்கருக்கு ரூ,2½ கோடி பரிசாக கிடைக்கும்.

அத்துடன் மத்திய அரசு சார்பில் ரூ,30 லட்சமும், இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில் ரூ,50 லட்சமும் கிடைக்கும். மேலும் பல்வேறு நிறுவனங்களும் பரிசு தொகையை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.