கடும் எதிர்ப்புகளுக்கு இடையே ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்....

நாடாளுமன்றத்துக்கும், மாநில, யூனியன் பிரதேசங்களின் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது.

தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தவும், நலத்திட்டங்கள் இடையூறு இல்லாமல் அமல்படுத்தவும் இத்திட்டத்தை அமல்படுத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்தது.

இதன் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு உயர்மட்டக்குழுவை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு அமைத்தது.

அக்குழு, பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், பல்துறை நிபுணர்கள் ஆகியோரிடம் கருத்து கேட்டது.

பின்னர், மத்திய அரசிடம் தனது பரிந்துரைகளை அறிக்கையாக சமர்ப்பித்தது. அதில், நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்திலும், 100 நாட்கள் கழித்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்திலும் தேர்தல் நடத்தலாம் என்று பரிந்துரை செய்திருந்தது.

இந்த திட்டத்தை அமல்படுத்த அரசியல் சாசனத்தில் 18 திருத்தங்கள் செய்ய வேண்டி இருக்கும் என்றும் தெரிவித்தது.

ராம்நாத் கோவிந்த் குழுவின் அறிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. அறிக்கைக்கு கடந்த செப்டம்பர் மாதம் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. அதன் அடிப்படையில், புதிய மசோதா தயாரிக்கும் பணி நடந்தது.

அரசியல் சாசனத்தில் 129-வது திருத்தம் செய்யும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு கடந்த 12-ந் தேதி மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. அதைத்தொடர்ந்து, கடந்த 16-ந் தேதி நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அன்று தாக்கல் செய்யப்படவில்லை.

இந்நிலையில், நேற்று மக்களவையில் கேள்வி நேரம் முடிந்தவுடன், மத்திய சட்ட மந்திரி அர்ஜுன்ராம் மேக்வால், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவை எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே தாக்கல் செய்தார்.

அத்துடன், டெல்லி, புதுச்சேரி, காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்களின் சட்டமன்ற தேர்தல்களை நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்துவதற்கான யூனியன் பிரதேசங்கள் திருத்த மசோதாவையும் தாக்கல் செய்தார்.

இரு மசோதாக்கள் மீதும் மக்களவையில் காரசார விவாதம் நடந்தது. மசோதாவை அறிமுக நிலையிலேயே எதிர்ப்பதாக காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி கூறினார். அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பு மீது மசோதா தாக்குதல் நடத்துவதாகவும், நாடாளுமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு பேசியதாவது:-

எங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதுபோல இது கூட்டாட்சிக்கு எதிரானது. ஜனநாயகத்தை அழிப்பதாக இருக்கிறது. அரசாங்கத்துக்கு 3-ல் 2 பங்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் இதை எப்படி கொண்டு வரமுடியும்? என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

வாக்காளர்கள் வாக்கு அளித்ததால் 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய உரிமை இருக்கிறது. இந்த உரிமையை பறிக்க முடியாது. ஒரே நாடு ஒரே தேர்தலால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் கூடுதலாக தேவைப்படும். எனவே இது சாத்தியம் அற்றது. இதனை நிலைக்குழுவுக்கு கொண்டு சென்று விவாதிக்க வேண்டும்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி பேசும்போது, ‘‘மாநில சட்டமன்றங்களின் பதவிக்காலத்தை மக்களவை பதவிக்காலத்துடன் காலாவதி ஆக்குவது சரியல்ல. மாநிலங்கள் அடிமைகள் அல்ல. மாநிலங்களின் சுயாட்சியை மசோதா பறிக்கிறது. இது தேர்தல் சீர்திருத்தம் அல்ல. ஒரு பெரிய மனிதரின் ஆசையை நிறைவேற்றும் முயற்சி’’ என்று கூறினார்.

சமாஜ்வாடி எம்.பி. தர்மேந்திர யாதவ் பேசுகையில், ‘‘அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்தும் மசோதாவை உடனடியாக வாபஸ்பெற வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.

தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) எம்.பி. சுப்ரியா சுலே, ‘‘மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பி வைக்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.

காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய், ‘‘தேர்தல் கமிஷனுக்கு சட்டவிரோத அதிகாரங்களை மசோதா அளிக்கிறது. சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கும்’’ என்று கூறினார்.

அகில இந்திய மஜ்லிஸ் கட்சி எம்.பி. அசாதுதின் ஒவைசி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி. முகமது பஷீர், புரட்சிகர சோஷலிஸ்டு கட்சி எம்.பி. பிரேம சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. அம்ராராம் ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.

பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான தெலுங்கு தேசத்தின் எம்.பி.யும், மத்திய மந்திரியுமான சந்திரசேகர் பெம்மசானி, ‘‘தேர்தல் செலவை இத்திட்டம் குறைக்கும். மசோதாவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறோம்’’ என்று கூறினார்.

சிவசேனா (ஷிண்டே) எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டேவும் மசோதாவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்தார்.

விவாதத்துக்கு இடையே பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியதாவது:-

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவை ஒவ்வொரு மட்டத்திலும் விரிவான விவாதம் நடத்துவதற்காக அதை நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்புகிறார்.

எனவே, கூட்டுக்குழுவில் விரிவான ஆய்வு நடக்கட்டும். அதன்பிறகு கூட்டுக்குழுவின் அறிக்கைக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளிக்கும். பின்னர், மீண்டும் சபையில் இம்மசோதா மீது விவாதம் நடத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.

ஒன்றரை மணி நேரம் விவாதம் நடந்தது. அதற்கு பதில் அளித்த மத்திய சட்ட மந்திரி அர்ஜுன்ராம் மேக்வால், ‘‘நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்ப தனியாக தீர்மானம் தாக்கல் செய்வேன்’’ என்று கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:-

எதிர்க்கட்சிகள் கூறுவதுபோல், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா, அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்தாது. நீதித்துறை ஆய்வு, அரசியல் சாசனத்தின் கூட்டாட்சி நடத்தை, அதிகார பகிர்வு, மதச்சார்பற்ற நடத்தை, அரசியல் சாசனத்தின் மேலதிகாரம் ஆகிய தத்துவங்களில் எந்த மாற்றமும் இருக்காது.

மாநிலங்கள் அனுபவிக்கும் அதிகாரங்களில் மசோதா எவ்விதத்திலும் குறுக்கிடாது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு, வெறும் அரசியல் ரீதியிலானது என்று அவர் கூறினார்.

பின்னர், மசோதா மீது ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. மக்களவையில் முதல் முறையாக மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரம் வைத்து வாக்கெடுப்பு நடந்தது.

ஆதரவாக 269 ஓட்டுகளும், எதிராக 198 ஓட்டுகளும் விழுந்தன.

இதைத்தொடர்ந்து, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா தாக்கல் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அது, நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.