மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்திற்கு டில்லியில் குடியரசுத் தலைவரால் இன்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
இவ்விருதை கேப்டன் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் பெற்றுக் கொண்டார்.
விருதை பெற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “விருதை வாங்க கேப்டன் இல்லை என்பது மிகப்பெரிய வருத்தம். இருப்பினும் விஜயகாந்துக்கு மத்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷன் விருது வழங்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விருதை விஜயகாந்துக்கு நேரடியாக சமர்ப்பிக்கிறோம். இன்று இரவு அமைச்சர் அமித்ஷா வீட்டில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த விருந்தில் கலந்துகொள்ள உள்ளோம். தமிழ்சங்கத்தின் சார்பில் கேப்டனுக்கு நடைபெறவிருக்கும் பாராட்டு விழாவிலும் கலந்து கொள்ளவுள்ளோம்” என்றார்.
நடிகையும், நடன கலைஞரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வைஜெயந்திமாலா பாலி மற்றும் நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு டில்லியில் இன்று குடியரசுத் தலைவரால் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.