பாவங்கள் நீக்கும் ஶ்ரீ வானமுட்டி பெருமாள்…

ஸ்ரீ தேவி பூமி தேவி சமேத ஒரே அத்தி மரத்தினாலான ஸ்ரீ சீனிவாச பெருமாள்

மூலவர்: ஶ்ரீ வானமுட்டி பெருமாள் 14 அடி உயர அத்திமரத்தாலானவர். மூலிகை வர்ணங்களால் அஜந்தா வர்ணம் தீட்டப்பட்டுள்ளது. வேரே திருவடியை தாங்கி நிற்கும் அதிசயம்.

திருநாமம்: ஶ்ரீ பக்தப்ரியன், வரதராஜன்.

முக்கியத்துவம்: பிதுர் தோஷம், ஹத்தி தோஷம், சனி தோஷம் நிவர்த்தி ஸ்தலம். பிப்பல மகரிஷிக்கு தோஷம் நீக்கிய ஸ்தலம். ஆஞ்சநேயர் சன்னதியில் கலைகளில் வளம் பெற சங்கீதம், நாட்டியம், நடிகர்கள் தரிசித்து மகிழ்கிறார்கள். மூலவரின் திருமார்பிலேயே உள்ள தாயார் திருநாமம் ஶ்ரீ தயாலக்ஷ்மி, பூமாதேவி (சிலா ரூபம்).

உற்சவர்: ஶ்ரீதேவி பூமிதேவி ஸமேத ஶ்ரீ ஶ்ரீநிவாச பெருமாள்

விமானம்: சந்திர விமானம் (குடை போன்ற அமைப்புடையது).

தீர்த்தம்: விஸ்வ புஷ்கரணி.

ஸ்தல விருஷம்: அத்திமரம்.

காட்சி கண்டவர்: பிப்பல மஹரிஷி,அரசன் ஒருவர்.

ஆகமம்: ஶ்ரீ வைகானஸம்.

கோழிகுத்தி, இதன் இயற்பெயர் கோடிஹத்தி பாப விமோசனபுரம். பிப்பலர் என்ற மகரிஷி சரும நோயால் பாதிக்கப்பட்டபோது, எம்பெருமான் ஒருநாள் பிப்பலர் கனவில் காட்சியளித்தார். போன ஜென்மத்தில் நீ ஒரு அரசனாக இருந்து ஹத்தி (கொலை) செய்து இருக்கிறாய். அதன் பலனாகத்தான் இந்த சரும நோய் உன் உடலில் வந்துள்ளது. அந்த பாபதோஷம் நீங்க காவிரி கரையோரம் உன் யாத்திரை தொடங்கு. மூவலூரில் எழுந்தருளியிருக்கும் ஶ்ரீ மார்க்க ஸகாயேஸ்வரர் உனக்கு வழிகாட்டுவார். அதன் பின் சரும நோய் நீங்கி பொன்னுடல் பெறுவாய் என்று அருளினார்.

அதன்படி பிப்பலர் தனது யாத்திரையை தொடங்கி ஶ்ரீ மார்க்க ஸகாயேஸ்வரரை வழிபட்டார். மனம் மகிழ்ந்த ஈஸ்வரன் வடக்கு நோக்கி வழி காட்டினார். அங்கு காவிரி நதியில் நீராடி கோழிகுத்தி அடைந்தார். அங்கு உயர்ந்து வளர்ந்திருந்த ஒரு அத்திமரத்தில் ஶ்ரீமன் நாராயணன் விஸ்வரூப காட்சியளித்தார். சரும நோய் நீங்கப் பெற்றார்.

ஸமஸ்கிருதத்தில் ஹத்தி என்றால் கொலை என்று பொருள். நாம் நம்மை அறியாமல் ஒரு எறும்பை மிதித்து இறந்துவிட அந்த பாவம் உண்டாகிறது. பிப்பலரின் தோஷம் நீங்குவதற்கு மூவலூர் ஶ்ரீ மார்க்க ஸகாயேஸ்வரர் இந்த இடத்திற்கு போ என்று கோடிட்டு காட்டியதால் கோடிஹத்தி என்று வழங்கப்பட்டது. பிப்பலரின் கோடி தோஷங்கள் நீங்கியதாலும் கோடிஹத்தி பாப விமோசனபுரம் என்பார்கள். இதுவே மருவி கோழிகுத்தி ஆயிற்று. அதனால் இந்த தலத்தில் உள்ள பெருமாளை தரிசித்தால் நாம் அறிந்தும் அறியாமலும் செய்யும் எல்லா பாவங்களும் நீங்குகிறது.

காவிரிக் கரையில் பிப்பலர் தவம் செய்தார். இதையொட்டி ஓடும் காவிரி தீர்த்தத்தை பிப்பலர் மகரிஷி தீர்த்தம் என்று அழைக்கிறார்கள். இங்கு நீராடினால் பிணிகள் நீங்கும். பின்னாளில் இதனை கேள்விப்பட்ட சோழ அரசர், அவர் புரிந்துள்ள போர் மூலம் பலரை கொலை செய்த பாவம் போவதற்காக தவம் இருந்தார். அதன்பின் அதே அத்திமரக் கோலத்திலேயே இந்த அரசருக்கும் விஸ்வரூபம் காட்டி ஶ்ரீ வானமுட்டி பெருமாள் அருளினார். பின் தேர்ந்த சிற்பிகளைக் கொண்டு 14 அடி உயரத்தில் 4 கரங்களில் சங்கு,சக்கரம், கதை, அபயஹஸ்தம் ஆகியவற்றுடன் அதே அத்திமரத்தில் அஜந்தா வர்ணம் தீட்டி ஶ்ரீ வானமுட்டி பெருமாள் என்கின்ற ஶ்ரீ ஶ்ரீநிவாச பெருமாள் திருக்கோயிலை 1200 ஆண்டுகளுக்கு முன்பு 7 பிரகாரங்களுடன் அமைத்தார். தற்போது ஒரு பிரகாரம்தான் உள்ளது. தாயாருக்கென தனி சன்னதி இல்லை. பெருமாளின் வலது மார்பில் ஶ்ரீ தயாலெக்ஷ்மி  உள்ளார். இடதுபுறம் ஶ்ரீபூமிதேவி சிலை வடிவில் உள்ளார்.

மிகப்பெரிய அத்திமரமே பகவானாக மாறி இருப்பதால் வேரே திருவடிகளைத் தாங்கி நிற்கும் அதிசயத்தை உலகில் வேறு எங்கும் காண முடியாது. சோழ அரசரால் நிர்மாணிக்கப்பட்டதால் இந்த கிராமத்தின் பெயர் சோழன்பேட்டையானது.

இங்கு பிப்பலர் கடும்தவம் செய்து அருளிய காயத்ரி மந்திரம் சனிக்கிரக தோஷநிவர்த்திக்கு பரிகார ஸ்தலமாக உள்ளது என்பதை இங்கு உள்ள கல்வெட்டுகள் வெளிப்படுத்துகின்றன.

சனிப்ரிதி ஸ்லோகம்

ஓம் கோணஸ்த பிங்கலோ பப்ரு
கிருஷ்ணோ ரௌத்ராந்த கோயம்
சௌரீ – சனைச்ரோ மந்த பிப்பலா தேன ஸம்ஸ்துத
ஏதானி தச நாமானி பிராத ருத்தாய படேத்
சனைச்சர கிருதா பீட நகதாசித் பவிஸ்யதி

ஸ்லோகம்

லக்ஷ்மிபதே கமலநாப சுரேஷ விஷ்ணு
வைகுண்ட க்ருஷ்ண மதுசூதன ஶ்ரீ ஶ்ரீநிவாசா
ப்ரமண்ய கேசவ ஜனார்தன சக்ரபாணே
விஸ்வரூப விபோமமதேஷி கராவலம்பம்.