விழுப்புரம் வேலா தொண்டு நிறுவனத்தில், ஸ்ரீசத்ய சாய் சேவா டிரஸ்ட் சார்பில் 56 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இலவச பிசியோதெரபி மையம் நேற்று மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஸ்ரீசத்ய சாய் சேவா டிரஸ்ட், விளிம்பு நிலையிலும், ஏழ்மை நிலையிலும் உள்ள மக்களுக்கு தேவையான பல்வேறு உதவிகளை செய்து வருவதோடு, பல்வேறு பொதுச் சேவைகளை இலவசமாக வழங்கி வருகிறது.அந்த வகையில், விழுப்புரம் லட்சுமிபுரத்தில் சொந்த கட்டடத்தில் செயல்பட்டு வரும் வேலா தொண்டு நிறுவனத்தில் 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இலவச பிசியோதெரபி மையத்தை ஸ்ரீசத்ய சாய் சேவா டிரஸ்ட் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இந்த மையத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது.
சத்யசாய் மத்திய அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ரத்னாகர், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திறந்து வைத்து, தலைமை உரையாற்றினார். வேலா தொண்டு நிறுவன செயலாளர் மோகன் வரவேற்றார்.முன்னதாக, கொடியேற்றம், வேதம் மற்றும் சாய் பஜன் நடந்தது. தொடர்ந்து, வேலா பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சியும், மகா மங்கள ஆரத்தியும் நடந்தது. இந்த இலவச பிசியோதெரபி மையத்தில் எலும்பு முறிவு, பக்கவாதம், பெருமூளை வாதம், இதயம் மற்றும் நுரையீரல் கோளாறுகள், மூட்டு தேய்மானம், சவ்வு விலகுதல், முகவாதம், தண்டுவட பிரச்னை, தசைநார்தேய்வு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. விழுப்புரம் மற்றும் அதை சுற்றியுள்ள அனைத்து தரப்பினருக்கும் இந்த மையம் மூலம் இலவசமாக பிசியோதெரபி பயிற்சி எளிதில் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. வேலா சிறப்பு பள்ளி தலைமை ஆசிரியர் லதா நன்றி கூறினார்.