ஒற்றை தலைமை மைய வலைதளம்..!

ஒற்றை தலைமை மைய வலைதளம்..!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

நாட்டின் 75வது சுதந்திர ஆண்டுக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, மத்திய வர்த்தகத் துறை அமைச்சகத்தின் சிறப்பு வாரக் கொண்டாட்டம் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், “கொரோனா நோய் தொற்று பரவல் காலத்தில் சில்லறை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச் சந்தைகளில் இருந்து முதலீடுகளைத் திரும்பப் பெறும்போது, சில்லறை முதலீட்டாளர்கள் பாதுகாவலர்களாகச் செயல்படுகின்றனர். அந்நிய முதலீடுகள் வெளியேறினாலும் நாட்டில் உள்ள சில்லறை முதலீட்டாளர்கள் காரணமாகப் பங்குச் சந்தைகள் பெரிய அளவில் வீழ்ச்சியை சந்திப்பதில்லை. தொழில்நுட்பங்கள் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன. அரசின் சேவைகளும் எண்மமயமாகி வருகின்றன. ஒழுங்காற்று நிறுவனங்களும் மற்ற அமைப்புகளும் எண்மமயமாக்கலில் முன்னிலை வகிக்க வேண்டும். தொழில்நுட்பங்கள் தவறான முறையில் பயன்படுத்தப்படாமல் இருப்பதை அவை உறுதிசெய்ய வேண்டும். இந்திய தொழிற்போட்டி ஆணையம் (சி.சி.ஐ) உள்ளிட்டவை தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் முன்னிலை வகிக்க வேண்டும்.. அன்றாட நடைமுறைகளை எளிமைப்படுத்துவதில் தொழில் நுட்பங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இணைய விவகாரங்களில் ஏற்படும் பிரச்சினையை விரைந்து சரிசெய்வதற்கான மனிதவளத்தை அனைத்து நிறுவனங்களும் பெற்றிருக்க வேண்டும். மாநிலங்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் சுமார் ரூ.4.46 லட்சம் கோடி நிதியை வழங்கி வருகிறது. அந்த நிதி செலவிடப்படும் முறையை அறிந்துகொள்வதற்காக ஒற்றை தலைமை மைய (எஸ்.என்.ஏ) வலைதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது..அந்த வலைதளம் நிதி நிர்வாகத்தை மேம்படுத்துவதோடு வெளிப்படைத் தன்மையையும் அதிகரிக்கும்” என்றார்.

நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பு, வட்டி விகித உயர்வு உள்ளிட்டவற்றின் காரணமாக அந்நிய முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளைத் திரும்பப் பெறுவது அதிகரித்து வருகிறது. அதேவேளையில், கடந்த மார்ச்சில் பங்கு வர்த்தகத்துக்கான ‘டிமேட்’ கணக்கு வைத்திருப்போரின் எண்ணிக்கை 6 கோடியை எட்டியதாக மத்திய டெபாசிட்டரி சர்வீசஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.