TET தேர்வில் தேர்ச்சியே கம்மியா..?

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய, தகுதித் தேர்வு தாள் இரண்டில் 10 சதவீதத்துக்கும் குறைவான ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2022ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாள் தேர்வு கடந்தாண்டு அக்டோபரில் நடைபெற்றது. 1,53,000 பேர் தேர்வெழுதிய நிலையில், 21,543 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 25 விழுக்காட்டுக்கும் கீழாக இருந்தது.
இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் இரண்டுக்கான கணினி வழித்தேர்வு, கடந்த பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி வரை நடைபெற்றது. 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் பங்கேற்க 4 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், 2,54,000 பேர் மட்டுமே தேர்வெழுதினர். தேர்வர்களின் சொந்த மாவட்டங்களை விட்டு பிற மாவட்டங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததால், சுமார் ஒன்றரை லட்சம் பேர் தேர்வு எழுதவில்லை.

இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் இரண்டுக்கான முடிவுகளில் 20 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, 10 சதவீதத்திற்கும் குறைவானவர்களே தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் வெளியிடவில்லை.