பாரீஸ் ஒலிம்பிக் போட்டி: வெண்கலப்பதக்கம் வென்ற அமன் ஷெராவத்

பாரீசில் நடந்து வரும் 33-வது ஒலிம்பிக் விளையாட்டு இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. இதில் மல்யுத்தத்தில் ஆண்களுக்கான 57 கிலோ எடைபிரிவில், வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் அமன் ஷெராவத், பியூர்டோரிகோ வீரர் டேரியன் குருசை சந்தித்தார்.எதிராளியின் பலம், பலவீனத்தை நன்கு அறிந்து அதற்கு ஏற்ப அமன் ஷெராவத் செயல்பட்டார். அவ்வளவு எளிதில் ‘கால்பிடி’ யில் சிக்காத டேரியன் குருசை எல்லைக்கோட்டுக்கு வெளியே தள்ளிவிட்டே 7 புள்ளிகளை சேர்த்தார். இதனால் முன்னிலை பெற்று உத்வேகம் அடைந்த அமன், கடைசி கட்டத்தில் டேரியனின் காலை வசமாக பிடித்து மடக்கி மேலும் புள்ளிகளை திரட்டினார்.

முடிவில் அமன் ஷெராவத் 13-5 என்ற புள்ளி கணக்கில் டேரியனை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை தனதாக்கினார். தனது அறிமுக ஒலிம்பிக்கிலேயே பதக்கத்தை கையில் ஏந்திய 21 வயதான அமன் ஷெராவத் அரியானாவைச் சேர்ந்தவர். இந்த பதக்கத்தை தனது பெற்றோருக்கு அர்ப்பணிப்பதாக கூறினார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, அரியானா முதல்-மந்திரி நயாப் சிங் சைனி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடப்பு ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த 6-வது பதக்கம் இதுவாகும். ஏற்கனவே துப்பாக்கி சுடுதலில் 3 வெண்கலமும், ஆக்கியில் ஒரு வெண்கலமும், ஈட்டி எறிதலில் ஒரு வெள்ளிப்பதக்கமும் இந்தியா கைப்பற்றியுள்ளது.